அரசர் கதைகள் - வீரச் செயல்!
அரசர் கதைகள் - வீரச் செயல்!
முன்னொரு காலத்தில் ரத்தினபுரி நாட்டை ஆண்டு வந்த அரசர், தன் மந்திரி வர்ணனிடம் பேசிக் கொண்டு இருந்தார். அவர்களின் பேச்சு அறிவுக்கூர்மை பற்றி இருந்தது.
"அறிவுக்கூர்மை உடையவர்களால் எதையும் செய்து முடிக்க முடியும். அவர்களால் செய்ய இயலாத செயலே இல்லை'' என்று கூறினான் மந்திரி.
அவன் கருத்தை அரசர் ஒப்புக் கொள்ளவில்லை.
"அரசே! செய்ய இயலாத செயல் ஒன்றைச் சொல்லுங்கள்... நான் அதைச் செய்து காட்டுகிறேன்'' என்றான் மந்திரி!
""மந்திரியே! நீ ஏதேனும் வீரச் செயல் செய்யப் போவதாகச் சொல்ல வேண்டும். அதற்காக மக்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதைச் செய்யாமல் அவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும். உன்னால் முடியுமா?'' என்றார் அரசர்.
"அரசே! மிக எளிய செயலைத்தான் சொல்லி இருக்கிறீர்!'' என்றான் மந்திரி.
"மந்திரியாரே! நீ நினைப்பது போல் இது எளிய செயல் அல்ல. வீரச் செயல் செய்வதாகச் சொல்லி, மக்களின் கூட்டத்தைக் கூட்டுவது எளிது. பிறகு அதைச் செய்யாவிட்டால், அந்தக் கூட்டம் உன்னைத் தப்பிக்க விடாது. நீ அவமானப்படத்தான் போகிறாய்'' என்றார்.
"அரசே! இதில் எனக்கு எந்த அவமானமும் ஏற்படாது. பொறுத்திருந்து பாருங்கள்'' என்ற மந்திரி அங்கிருந்து சென்றான்.
சில நாட்கள் சென்றன-
மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதைப் பார்த்தார் அரசர்.
மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதைப் பார்த்தார் அரசர்.
வியப்படைந்த அவர் தன் வேலையாட்களிடம், "மக்கள் கூட்டமாக எங்கே செல்கின்றனர்?'' என்று கேட்டார்.
"அரசே! எல்லோரும் கோயிலை நோக்கிச் செல்கின்றனர். அங்கே கோபுரத்தின் உச்சியில் மந்திரி நின்று கொண்டிருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் கீழே குதிக்கப் போகிறேன் என்று கத்திக் கொண்டிருக்கிறார். அதை வேடிக்கை பார்க்கத்தான் எல்லாரும் சென்று கொண்டிருக்கின்றனர்'' என்றான்.
தான் வைத்த சோதனையின் முதல் பகுதியை செய்துவிட்டான். இதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கப் போகிறான்? அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது.
என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்க்க அவரும் அருகே சென்றார்.
கோபுரத்தின் உச்சியில் மந்திரி நின்றிருந்தான்.
"இன்னும் சிறிது நேரத்தில் கீழே குதிக்கப் போகிறேன். இப்படி யாரும் இதுவரை செய்தது இல்லை'' என்று கத்திக் கொண்டிருந்தான்.
அவன் குதிப்பதை வேடிக்கை பார்க்க நகர மக்கள் எல்லாரும் அங்கே வந்திருந்தனர்.
"நான் ஒன்று, இரண்டு என்று பத்து வரை எண்ணப் போகிறேன். பத்து என்று சொன்னதும், கீழே குதிக்கப் போகிறேன். நான் பேச்சு தவற மாட்டேன். என் வீரச் செயலைப் பார்க்கத்தான் போகிறீர்கள்'' என்ற அவன் ஒன்று, இரண்டு என்று எண்ணத் தொடங்கினான்.
என்ன நடக்கப் போகிறதோ என்று ஆர்வத்துடன் மக்கள் பார்த்துக் கொண்டிந்தனர்.
