Ads Below The Title

அரசர் கதைகள் - ஆமையும் அழகிய பெண்ணும்!

ஆமையும் அழகிய பெண்ணும்!

ஓரு காலத்தில் நைஜீரிய தேசத்தை ஓர் அரசன் மிகுந்த ஆளுமையுடன் ஆண்டு வந்தான்.

குடிமக்கள் மட்டுமல்ல, விலங்குகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தான். அவனுக்கு எக்பன்யான் என்ற மகன் இருந்தான். அவன் ஒரு நிலையில்லாத சிந்தனை உள்ளவன். அவனுக்கு நிறைய மனைவிகள் இருந்தும் யாரையும் விரும்பாமலும் நேசிக்காமலும் இருந்தான். அதனால் மன்னன், மகனின் கண்ணில் படும் அழகான பெண்களையெல்லாம் அவனுக்கு மனைவியாக்கி வைத்தான். பெண்ணின் தாயோ, தந்தையோ சம்மதிக்கவில்லையென்றால் அவர்களைக் கொன்று விடும் துர்க்குணம் கொண்டிருந்தான்.

அந்நாட்டில் மிகவும் புத்திசாலியான ஆமை ஒன்று இருந்தது. அந்த ஆமையின் மனைவியும், மகளும் மிகவும் அழகானவர்கள். மகள், இளவரசன் கண்ணில் பட்டுவிடாமல் இருக்க ஆமை, அவளைப் புதர்களில் ஒளிந்து இருக்க வைத்தது.

ஒருநாள் அந்த ஆமை, உணவுக்காக தனது வயலில் வேலை செய்வதற்காகத் தன் மனைவியுடன் சென்றிருந்தது.

அந்த நேரத்தில் பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த இளவரசன் ஒரு பறவையை நோக்கி அம்பைத் தொடுத்தான். அந்தப் பறவை பொத்தென்று புதர் அருகில் விழுந்தது. ஆமையின் மகள் அதைப் பார்த்து கலக்கம் அடைந்தாள். பறவையோ அவளின் அதீத அழகை ரசித்தபடி இருந்தது. அதை அவள் எடுத்து அன்புடன் தடவிக்கொண்டிருந்தாள். அப்போது பறவையைத் தேடி புதரின் அருகில் வந்த படைவீரன் ஒருவன், அழகின் உருவமாக இருந்த ஆமைப் பெண்ணைப் பார்த்து வியந்து போனான்.

அவன் ஓடிப் போய் இளவரசனிடம், அழகான பெண் ஒருத்தி புதருக்குள் ஒளிந்து இருக்கும் விஷயத்தைச் சொல்லி விட்டான்.

அதைக் கேட்ட இளவரசன் விரைந்து வந்து புதர் அருகில் சென்றான். அந்த அழகிய ஆமைப் பெண்ணை பார்த்ததும் அவனது கண்கள் விரிந்தன. அவன் வாழ்நாளில் அத்தகைய அழகிய பெண்ணைப் பார்த்ததேயில்லை. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்த கணமே அந்த பெண்ணைத் தனது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான். அந்த அழகியும் அவனை உற்றுநோக்கிக் கொண்டிருந்தாள்.

பிறகு அவளுடன் பேச்சுக் கொடுத்தான். அவளும் அவனுடன் பேச ஆரம்பித்தாள். வெகு நேரம் அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த அவன், அவள் அவனை ஏற்றுக் கொண்டு மனைவியாகத் தயார் என்று சொல்லும் வரை பேசிக் கொண்டிருந்தான். பின்னர் அரண்மனைக்குத் திரும்பினான். மன்னரான தனது தந்தையிடம் அந்த ஆமையின் மகளைச் சந்தித்தது பற்றிக் கூறாமல் மறைத்து விட்டான்.

மறுநாள் காலையில் ஆறு துணித் துண்டுகள், முன்னூறு மரத்துண்டுகளைப் பரிசாக ஆமையின் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அன்று பிற்பகலில், ஆமையின் வீட்டுக்குச் சென்ற இளவரசன் ஆமையிடம், தான் அந்தப் பெண்ணை மணக்க விரும்புவதாகவும் அவளுக்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருக்கத் தயார் என்றும் கூறினான். ஆனால் ஆமை மிகவும் பயந்தது. மன்னனுக்கு இந்த விஷயம் தெரிந்தால் தன்னை மட்டுமல்ல, மனைவி, மகள் என எல்லோரையும் கொன்று விடுவான் என்று பயத்தின் உச்சியில் சொன்னது.


ஆனால் இளவரசனான மன்னனின் மகனோ ஆமையிடம், அப்படி ஏதும் நடக்காமல் தன் பார்த்துக் கொள்வதாக சொல்லிச் சமாளித்தான். ஆமையும் அவனது வார்த்தையை நம்பியது. இளவரசனோ தன் தாயிடம் சென்று, ஆமை அழகி பற்றிக் கூறினான். அவருக்கும் அரசரின் பிடிவாத குணம் பற்றிய வெறுப்பு இருந்தது. அவர், அரசருக்குத் தெரியாமல் அந்த ஆமைக் குடும்பத்தின் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணைப் பார்க்க முடிவு செய்தார். உடை, உணவு வகைகள் மற்றும் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

தன் மகனான இளவரசன் திருமணம் செய்துகொள்ள விரும்பிய ஆமையின் மகளைப் பார்த்தார். தான் கொண்டு வந்திருந்த பொருட்களையும் கூடவே ஆலிவ் எண்ணெயையும் அந்த அழகிக்குப் பரிசளித்தார். அந்த ஆமையிடம், “”என் மகனே, உன் மகளை மணந்து கொள்வான், வேறு யாருக்கும் அவளை மணம் பேச வேண்டாம்”" என்று உறுதியாகக் கூறினாள். ஆமையும் அரசியிடம், அப்படியே தான் காத்திருப்பதாகவும் வேறு யாருக்கும் தனது அழகிய மகளை மணமுடித்துக் கொடுக்க மாட்டேன் எனவும் மறு உறுதி அளித்தது.

