சிறுவர் கதைகள் - அறிவாளி
அறிவாளி!
விஜயபுரத்தை மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் பெயர் மதிவதனர். அவனுடைய அரசவையில் இருந்த மூத்த அமைச்சர்களில் ஒருவர் திடீரென மரணம் அடைந்தார். எனவே, அந்தப் பதவி காலியாகவே இருந்தது.
அதற்கு தகுதி வாய்ந்த இளைஞன் ஒருவனை நியமிக்க வேண்டும் என்று மன்னன் விரும்பினான். ஆயினும் அதை வெளிப்படையாகச் சொல்லாமல், மந்திரி சபையைக் கூட்டி, "நம்முடைய நாட்டில் மிகவும் அறிவாளியான இளைஞர்கள் உள்ளார்களா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதற்காக நாளை ஒரு போட்டிக்கு அறிவிப்பு செய்ய உள்ளேன். அறிவும், திறமையும் உள்ளவர்கள் கலந்து கொள்ளட்டும்!'' என்று தன் அபிப்ராயத்தைத் தெரிவித்தான்.
மந்திரிகள் அதற்கு சம்மதித்தனர்.
மறுநாள் தண்டோரா மூலம் அந்த அறிவிப்பு வெளியானது.
"நாட்டில் அறிவும், திறமையும் உள்ள இளைஞர்களுக்காக ஒரு போட்டி நடைபெறுகிறது. தங்கள் அறிவின் மேலும், திறமையின் மேலும் நம்பிக்கையுள்ளவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். கலந்து கொண்டு வெற்றி பெற்றால் அதற்குத் தக்க பலன்களை அடையலாம்'' என்று அறிவித்தான்.
மறுநாள் ஆர்வம் மிக்க இளைஞர்கள் பலர் ஒன்று கூடினர். என்ன போட்டியை அரசர் வைக்கப் போகிறார்? பொது அறிவுக் கேள்விக்கான விடைகளா, வலிமையைச் சோதிக்கும் போராட்டமான, புத்திக் கூர்மையை எடுத்துக் காட்டக் கூடிய விவேகமான விஷயங்களா? என்று தெரியாமலேயே இளைஞர்கள் கூடினர்.
"போட்டிக்கு வந்த போட்டியாளர்கள் மட்டும் தனியே பிரிந்து நிற்கட்டும்!' என்று மந்திரிகளில் ஒருவர் முழங்கினார்.
பதினைந்து வாலிபர்கள் மட்டும் கூட்டத்திலிருந்து பிரிந்து வந்தனர்.
அவர்களிடம் அரசன் பேசினான்.
அன்பார்ந்த இளைஞர்களே, இதோ எனக்கு அருகில் நிற்கக்கூடிய இந்த இரண்டு வீரர்களைப் பாருங்கள். இவர்களில் ஒருவன் உண்மையான வீரன்; மற்றொருவன் அவனைப் போன்ற போலி.
நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் இதில் அசல் வீரன் யார்? போலி வீரன் யார்?" என்று கண்டுபிடிக்க வேண்டியதே!
"இதற்காக நீங்கள் அவர்களுக்கு அருகே சென்று பார்க்கக் கூடாது. ஒரு அடி இடைவெளியில் நின்றுதான் பார்க்க வேண்டும். நீங்கள் உண்மையான வீரனைச் சோதிப்பதாகக் கூறிக் கொண்டு அவர்களைத் தொட முயற்சிப்பதோ, பொருட்களைத் தூக்கி எறிந்து காயமுண்டாகும்படி செய்வதோ கூடாது.
ஆனால், உங்களுக்கென்று ஒரு சலுகை தரப்பட்டுள்ளது. உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளுவதன் பொருட்டு வீரர்களைத் தொடாமல் ஏதாவது ஒரு பொருளைக் கொண்டு அறிய முயற்சிக்கலாம். அவ்வளவுதான் நிபந்தனைகள்!'' என்றார்.
"இளைஞர்களே இப்போது வீரர்களுக்கு ஓரடி இடைவெளியில் ஒவ்வொருவரும் வந்து முயற்சி செய்யலாம்!"
இளைஞர்கள் அந்த இரண்டு வீரர்களையும் தங்கள் கண்களாலேயே அளவெடுத்தனர்.
இருவரும் ஒரே நிறத்தில், உடைகள் அணிந்திருந்தனர். ஒரே மாதிரி ஆயுதங்களை ஏந்தி இருந்தனர். அவர்களின் மெல்லிய புன்முறுவல், கண்கள் எல்லாமே ஒன்றாகவே இருந்தன.
