Ads Below The Title

சிறுவர் கதைகள் - புள்ளிமான்!

புள்ளிமான்! 

ஒரு காட்டில் ஒரு புள்ளிமான், ஒரு சிறு முயல், ஒரு நரி மூன்றும் நண்பர்களாக இருந்தன. ஒரு சமயம் புள்ளிமானைப் பார்ப்பதற்காக, அதன் உறவினரான புள்ளிமான் ஒன்று வேறு காட்டிலிருந்து வந்து கொண்டிருந்தது.

அதைத் தற்செயலாகச் சிறுத்தை ஒன்று பார்த்தது. அதன் நாக்கில் நீர் ஊறியது. உடனே அது புள்ளிமானுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து சென்று, அது எதிர்பாராத சமயத்தில், அதை அடித்து வீழ்த்தி சுவைத்துத் தின்றது. இதை அக்காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மரங்கொத்திப் பறவை பார்த்தது. அது உடனே விரைந்து சென்று புள்ளிமானிடம் தகவல் கூறியது.

உன்னுடைய உறவுக்காரப் புள்ளிமான் சாவதற்குக் கொஞ்ச நேரம் முன்னால்தான் உன் பெயரை என்னிடம் கூறி, உன் இருப்பிடத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று வழி கேட்டது. நான் தான் சொல்லி அனுப்பினேன். ஆனால், உன்னுடைய எதிரியான அந்தச் சிறுத்தை இப்படிச் செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. அது உனக்கு மட்டுமல்ல, இங்குள்ள ஏனைய சின்னச் சின்ன விலங்குகளுக்கும் கூட தீமையே செய்து வருகிறது. அதை எப்படியாவது ஒழித்துக் கட்டும் வேலையைப் பார். இல்லாவிட்டால் உன் குடும்பத்தைக் கூட என்றாவது ஒரு நாள் கொன்று தின்று விடும்!'' என்று சொல்லி விட்டுப் பறந்தது.

மான் பெரிதும் கவலைப்பட்டுப் போயிற்று. அப்போது அதைப் பார்க்க முயலும், நரியும் வந்தது. மானின் சோகத்தைக் கண்டு, "என்ன நடந்தது?" என்று கேட்டன.

மான், மரங்கொத்திப்பறவை கூறியதைக் கவலையுடன் கூறியது.

அவ்வளவு பெரிய சிறுத்தையை நம்மால் எப்படித் தீர்த்துக் கட்ட முடியும்?'' என்று கேட்டது மான்.

நரி பலத்த யோசனையில் ஆழ்ந்தது. பிறகு “நான் சொல்கிறபடி செய். நாம் அனைவரும் நலமாக இருக்கலாம். அந்தச் சிறுத்தையையும் ஒழித்துக் கட்டலாம்!'' என்று கூறியது.

பின், மானின் காதோடு காதாக அந்த ரகசியத்தைக் கூறியது. மான் மகிழ்ந்தது. மறுநாள் சிறுத்தையை நரி சந்தித்தது.

சிறுத்தை அவர்களே நலமா?'' என்று நலம் விசாரித்தது.

நலத்துக்கு ஒரு குறையும் இல்லை. என்ன இந்தப் பக்கம்?'' என்று விசாரித்தது.

காதில் கேட்ட ஒரு விஷயத்தை உன்னிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். உனக்குப் பெரிய ஆபத்து காத்திருக்கிறது!'' என்றது நரி.

எனக்கா, ஆபத்தா? யாரிடமிருந்து? என்னை மிஞ்சியவன் இந்த காட்டிலிருக்கிறானா?'' என்று அலட்சியமாகச் சிரித்தது சிறுத்தை.

சரி, அப்படியானால் நான் வருகிறேன்'' என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தது நரி.

நில்... சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லி விட்டுப் போ!'' என்று கூறியது சிறுத்தை.

"புள்ளி மானைத் தேடி அதன் உறவுக்காரப் புள்ளிமான் ஒன்று நேற்று இங்கே வந்திருக்கிறது. வரும் போது மரங்கொத்திப் பறவை ஒன்றிடம் புள்ளிமானின் விலாசத்தைத் தந்து விசாரித்திருக்கிறது. அதுவும் விலாசத்தைச் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறது.