ஐந்து ஆண்டுகள், அரசி அந்த ஆமையையும் தன் மகனின் வருங்கால மனைவியான ஆமையின் அழகிய மகளையும் தொடர்ந்து சந்தித்து வந்தாள். அதெத் என்பது அந்த ஆமை அழகியின் பெயர். ஒரு நல்ல தருணத்தில் அவன் தன் தந்தையான மன்னரிடம் தான் ஆசைப்பட்ட ஆமை அழகி பற்றிச் சொன்னான். அதைக் கேட்டதும் மன்னன் கடும் கோபம் கொண்டான்.

உடனே மக்கள் அதிகம் கூடும் சந்தைப் பகுதிக்கு அந்த ஆமைக் குடும்பத்தினை இழுத்து வரும்படி தன் படைத் தளபதிக்குக் கட்டளை இட்டான். படைத் தளபதியும் தன் வீரர்கள் சிலருடன், ஆமைக் குடும்பத்தை இழுத்து வரப் புறப்பட்டுச் சென்றான்.

நாட்டின் மக்கள் எல்லோரும், அதற்குள் செய்தி அறிந்து சந்தைப் பகுதியில் கூட்டமாகச் சேர ஆரம்பித்து விட்டனர்.

இளவரசனோ இருதலைக் கொள்ளி எறும்பாகத் துடிக்க ஆரம்பித்தான்.

ஆமை அழகியையும் அதன் குடும்பத்தினரையும் நிச்சயம் கொன்று விடுவார்கள் என்று வருந்தத் தொடங்கினான்.

மன்னனோ எந்த விதச் சலனமும் காட்டாமல் இருந்தான்.

படைத் தளபதியும் வீரர்கள் சிலரும் ஆமைக் குடும்பத்தை இழுத்து வந்தனர்.

என்னே ஆச்சர்யம்!

ஆமை அழகியின் அழகு எல்லோரையும் மயங்கச் செய்வதாய் இருந்தது.

இப்படி ஓர் அழகி இந்த நாட்டில் இருந்தாளா என்று மக்கள் தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

சிலரோ, இந்த அழகிய பெண் இவ்வளவு நாள் எங்கே ஒளிந்திருந்தாள் என்று வாய் விட்டே, பலரும் கேட்கும்படிக் குரல் எழுப்பினர். அதில் பல குரல்கள் வயிற்று எரிச்சலாய் தெரித்து விழுந்தன.

மன்னன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.

கொடுமைக்கார மன்னனான அவன் தன் முன்னால், படைத் தளபதி கொண்டு வந்த நிறுத்திய ஆமையின் மகளைப் பார்த்தான். அவனுக்கும் ஆச்சர்யம் தொற்றிக் கொண்டது. அவன் வாழ்நாளில் அப்படி ஒரு அழகியை அவன் பார்த்ததில்லை. உலகத்திலேயே இவள் தான் சிறந்த அழகி என்பதில் கொஞ்சமும் ஐயம் இருக்காது என்பதை அவன் உணர்ந்தான். ஆனால் அவன் என்ன முடிவு எடுக்கப் போகிறான் என்பதைத் திகிலுடன் எதிர்நோக்கியவாறு இருந்தது ஆமைக் குடும்பம்.

இளவரசனுக்கும் பயமாகத்தான் இருந்தது.

மக்களோ மன்னன் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய ஆவலாய் இருந்தனர்.

மீண்டும் ஒரு முறை அந்த அழகிய பெண்ணைப் பார்த்த மன்னன், இவளை விட என் மகனுக்குப் பொருத்தமானவள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள், இவள்தான் என் மகனை மணக்கப் போகிறவள் என்று உரத்த குரலில் சொன்னான்.

தொடர்ந்து தன் அரசில் பாதியை ஆமைக்கு எழுதித் தருவதாகவும் மேலும் தன் பண்ணைகளையும் ஆமைக்கே அளிப்பதாகவும் அதைப் பராமரிக்க நூற்று ஒரு பெண்களை நியமிப்பதாகவும், இது தவிர முன்னூறு பெண்களை ஆமைக்கு அடிமைகளாக அளிப்பதாகவும் தெரிவித்தான்.

மக்கள் சந்தோஷம் அடைந்தனர். உடனேயே மன்னன் பெரிய விருந்து ஒன்றையும் அறிவித்தான். விருந்தில் பலவகை உணவுளும் பழங்களும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.

ஆமை தனக்கு அளிக்கப்பட்ட பகுதி நாட்டைத் திறம்பட ஆட்சி செய்தது.

நைஜீரிய நாட்டின் சிறுவர் இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது இந்தக் கதை. இது பல்வேறு வடிவங்களில் நாடு முழுக்க உலா வருகிறது. பல குழுக்கள் இதை பொம்மலாட்ட நிகழ்வுகளாகவும் நிகழ்த்தி வருகின்றன.

இந்தக் கதையின் மையக் கருத்தே, வறுமை நிரந்தரம் அல்ல என்று உரக்கச் சொல்வதுதான்.

நன்றி தினமணி! 

அரசர் கதைகள் - ஆமையும் அழகிய பெண்ணும்! அரசர் கதைகள் - ஆமையும் அழகிய பெண்ணும்! Reviewed by haru on May 27, 2013 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]