முதலாவது இளைஞன் முன்சென்று நின்றான். வீரர்களை உற்று நோக்கினான். அவனுக்கு யார் உண்மை, யார் போலி என்று தெரியவே இல்லை. தொங்கிய முகத்துடன் திரும்பினான்.
சிலர் கை தட்டி ஓசை எழுப்பிப் பார்த்தனர். சிலர் வீரன் முன்னால் வந்து நின்று அவனை மிரட்டும் தொனியில் குரல் எழுப்பினர். சிலர் நகைச்சுவையான விஷயங்களைக் கூறிச் சிரிக்க வைக்க முயன்றனர்.
வேறு சிலர் ஒரு வீரனின் கண்களைக் குறி வைத்து அவை அசைகின்றனவா இல்லையா என்று நோட்டமிட்டனர். ஆனால், இருவருமே நிலை குத்திய பார்வையுடன் காணப்பட்டனர். ஒருவனுக்கும் உண்மையைக் கண்டறியும் சக்தி இல்லை.
கடைசியாகப் பதினைந்தாவது இளைஞன் முன் வந்தான். அவன் நீண்ட நேரம் வீரர்கள் இருவரையும் தூரத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருப்பதால், தனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தவுடன் சிறிது நேரம் கூட வீணாக்காமல் அருகில் நின்றிருந்த அமைச்சர் ஒருவரிடம் கேட்டான்.
"மந்திரி அவர்களே, எனக்கு ஒரு தீப்பந்தம் தந்து உதவ வேண்டும்!'' என்றான்.
மந்திரி, மன்னனைப் பார்க்க, மன்னன் தலையசைத்தான். சிறிது நேரத்தில், அவனுக்கு ஒரு தீப்பந்தம் தரப்பட்டது. அவன் அந்தத் தீப்பந்தத்தைப் பெற்றுக் கொண்டவனாய், அந்த வீரர்களின் வலது பக்கத்துக்குச் சென்றான்.
மந்திரி, மன்னனைப் பார்க்க, மன்னன் தலையசைத்தான். சிறிது நேரத்தில், அவனுக்கு ஒரு தீப்பந்தம் தரப்பட்டது. அவன் அந்தத் தீப்பந்தத்தைப் பெற்றுக் கொண்டவனாய், அந்த வீரர்களின் வலது பக்கத்துக்குச் சென்றான்.
வீரர்களுக்கு ஓரடி இடைவெளியில் நின்று கொண்டான். பின் தனக்கு வலது பக்கம் உள்ள வீரனின் முன் அந்தத் தீப்பந்தத்தை நீட்டிப் பிடித்தான். அரண்மனை எங்கும் நிசப்தம் சூழ்ந்தது.
சிறிது நேரத்தில் அவன் நீட்டிய பக்கத்திலிருந்து வீரன் மெல்ல மெல்லக் கரைந்து உருக ஆரம்பித்தான். ஐந்து, பத்து நிமிடங்களுக்குள் அவன் தலை, தோல் ஆகியவை கருகி இரண்டு கைகளும் பிடிப்பற்றுக் கீழே விழுந்தன.
அந்த வீரன் மெழுகினால் செய்யப்பட்ட உருவப் பொம்மை என்று இப்போது அனைவருக்கும் புரிந்தது.
அந்த வீரன் மெழுகினால் செய்யப்பட்ட உருவப் பொம்மை என்று இப்போது அனைவருக்கும் புரிந்தது.
இப்போது இளைஞன் தீப்பந்தத்தை அணைத்துவிட்டு, "அரசே, நான் உருக்கிய வீரன் மெழுகுப் பொம்மையினால் செய்யப்பட்டவன். அருகில் எனக்கு இடது கைப்பக்கமாக நிற்கும் வீரன் உண்மையான மனிதன்!' என்று கூறினான்.
"சபாஷ்!" என்று பாராட்டினான் அரசன்.
"உன்னுடைய உற்று நோக்கும் திறன், சிந்திக்கும் தன்மை, நீ செயல்பட்ட விதம் ஆகியவை உன்னை அறிவாளி என்று ஏற்க வைத்துவிட்டது. நீயே இந்நாட்டு மந்திரிகளில் ஒருவன். இறந்த அமைச்சரின் பதவியை நிரப்ப வந்த தேர்ந்த அறிவாளி. வாழ்க நீ!" என்றான் மன்னன்.
சிறுவர் கதைகள் - அறிவாளி
Reviewed by haru
on
December 27, 2012
Rating:
No comments