ஒன்று, இரண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தான் மந்திரி. அவன் கண்கள் கூட்டத்தில் யாரையோ தேடின... தான் தேடியவன் வந்திருப்பதை அறிந்து, தொடர்ந்து எண்ணத் தொடங்கினான்.
அவன் ஒன்பது என்று எண்ணினான்.
கூட்டத்திலிருந்து ஒரு குரல், "எண்ணுவதை நிறுத்தி விட்டுக் கீழே வாருங்கள்'' என்று கேட்டது.
யார் குரல் கொடுத்தது என்று எல்லாரும் பார்த்தனர்.
அங்கே மந்திரியின் மகன் கையில் ஒரு பாத்திரத்துடன் நின்றிருந்தான்.
உரத்த குரலில் அவன், "தந்தையே! உங்களுக்கு மிகவும் பிடித்தமான பணியாரம், அம்மா ஆசையாக உங்களுக்காகச் செய்தது. கீழே இறங்கி வந்து இதைச் சாப்பிடுங்கள். பிறகு குதியுங்கள் மீண்டும் இதைச் சாப்பிடுவீர்களோ, இல்லையோ... யார் கண்டது!'' என்றான்.
"எனக்கு மிகவும் பிடித்த பணியாரத்தை என் மகன் கொண்டு வந்திருக்கிறான். நீங்கள் அனுமதி தந்தால் அதைச் சாப்பிட்டு விட்டுப் பிறகு குதிக்கிறேன். நீங்கள் அனுமதி தருவீர்களா?'' என்று கேட்டான்
.
எல்லாரும் தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்தனர்.
எல்லாரும் தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்தனர்.
"பணியாரத்தைச் சாப்பிட்டு விட்டுக் கீழே குதி'' என்று அவர்களில் ஒருவர் குரல் கொடுத்தார்.
கீழே இறங்கி வந்தான் மந்திரி. தன் மகனின் கையிலிருந்த பாத்திரத்தை வாங்கினான். அதிலிருந்த பணியாரத்தைச் சுவைத்துச் சாப்பிட்டான். அப்படியே மயங்கி விழுந்தான்.
இதைப் பார்த்த கூட்டத்திலிருந்த சிலர், "அதிர்ச்சியில் மயக்கமாகி விட்டான்'' என்றனர்.
மற்றும் சிலர், "உயிர் தப்புவதற்காக மயக்கம் வந்தது போல நடிக்கிறான்'' என்றனர்.
அரண்மனை மருத்துவர் அங்கு வந்தார்.
மந்திரியை சோதித்த அவர், "உண்மையிலேயே மயக்கமாகி விட்டான். மயக்கம் தெளிய ஏழெட்டு மணி நேரம் ஆகும்'' என்றார்.
மந்திரியை, அவர் வீட்டிற்குத் தூக்கிச் சென்றனர்.
"ஐயோ! இப்படியாகி விட்டதே!'' என்று பேசிக் கொண்டே கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.
மறுநாள் அரசரைச் சந்தித்தான் மந்திரி.
"நீங்கள் சொன்னது போல வீரச் செயல் செய்வதாக பெரிய கூட்டத்தைக் கூட்டினேன். அவர்கள் எதிரிலேயே அந்தச் செயலைச் செய்யாமல் வந்து விட்டேன். எப்படி என் திறமை?'' என்று கேட்டான்.
"அப்போது உன் மகன் பணியாரங்களுடன் வரவில்லையானால் உன் நிலை, என்னவாகி இருக்கும்?'' என்று கேட்டார் அரசர்.
"அரசே! அந்தப் பணியாரங்களுக்குள் மயக்க மருந்து கலந்து எடுத்து வரச் சொன்னதே நான்தான். எல்லாம் என் திட்டப்படி நடந்தது'' என்றான் மந்திரி.
"அறிவுக்கூர்மை உள்ளவர்களை யாராலும் வெற்றி பெற முடியாது என்பதை உன் மூலம் புரிந்து கொண்டேன்'' என்று அவனைப் பாராட்டினார் அரசர்.
அரசர் கதைகள் - வீரச் செயல்!
Reviewed by haru
on
December 13, 2012
Rating:
No comments