ஆனால், அது வரும் வழியிலே, நீ அதை மடக்கிக் கொன்று தின்று விட்டாய். ஆகையினால் புள்ளிமான்கள் உன் மேல் கோபமாக உள்ளன. அவை உன்னை அழித்தே தீர வேண்டும் என்று சதியாலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

நீயும் அசைவம், நானும் அசைவம் என்ற இனப்பற்றால் சொல்ல வந்தேன். நீயோ வர இருக்கும் ஆபத்தை அறியாமல் வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறாய். எனக்கென்ன சொல்லுவதைச் சொல்லி விட்டேன். இனி அடுத்துச் செய்ய வேண்டிய பொறுப்பு உன்னுடையது!'' என்றது நரி.

சிறுத்தை திடுக்கிட்டுப் போனது...

இவ்வளவு விவரத்தைச் சொன்ன நீ அவை எங்கே சதியாலோசனை நடத்துகின்றன என்பதையும் சொல்லேன்'' என்று கெஞ்சும் குரலில் கேட்டது.

நரி சிந்தனை செய்தது.

சரி என்னுடன் வா, நான் கூட்டிட்டுப் போகிறேன். ஆனால், நான்தான் காட்டிக் கொடுத்தேன் என்று நீ சொல்லி விடக்கூடாது'' என்ற நிபந்தனையுடன் அதை அழைத்துச் சென்றது.

காட்டின் நடுவில் ஒரு சின்னக் குன்றும், குகைப் பகுதியும் இருந்தன. அதன் முன்னிலையில் மைதானம் போன்ற மணல் பரப்பு இருந்தது. அந்தக் குகையின் வெளிப்பக்கம் பார்த்தவாறு புள்ளிமானும், புள்ளிமான் குடும்பமும் பேசிக் கொண்டிருந்தன.

போதாதற்குச் சிறு முயலும், அதன் குடும்பமும் இருந்தன. குகை முழுக்க மிருகங்கள் இருப்பது போன்ற சூழ்நிலை காணப்பட்டது.

நரி ஒரு ஓரத்தில் மறைந்து நின்று அக்காட்சியைக் காட்டியது.

சிறுத்தைக்கு நாவில் நீர் ஊறியது.

ஆஹா ஒரே நேரத்தில் எத்தனை மிருகங்கள். அத்தனையையும் அடித்துக் கொன்று விடுவேன். அத்துடன் ஒரு மாதத்துக்குச் சாப்பாட்டுக்குக் கவலையில்லை!'' என்று நினைத்து, சிறுத்தை பதுங்கிப் பதுங்கிச்சென்று மணல் பகுதிக்குள் நுழைந்தது. அது மணல் பகுதியில் பூனை போலத் துள்ளிக் குதித்ததுதான் தாமதம், மணல் நறநறவென விலக ஆரம்பித்தது.

சிறுத்தை அடி எடுத்து வைப்பதற்குள் அதன் இரண்டு கால்கள் மணலில் புதைந்தன. அது ஆபத்தான புதை மணல் நிறைந்த பகுதி என்பது தெரியாமல் அதற்குள் சென்று மாட்டிக் கொண்டது சிறுத்தை. அதிலிருந்து விடுபட பலமாகக் கால்களை உதறியது.

ம்ஹும்... மெல்ல மெல்ல சிறுத்தை உள்ளே சென்று மணலுக்குள் மூழ்கிப் போயிற்று. அதைக் கவனித்துக் கொண்டிருந்த விலங்குகள் வெற்றிக் கூச்சலிட்டன. பின் நரி காட்டிய வேறு வழியின் மூலமாக தங்கள் தங்கள் இருப்பிடத்தை அடைந்து ஆனந்தமாக இருந்தன.

நன்றி தினமலர்!
சிறுவர் கதைகள் - புள்ளிமான்! சிறுவர் கதைகள் - புள்ளிமான்! Reviewed by haru on March 14, 2013 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]