சிறுவர் கதைகள் - எறும்பு சாப்பிடுகிறது!
எறும்பு சாப்பிடுகிறது!
சித்தனூரில் இனிப்பு கடை ஒன்று இருந்தது. சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைக் கண்டால் பிடிக்காது. அவர்கள் மீது எரிந்து விழுவான். அவர்களால் ஏதேனும் வேலை ஆக வேண்டி இருந்தால் அவர்களை அழைப்பான்.
"இந்த வேலையை முடியுங்கள்; இனிப்பு தருகிறேன்" என்பான். அவர்கள் அதைச் செய்து முடித்ததும் இனிப்பு தர மாட்டான். மாறாக, அவர்களை விரட்டி விடுவான். இதனால், சிறுவர்களுக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது. நண்பகல் நேரத்தில், கடைக்குள் படுத்துத் தூங்குவான். சிறுவனாக இருந்த அவன் மகன், அப்போதுதான் கடையைப் பார்த்துக் கொள்வான்.
"ஒருமுறை அந்தக் கடைக்காரன் மண்பாண்டம் செய்பவர்களிடம் சென்றான். பலகாரங்கள் வைப்பதற்காக வாய் அகன்ற பானைகள் முப்பது செய்ய வேண்டும். எப்போது செய்து தருவீர்கள்?'' என்று கேட்டான்.
"ஒருமுறை அந்தக் கடைக்காரன் மண்பாண்டம் செய்பவர்களிடம் சென்றான். பலகாரங்கள் வைப்பதற்காக வாய் அகன்ற பானைகள் முப்பது செய்ய வேண்டும். எப்போது செய்து தருவீர்கள்?'' என்று கேட்டான்.
ஒரு வாரத்தில் தயாராகி விடும்'' என்றனர்.
குறிப்பிட்ட நாள் வந்தது. அந்தப் பானைகளைக் கடைக்குள் எடுத்து வர வேண்டுமே... என்ன செய்வது என்று சிந்தித்தான் கடைக்காரன். வழக்கம் போலச் சிறுவர்களை ஏமாற்றுவோம் என்று நினைத்தான்.
சிறுவர்களை அழைத்த அவன், "மண்பாண்டம் செய்பவர்களிடம் முப்பது பானைகள் உள்ளன. அவற்றைக் கவனமாக எடுத்து வர வேண்டும். எடுத்து வருகிறீர்களா?'' என்று கேட்டான்.
"அப்படி நாங்கள் எடுத்து வந்தால் எல்லாருக்கும் நிறைய இனிப்பு தருவீர்களா?'' என்று கேட்டான் அவர்களில் ஒருவன்.
"கொண்டு வாருங்கள். பிறகு பார்க்கலாம்'' என்றான் கடைக்காரன்.
நிறைய இனிப்பு கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் சிறுவர்கள்.
ஒவ்வொரு பானையாக அவர்கள் கடைக்குக் கொண்டு வந்தனர். எல்லாப் பானைகளும் வந்து சேர்ந்தன.
"எங்களுக்குத் தருவதாகச் சொன்ன இனிப்பைத் தாருங்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே செல்கிறோம்'' என்றனர் சிறுவர்கள்.
"நான் எப்போது உங்களுக்கு இனிப்பு தருவதாகச் சொன்னேன். நீங்கள் கேட்டதற்கு, கொண்டு வாருங்கள் பிறகு பார்க்கலாம் என்றுதானே சொன்னேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன். பிறகு பார்க்கலாம்'' என்று அவர்களை விரட்டினான் கடைக்காரன்.
தாங்கள் ஏமாந்து விட்டதை எண்ணிப் புலம்பியப்படியே அங்கிருந்து சென்றனர் சிறுவர்கள்.
அந்த வழியாக வந்த கோபால், "ஏன் அழுது கொண்டே செல்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
கோபால் மாமா! "அந்த இனிப்புக் கடைக்காரர் எங்களை ஏமாற்றிவிட்டார்'' என்று நடந்ததை எல்லாம் சிறுவர்கள் கூறினர்.
