Ads Below The Title

சிறுவர் கதைகள் - செங்கல் வீடு

செங்கல் வீடு! 

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் பன்றி ஒன்று வாழ்ந்து வந்தது. அது மூன்று குட்டிகளை ஈன்றது. அவை மூன்றும் அழகாக இருந்தன.
நடிட்கள் சென்றன. குட்டிகள் மூன்றும் வளர்ந்துவிட்டன.

"மகன்களே! நீங்கள் இனி உங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்க வேண்டும். இங்கிருந்து புறப்படுங்கள். உங்கள் திறமைக்கும், முயற்சிக்கும் ஏற்ப வளமாக வாழுங்கள்'' என்றது.

"அம்மா! நாங்கள் வருகிறோம்!'' என்று மூன்று குட்டிகளும் புறப்பட்டன. அவை வெகு தொலைவு நடந்தன. அப்போது வைக்கோல் போரைத் தலையில் சுமந்தபடி, ஒருவன் அவற்றின் எதிரில் வந்தான்.

அவனைப் பார்த்து முதலாவது பன்றிக்குட்டி "வைக்கோல் போரை எனக்குத் தா. நான் அதில் வீடு கட்டி இங்கேயே குடி இருக்கிறேன்'' என்றது.

அவனும் வைக்கோல் போரை அதனிடம் தந்தான். அதில் வீடு ஒன்றைக் கட்டிக் குடியேறியது முதலாவது குட்டி.

மற்ற இரண்டு பன்றிக்குட்டிகளும் அங்கிருந்து வெகு தொலைவு நடந்தன. அவற்றின் எதிரில் கீற்றுகளைச் சுமந்தபடி ஒருவன் வந்தான்.

அவனிடம் இருந்து இரண்டாவது பன்றிக்குட்டி, கீற்றுகளை வாங்கி, அங்கேயே குடிசை போட்டுத் தங்கியது.

மூன்றாவது பன்றிக்குட்டி அங்கிருந்து புறப்பட்டது. வெகு தொலைவு சென்றது. வண்டி நிறைய செங்கற்களுடன் ஒருவன் அதன் எதிரில் வந்தான்.
அவனிடம் செங்கற்களை வாங்கியது அது. உறுதியான வீடு ஒன்று கட்டியது. அதில் குடி இருக்கத் தொடங்கியது.

அந்தக் காட்டில் கொடிய ஓநாய் ஒன்று இருந்தது. உணவு தேடி அலைந்த அது வைக்கோல் குடிசையைப் பார்த்தது. உள்ளே பன்றிக்குட்டி இருப்பதைப் பார்த்து அதன் நாவில் எச்சில் ஊறியது.

கதவைத் தட்டிய அது, "பன்றிக்குட்டியே! குடிசைக்குள் வரலாமா?'' என்று கேட்டது.

ஓநாயைப் பார்த்துப் பன்றிக்குட்டி, "உன்னை நான் உள்ளே அனுமதிக்க மாட்டேன்'' என்றது.

"அனுமதிக்க மாட்டாயா? என் வாயினால் ஊதி இந்தக் குடிசையை பறக்கச் செய்வேன். என் வலிமை தெரியாமல் பிதற்றுகிறாயா?'' என்று மிரட்டியது ஓநாய்.

"உன்னால் முடியுமானால் செய்து கொள்'' என்றது பன்றி.

கோபத்தால் உறுமிய ஓநாய் தன் மூச்சை உள்ளுக்கு இழுத்தது. தன் வலிமையை கொண்டு காற்றை வெளியே ஊதியது. அந்த வைக்கோல் குடிசை அப்படியே பறந்து சென்றது.

என்ன செய்வது என்று தெரியாமல் நடுங்கியபடி நின்றது பன்றிக்குட்டி. அதன் மீது பாய்ந்த ஓநாய் அதை அப்படியே விழுங்கியது.

"வைக்கோல் குடிசையை வைத்து என்னிடம் தப்பிக்கப் பார்த்தாயா?" இப்போது நீ என் வயிற்றுக்குள்' என்று மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டே அங்கிருந்து சென்றது ஓநாய்.

அதன் கண்ணில் கீற்றுக் குடிசை பட்டது. அதற்குள்ளும் பன்றிக்குட்டி இருப்பதைப் பார்த்தது.

அந்தக் குடிசையின் கதவைத் தட்டியது அது.

"பன்றிக் குட்டியே! கதவைத் திற'' என்று அதட்டியது.
"நான் கதவைத் திறக்க மாட்டேன்! வேறு எங்காவது போ'' என்றது பன்றிக்குட்டி.

"உனக்கு அவ்வளவு திமிரா? உன்னை என்ன செய்கிறேன் பார். இந்தக் கீற்றுக் குடிசை என் வலிமையைத் தாங்குமா?'' என்று உறுமியது.

வேகமாகத் தன் மூச்சை இழுத்துக் குடிசையை நோக்கி ஊதியது. கீற்றுகள் பறந்து சென்றன. அந்தப் பன்றிக்குட்டியையும் விழுங்கியது.

