பார்வை ஒன்றே போதுமே | அறிவு கதைகள்

Ads Below The Title

ஒரு காட்டில் ஒரு துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது.

அந்த வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத்தோடு  கேட்டான்.

அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.

சிறிது நேரத்தில் மற்றொருவன் வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.

அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.

மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவன் "துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு வினவினான்.

உடனே துறவி, " மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.

மிகவும் வியந்து போனான் அரசன், " துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.

"அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."

முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார்.

அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தெரிந்தது.

ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்." என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி...!
பார்வை ஒன்றே போதுமே | அறிவு கதைகள் பார்வை ஒன்றே போதுமே | அறிவு கதைகள் Reviewed by haru on June 10, 2013 Rating: 5

No comments