"கவலை வேண்டாம்! உங்களுக்குக் கிடைக்க வேண்டிய இனிப்பிற்கு அதிகமாகவே கொண்டு வருகிறேன். நீங்கள் யாரும் அந்தக் கடைக்குள் வரக் கூடாது. வெளியே நில்லுங்கள்'' என்ற கோபால் கடைக்குள் நுழைந்தார்.
அப்போது கடைக்காரனின் மகன்தான் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த அறைக்குள் கடைக்காரன் தூங்கிக் கொண்டிருந்தான்.
இவனை எளிதாக ஏமாற்றலாம் என்று நினைத்த கோபால், இனிப்புப் பாத்திரத்திற்குள் கையை விட்டான். இனிப்புகளை எடுத்துச் சாப்பிட்டான். இதைப் பார்த்த சிறுவன், "என்ன இனிப்பை எடுத்து சாப்பிடுகிறாய்? பணம் தராமல் எதையும் தொடக்கூடாது'' என்று கத்தினான்.
தம்பி! "உன் தந்தைக்கு என்னை நன்றாகத் தெரியும். நான் இப்படி இனிப்பை சாப்பிடுவதை அவர் பொருட்படுத்தமாட்டார். என் பெயர் எறும்பு. நீ வேண்டுமானால் அவரிடம் இனிப்பை நான் சாப்பிடுவதாகச் சொல். அவர் ஒன்றும் சொல்ல மாட்டார்'' என்றான் கோபால்.
அப்பா! "கடைக்குள் எறும்பு வந்துள்ளது. நான் சொல்லியும் கேளாமல் இனிப்பை எடுத்துச் சாப்பிடுகிறது'' என்று கத்தினான் சிறுவன்.
தூக்கம் கலைந்ததால், எரிச்சல் அடைந்த கடைக்காரன், மகனே! "எறும்பு வந்தால் விரட்டு... இல்லையேல் அதை அப்படியே விட்டுவிடு. எறும்பைச் சமாளிக்க உன்னால் முடியாதா?'' என்று கத்தினான்.
இதைக் கேட்ட கோபால் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். "இனிப்பு நிறைந்திருந்த ஒரு பாத்திரத்தைத் தூக்கினான். சிறுவர் களுக்கு வழங்க இதுபோதும்" என்று நினைத்து அங்கிருந்து புறப்பட்டான்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவன், அப்பா! "நிறைய இனிப்புகளை எறும்பு எடுத்துச் செல்கிறது. பணம் ஏதும் தர வில்லை'' என்று கத்தினான்.
இதைக் கேட்ட கடைக்காரன் கோபம் கொண்டான்.
என் தூக்கத்தைக் கெடுக்காதே என்று எத்தனை முறை சொல்வது? நான் எழுந்து வந்தால் உன் தோலை உரித்து விடுவேன். "எறும்பு இனிப்பை எடுத்துச் செல்வதற்காக, யாராவது கவலைப்படுவார்களா? போனால் போகட்டும் எவ்வளவு இனிப்பை எடுத்துச் சென்றுவிடப் போகிறது. பேசாமல் இரு'' என்று கத்தினான்.
இனிப்புப் பாத்திரத்துடன் வெளியே வந்தான் கோபால். அங்கிருந்த சிறுவர்களுக்கு ஒன்றுக்கு இரண்டாக இனிப்புகளைத் தந்தான். அவர்களும் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டனர்.
"உங்களை ஏமாற்ற முயன்ற கடைக்காரனை நன்றாக ஏமாற்றி விட்டேன்'' என்ற கோபால் அங்கிருந்து புறப்பட்டான்.
தூக்கம் கலைந்து எழுந்த கிழவன், விஷயம் அறிந்ததும் குய்யோ, முய்யோ என கத்தினான். யார் அந்த எறும்பு என்று தெரியாமல் நொந்து போனான்.
நன்றி தினமலர்!
சிறுவர் கதைகள் - எறும்பு சாப்பிடுகிறது!
Reviewed by haru
on
March 29, 2013
Rating:
No comments