இரண்டு பன்றிக்குட்டிகளையும் உண்ட அதனால் நடக்க முடிய வில்லை. தள்ளாடியபடியே நடந்தது.

செங்கலால் கட்டப்பட்ட வீடும் அதன் கண்ணில் பட்டது. அருகே சென்ற அது ஜன்னல் வழியாக உள்ளே பார்த்து, "ஆ! இங்கும் கொழுத்த பன்றிக்குட்டி ஒன்று உள்ளது'' என்று துள்ளிக் குதித்தது.

கதவைத் தட்டிய அது, "பன்றிக்குட்டியே! கதவைத் திற... நான் உள்ளே வர வேண்டும்'' என்று அதட்டியது.

"நான் கதவைக் திறக்க மாட்டேன்!'' என்றது அந்த பன்றிக்குட்டி.

"கதவைத் திறக்க மாட்டாயா? இப்படித்தான் உன் அண்ணன்களும் சொன்னார்கள். என் வாயினால் ஊதி அவர்கள் குடிசைகளைப் பறக்கச் செய்தேன். அவர்கள் இப்போது என் வயிற்றிற்குள். மரியாதையாகக் கதவைத் திற'' என்று மிரட்டியது அது.

"உன்னால் முடிந்ததைச் செய்துகொள். நான் கதவைத் திறக்க மாட்டேன்'' என்றது பன்றிக்குட்டி.

கோபம் கொண்ட ஓநாய் தன் வலிமை கொண்டு ஊதியது. ஆனால், அந்த வீடு சிறிதும் அசையவில்லை. மீண்டும் மீண்டும் மூச்சு வாங்கி வேகமாக ஊதியது. அப்போதும் அசையவில்லை.

ஊதி ஊதிக் களைப்பு அடைந்தது ஓநாய். வலிமை வாய்ந்த அந்த வீட்டை ஒன்றும் செய்ய முடியாது. முயற்சி செய்வதால் பயன் இல்லை என்பது அதற்குப் புரிந்தது.

பன்றிக்குட்டியை ஏமாற்ற சூழ்ச்சி ஒன்று அதற்குத் தோன்றியது.

இனிமையான குரலில் அது, "நண்பா! நீ பசியால் வாடுகிறாய். சுவையான முள்ளங்கி ஏராளமாக விளைந்து உள்ளது. என்னுடன் வந்தால் இருவரும் மகிழ்ச்சியாக உண்ணலாம்'' என்றது.

ஓநாயின் சூழ்ச்சி பன்றிக்குட்டிக்குப் புரிந்தது. "சுவையான முள்ளங்கியா? எங்கே விளைந்து உள்ளது? நாம் எப்போது அங்கே போகலாம்?'' என்று ஏதும் அறியாதது போலக் கேட்டது.

"முனியனின் நிலத்தில்தான் விளைந்து உள்ளது. நாளை காலையில் நாம் இருவரும் அங்கே போவோம்'' என்றது ஓநாய்.

"எத்தனை மணிக்கு நீ இங்கே வருவாய்?''

"காலை ஆறு மணிக்கு இங்கே இருப்பேன்'' என்று புறப்பட்டது ஓநாய்.

மறுநாள் காலையில் நான்கு மணிக்கு முனியனின் நிலத்தை அடைந்தது பன்றிக்குட்டி. அங்கிருந்த முள்ளங்கிகளைப் பறித்த அது வீட்டிற்குக் கொண்டு வந்தது.

ஆறு மணிக்கு அங்கு வந்தது ஓநாய். வீட்டுக் கதவு தாழிடப்பட்டு இருப்பதைப் பார்த்தது.

"பன்றிக் குட்டியே! நாம் புறப்படலாமா?'' என்று கேட்டது.

சிரித்த பன்றிக்குட்டி, "ஓநாயே! நான்கு மணிக்கே நான் சென்று முள்ளங்கிகளைப் பறித்து வந்து விட்டேன். ஆ! என்ன சுவை! நீ அங்கே போனால் ஒரு முள்ளங்கியும் கிடைக்காது'' என்றது.

இந்தப் பன்றிக்குட்டி என்னை ஏமாற்றி விட்டதே... இதை எப்படியும் கொன்று தின்ன வேண்டும்' என்ற வெறி அதற்கு ஏற்பட்டது.

அந்த வீட்டுச் சுவரில் வேகமாக மோதியது. சுவர் சிறிதும் அசையவில்லை. உடல் வலிதான் அதற்கு ஏற்பட்டது. "பன்றிக்குட்டியைச் கொல்ல வேறு சூழ்ச்சிதான் செய்ய வேண்டும்" என்று நினைத்தது.

"பன்றிக்குட்டியே சுவையான மாம்பழங்கள் ஒரு மரத்தில் பழுத்துத் தொங்குகின்றன. அப்படிப்பட்ட பழங்களை நீ சாப்பிட்டே இருக்க முடியாது'' என்று இனிமையாகப் பேசியது.

