தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தை
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அந்த சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே ஒரு ஈ வாழ்ந்து வந்தது. அந்த ஈ, "நான் சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே வாழ்ந்திருப்பதால்தான், சிங்கம் இவ்வளவு வீரமாக இருக்கிறது. நான் இருப்பதால்தான் சிங்கம் நன்றாக வேட்டையாடி பசி இல்லாமல் இருக்கிறது. இந்த சிங்கத்தின் வாழ்விற்கே நான்தான் காரணம். நான் இல்லாவிட்டால், சிங்கத்தால் எதுவுமே செய்யமுடியாது' என்று நினைத்துக் கொண்டிருந்தது.
ஒரு நாள், தலை அரித்ததால் ஒரு சிறு மரத்தில் தலையை உரசிக்கொண்டது சிங்கம். ஈ இதை எதிர்பார்க்காததால், மரத்திற்கும் சிங்கத்தின் தலைக்குமிடையே சிக்கி சற்று அழுந்திவிட்டது. மிகவும் கோபம் வந்துவிட்டது ஈ-க்கு. அது பறந்து சிங்கத்தின் முன்னால் வந்து கேட்டது:
""ஏய்... சிங்கமே! உனக்கு என்ன அறிவு கெட்டுப் போய்விட்டதா? ஏன் தலையை மரத்தில் உரசி, உன் பிடரியில் வசிக்கும் எனக்குத் தொந்தரவு செய்கிறாய்? இதோ, நான் உன்னைவிட்டு இப்போதே போகிறேன்! என்னை இழந்து நீ துன்பப்பட்டால்தான் உனக்கு என் அருமை புரியும்.''
சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அது மீண்டும் மரத்தில் தலையை உரசியது. அப்போது, மரம் அசைந்து சருகுகள் உதிர்ந்தன. இதைப் பார்த்துக் கத்தியது ஈ:
""அட... முட்டாள் சிங்கமே, பார்! நான் உன்னைவிட்டுப் போகிறேன் என்று சொன்னவுடனே, காற்றடித்து சருகுகள் உன் மீது உதிர்கின்றன. இனி வரக்கூடிய துன்பங்களையெல்லாம் நன்றாக அனுபவி! இனிமேல் நான் உனக்கு உதவி செய்யமாட்டேன்.''
பிறகு ஈ பறந்து சென்றது.
""இந்த ஈ இவ்வளவு காலம் என் பிடரியில் இருந்தது என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது'' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது சிங்கம்.
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்பவர்கள் இந்த ஈக்களைப் போன்றவர்கள்தான். எத்தனையோ அறிஞர்களும், மகான்களும், பேராற்றல் மிக்கவர்களும் வந்து சென்ற இடம் இந்த உலகம். அந்த நினைவும், பணிவும் நமக்கு வேண்டும்.
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தை
Reviewed by haru
on
April 03, 2012
Rating:
No comments