அரசர் கதைகள் - உலகத்தின் மையப் பகுதி எது?
உலகத்தின் மையப் பகுதி எது?
முன்னொரு காலத்தில் சீனப் பேரரசர் ஒருவர், தன்னைவிட அறிவுடையவர் யாரும் இல்லை என்று நினைத்தார். அதை எல்லாருக்கும் தெரியப்படுத்த என்ன செய்வது என்று சிந்தித்தார். நல்ல வழி ஒன்று அவருக்குத் தோன்றியது.
பல நாடுகளில் இருந்தும் பத்தாயிரம் அறிஞர்களைத் தன் அரசவைக்கு வரவழைத்தார்.
அவர்களைப் பெருமையுடன் பார்த்தார் அவர்.
"அறிஞர் பெருமக்களே! உலகத்தின் மையப் பகுதி எங்கே உள்ளது சொல்லுங்கள்?'' என்று கேட்டார் அவர்.
யாருமே பதில் சொல்லவில்லை...
மகிழ்ச்சி அடைந்த அவர், முரசு அடிப்பவனை அழைத்தார்.
"உலகத்தின் மையப் பகுதி எது? சரியான விடை சொல்பவர்களுக்கு பத்தாயிரம் பொன் பரிசு. விடை தவறாக இருந்தால் தூக்குத் தண்டனை. இந்தச் செய்தியை நாடெங்கும் தெரிவி'' என்றார்.
அவனும் அப்படியே முரசு அடித்துத் தெரிவித்தான்.
நாட்டு மக்கள் எல்லாரும் இதைக் கேட்டனர். யாரும் விடை சொல்லும் முயற்சியில் இறங்கவில்லை, இந்த அறிவிப்பை வினு கேட்டான்.
"இந்த கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது என்று நினைத்த அரசரை எல்லார் முன்னிலையிலும் அவமானப் படுத்த வேண்டும்" என்று நினைத்தான்.
தன் கழுதையில் அமர்ந்த அவன் அரண்மனைக்குள் செல்ல முயன்றான்.
அங்கிருந்த காவலர்கள் அவனைத் தடுத்து நிறுத்தினர்.
"யாரும் கழுதையுடன் உள்ளே செல்லக் கூடாது,'' என்றனர்.
"இந்தக் கழுதை இருந்தால்தான் என்னால் பேரரசரின் கேள்விக்கு விடை தர முடியும். இதையும் உள்ளே அனுமதியுங்கள்,'' என்றான் வினு.
பேரரசரிடம் சென்ற அவர்கள் நடந்ததைச் சொன்னார்கள்.
"கழுதையுடன் அவனை உள்ளே அனுப்பு,'' என்றார் அரசர்.
கழுதையை இழுத்துக் கொண்டு அரசவைக்குள் வந்தான் வினு.
அங்கிருந்த எல்லாரும் அவனை வியப்புடன் பார்த்தனர்.
பேரரசரைப் பணிவாக வணங்கி, "தங்கள் கேள்விக்குப் பதில் சொல்லிப் பரிசு பெற வந்துள்ளேன்,'' என்றான்.
"உலகத்தின் மையப் புள்ளி எங்கே உள்ளது?'' என்று கேட்டார் அரசர்.
"பேரரசே! என் கழுதையின் இடது முன்னங்கால் இப்போது எங்கே பதிந்து உள்ளது? அங்கேதான் உலகத்தின் மையப் புள்ளி உள்ளது. நான் உலகத்தை அளந்து பார்த்துவிட்டு வந்து தான் சொல்கிறேன். உங்களுக்கு ஐயம் இருந்தால், நீங்கள் உலகத்தின் நீள அகலத்தை அளந்து பாருங்கள். இதே இடம் தான் உலகத்தின் மையப் புள்ளி என்பது உங்களுக்கே தெரியும்'' என்றான் வினு.
"ம்...ம்...ம்... அப்படியா? உன்னை இன்னொரு கேள்வி கேட்கிறேன். வானத்தில் எத்தனை விண்மீன்கள் உள்ளன? சரியான எண்ணிக்கையைச் சொல்ல வேண்டும். எண்ணிக்கை குறையவும் கூடாது. அதிகமாகவும் கூடாது'' என்றார்.
"பேரரசே! என் கழுதையின் உடம்பில் எத்தனை முடி உள்ளதோ, அத்தனை விண்மீன்கள் வானத்தில் உள்ளன!''
"முட்டாள் தனமாகப் பேசாதே!''
"பேரரசே! நான் சொல்வதில் உங்களுக்கு ஐயம் இருந்தால், ஆட்களை வைத்து எண்ணுங்கள். இரண்டும் சரியாக இருக்கும். என் கணக்கில் தவறு இருந்தால், உயிரைவிடத் தயாராக இருக்கிறேன்'' என்றான் வினு.
கோபத்தில் பற்களை நற...நற... வென்று கடித்தார் அரசர்.
என்ன செய்வார் அவர். கடுகடுத்த முகத்துடன் அவனுக்குப் பத்தாயிரம் பொன்னைப் பரிசாகத் தந்தார்.
பத்தாயிரம் பொன்னை வாங்கிக் கொண்டு சந்தோஷமாக வீட்டுக்கு சென்றான் வினு.
அரசர் கதைகள் - உலகத்தின் மையப் பகுதி எது?
Reviewed by haru
on
December 12, 2012
Rating:
No comments