"ஓநாயே! அந்த மாமரம் எங்கே உள்ளது?

"பொன்னியின் தோட்டத்தில் உள்ளது. நாளை காலை ஆறு மணிக்கு இங்கு வருவேன். நாம் இருவரும் அங்கே சென்று மாம்பழங்களைச் சுவைத்து உண்ணலாம். இன்று போல என்னை ஏமாற்றிவிட கூடாது'' என்று புறப்பட்டது ஓநாய்.

மறுநாள் காலையில் மூன்று மணிக்கே எழுந்தது பன்றிக்குட்டி. "ஓநாயை இன்றும் ஏமாற்ற வேண்டும்" என்று நினைத்தது.

பொன்னியின் தோட்டத்தை அடைந்த அது மாமரத்தின் மேல் ஏறியது. மாம்பழங்களைப் பறித்துத் தின்றது. ஓநாயின் குரல் கேட்டுத் திகைப்புடன் கீழே பார்த்தது. அங்கே ஓநாய் நின்றிருந்தது.

"பன்றிக்குட்டியே! நீ இப்படி என்னை ஏமாற்றுவாய் என்பது தெரியும். அதனால்தான் முன்னரே இங்கு வந்தேன். இனி உன்னால் என்னிடம் இருந்த தப்ப முடியாது'' என்று மிரட்டியது.

"ஓநாயிடம் இருந்து தப்பிக்க ஏதேனும் வழி உள்ளதா?" என்று சிந்தித்தது பன்றிக்குட்டி. அறிவு நிறைந்த அதற்கு நல்ல வழி ஒன்று தோன்றியது.

"ஓநாயே! சுவையான மாம்பழங்களைப் பறித்து மடியில் வைத்துள்ளேன். உனக்கு சில பழங்களைப் போடுகிறேன். சாப்பிடுகிறாயா?''

"போடு! மாம்பழங்களைச் சாப்பிட்டு விட்டு, உன்னைச் சாப்பிடுகிறேன்'' என்றது ஓநாய்.

ஒவ்வொரு பழமாக எடுத்துச் சிறிது தொலைவில் எறிந்தது பன்றிக்குட்டி. அதன் சூழ்ச்சியை ஓநாய் அறியவில்லை. அங்கும் இங்கும் ஓடி பழத்தைத் தின்றது.

ஒரு பழத்தை வெகு தொலைவு தூக்கி எறிந்தது. அதை உண்பதற்காக ஓநாய் ஓடியது.

வாய்ப்பை எதிர்பார்த்திருந்த பன்றிக்குட்டி மரத்திலிருந்து குதித்தது. ஒரே ஓட்டமாக ஓடித் தன் வீட்டிற்குள் நுழைந்தது. கதவை தாழ்ப்பாள் போட்டது.

"ஐயோ! அந்தப் பன்றிக்குட்டி மீண்டும் என்னை ஏமாற்றி விட்டதே. இன்று என்ன நடந்தாலும் அதைக் கொல்லாமல் விடுவது இல்லை" என்று கோபத்தால் துடித்தது ஓநாய்.

பன்றிக்குட்டியின் வீட்டை அடைந்தது அது. வீட்டிற்குள் நுழைய ஏதேனும் வழி உள்ளதா என்று பார்த்தது. வீட்டின் மேலே இருந்த புகை போக்கி அதன் கண்ணில் பட்டது.

"புகை போக்கி வழியாக வீட்டிற்குள் குதிப்போம். அந்தப் பன்றிக்குட்டியால் தப்ப முடியாது" என்று நினைத்தது அது. வீட்டின் மேலே ஏறியது.

ஓநாய் எப்படியும் உள்ளே நுழைய முயற்சி செய்யும். புகை போக்கி வழியாக அது குதிக்கும் என்று எதிர்பார்த்தது பன்றிக்குட்டி. அடுப்பின் மேல் பெரிய தொட்டியை வைத்தது. அந்த தொட்டி நிறைய தண்ணீரை ஊற்றி அடுப்பில் தீ மூட்டியது. தண்ணீர் கொதிக்கத் தொடங்கியது.

அங்கே புகை போக்கி அருகே சென்றது ஓநாய். வீட்டிற்குள் நடப்பது எதுவும் அதற்குத் தெரியவில்லை.

புகை போக்கி வழியாகக் கீழே குதித்தது. கொதிக்கும் வெந்நீருக்குள் அப்படியே விழுந்தது. உடல் வெந்து துடிதுடித்து இறந்தது.

நன்கு வெந்து போன அதன் உடலை வெளியே எடுத்தது பன்றிக்குட்டி.

"என் அண்ணன்களைக் கொன்ற உன்னைப் பழி வாங்கி விட்டேன்'' என்று கூத்தாடியது பன்றி.

வலிமையான செங்கல் கட்டடத்திலேயே நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தது.
சிறுவர் கதைகள் - செங்கல் வீடு சிறுவர் கதைகள் - செங்கல் வீடு Reviewed by haru on December 20, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]