நன்றி மறந்த முதலாளி!
நன்றி மறந்த முதலாளி!
செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த செல்வந்தன் ஒருவன் பல ஊர்களுக்கு வணிகம் செய்வதற்காகச் செல்ல வேண்டி இருந்தது. இதற்காக விலை உயர்ந்த குதிரை ஒன்றையும் அவன் வாங்கி வைத்திருந்தான். அந்தக் குதிரை காற்றை விட வேகமாக ஓடக் கூடியது. அந்தக் குதிரையின் வேகத்திற்கு இணையாக எந்தக் குதிரையாலும் ஓட முடியவில்லை.
அவனும் அந்தக் குதிரையின் அருமை தெரிந்து அதை நல்ல முறையில் கவனித்து வந்தான்.
அந்த நகரத்தில் வாழ்ந்த அனைவருக்கும் அந்த குதிரையைப் பற்றியும் அதன் வேகத்தைப் பற்றியும் தெரிந்திருந்தது.
ஒரு முறை வணிக வேலையாக தொலைவிலிருந்த நகரத்துக்குக் குதிரையில் சென்ற அவன் தான் கொண்டு சென்ற பொருட்களை உடனுக்குடன் விற்று நிறைய பணம் சம்பாதித்தான். அந்தப் பணத்துடன் அந்த நகரத்தில் இருக்க விரும்பாத அவன் உடனே வீடு திரும்ப விரும்பினான்.
குதிரை சற்று கூட ஓய்வெடுக்க முடியாமல் களைத்துப் போயிருந்தது.
வணிகனும் உடனே திரும்ப வேண்டி வந்ததால், குதிரையை மெதுவாக ஓட்டிச் செல்வோம் என்று அந்தக் குதிரையின் மேல் அமர்ந்தான்.
காட்டு வழியாக குதிரையில் வந்து கொண்டிருந்த அவனை குதிரையோடு வழிப்பறித் திருடர்கள் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள்.
முதலாளியைக் காப்பாற்ற விரும்பிய அந்தக் குதிரை திருடர்களைக் காலால் உதைத்துத் தள்ளியபடி முன்னால் ஓடத் துவங்கியது. திருடர்களும் குதிரையைத் தாக்கத் துவங்கினார்கள். குதிரையின் உடலெங்கும் காயம் ஏற்பட்டது.
அந்தக் காயத்தைப் பொருட்படுத்தாத குதிரை தன் முதலாளியைக் காப்பாற்றும் நோக்கத்தில் வேகமாக ஓடத் துவங்கியது.
திருடர்கள் வந்த குதிரையால் இந்தக் குதிரையின் வேகத்தைப் பிடிக்க முடியவில்லை.
குதிரை தன் முதலாளியை வீட்டில் கொண்டு வந்து சேர்த்ததுடன் வாயில் நுரை தள்ளியவாறு அப்படியே மயங்கி விழுந்தது.
தன் உயிரையும் பொருளையும் காப்பாற்றித் தந்த அந்தக் குதிரையை நன்றியோடு பார்த்த முதலாளி வீட்டுக்குள் சென்றான்.
அங்கிருந்த பணியாட்கள் அந்தக் குதிரையின் மயக்கத்தைத் தெளிவித்தார்கள். அதற்கு உணவு அளித்தார்கள்.
அதன் உடலெங்கும் ஏற்பட்ட காயம் ஆறப் பல நாட்கள் ஆகியது. அந்தக் குதிரை நலமடைந்து விட்டாலும் அதனால் முன் போல் வேகமாக ஓட முடியவில்லை. நொண்டியபடியே நடந்தது.
பயனற்ற அந்தக் குதிரையைச் செல்வந்தன் கவனிக்கவில்லை. அதன் கண்களும் பார்வை இழக்கத் துவங்கின. அதன் நிலை பரிதாபமாக ஆனது.
பயனற்ற குதிரையால் தேவையற்ற செலவு வருவதாக எண்ணிய அந்த செல்வந்தன், அந்தக் குதிரையை வீட்டை விட்டு விரட்டும்படி பணியாட்களுக்குக் கட்டளையிட்டான்.
பணியாட்களும் அந்தக் குதிரையை வெளியே தள்ளி கதவைத் தாழிட்டார்கள்.
பசியால் துடித்த அது நகரம் முழுவதும் அலையத் துவங்கியது.
அந்நகரத்தில் யாருக்காவது ஏதேனும் குறை ஏற்பட்டால் ஊர் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மணியை அடிப்பார்கள். உடனே அந்த ஊரின் முக்கியமான பெரியவர்கள் கூடி அவரின் குறையைத் தீர்த்து வைப்பார்கள். அது அந்த ஊரின் வழக்கமாக இருந்தது.
பசியுடன் வந்த குதிரை அந்த மணிக்காகக் கட்டப்பட்டிருந்த கயிற்றை வைக்கோல் என நினைத்துத் தின்பதற்காக அதைப் பிடித்து இழுத்தது.
மணியோசை கேட்டு வந்த அந்த நகரப் பெரியவர்கள் அந்தக் குதிரையைப் பார்த்தார்கள்.
எலும்பும் தோலுமாக இருந்த அந்தக் குதிரையைப் பார்த்த பெரியவர்கள் அது செல்வந்தனின் குதிரை என்பதையும் செல்வந்தனை திருடர்களிடமிருந்து காப்பாற்றிய குதிரை அது என்பதையும் அறிந்து செல்வந்தனை விசாரணைக்காக வரச் செய்தார்கள்.
அவனோ இந்தக் குதிரை பயனற்றது, அதனால் விரட்டி விட்டேன். என்மீது எந்தத் தவறுமில்லை என்று வாதிட்டான்.
இந்தக் குதிரை எவ்வளவு அருமையான குதிரை. எவ்வளவு வேகமாக ஓடியது. உன்னைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றியதால் தானே இது இப்படி ஆனது. உன் உயிரைக் காப்பாற்றிய இந்தக் குதிரையிடம் உமக்கு சிறிது கூட நன்றி இல்லையா?
இதற்கு நாள்தோறும் நல்ல உணவு அளித்துப் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு வாரமும் எங்களில் ஒருவர் வந்து இந்தக் குதிரையைப் பார்வையிடுவோம். இந்தக் குதிரைக்கு ஏதேனும் தவறு நேர்ந்தால் உமக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்.என்று தீர்ப்பு வழங்கினார்கள்.
தலை கவிழ்ந்த அந்த செல்வந்தன் அந்தக் குதிரையைத் தன் வீட்டிற்கு ஓட்டிச் சென்றான்.
நன்றி மறந்த முதலாளி!
Reviewed by haru
on
December 30, 2012
Rating:
Reviewed by haru
on
December 30, 2012
Rating:


No comments