சோழனின் பெருமை | மேற்பார்வையாளரின் ஆணவம் ஒழிந்தது | தமிழ் அறிவு கதைகள்

Ads Below The Title
தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது. சோழப் பேரரசர் ராஜராஜ சோழன் அந்தப் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.


ஒரு நாள், “கோயில் வேலை எப்படி நடைபெறுகிறது?” என்பதை அறிய விரும்பிய அவர், ஒரு வழிப்போக்கனைப் போல் மாறுவேடம் பூண்டு கோயில் பணி நடக்கும் இடத்துக்குச் சென்றார்.

அவரை அரசர் என்று எவரும் அறிந்து கொள்ளவில்லை.

அப்பொழுது ஒரு பெரிய பாறையைச் சுவரின் மேல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் பலர்ம் ஒன்று சேர்ந்து கயிறு போட்டு இழுத்தும் அந்தப் பாறை சிறிதும் நகரவில்லை. எல்லோரும் சோர்வு அடைந்தார்கள்.

அங்கிருந்த மேற்பார்வையாளரோ, “என்னை எல்லோரும் ஏமாற்றுகிறீர்கள். இந்தப் பாறையை மேலே ஏற்ற முடியவில்லையா?” என்று கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தான்.

அவனருகில் போன அரசர், “ஐயா! நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்யக் கூடாதா?” என்று கேட்டார்.

“நான் இங்கு மேற்பார்வையாளன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று ஆணவத்துடன் கேட்டான் அவன்.


“அப்படியா?” என்ற ராஜராஜசோழன் அங்கிருந்த வேலைக்காரர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்தார்.

ஒரு வழியாக பாறை மேலே போய்ச் சேர்ந்தது.

பெருஞ்செல்வந்தரைப் போலிருந்த அவர் வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்தது அந்த மேற்பார்வையாளனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மறுநாள் பேரரசரிடமிருந்து அந்த மேற்பார்வையாளருக்கு ஒரு ஓலை வந்தது.

அதில், “கோயில் திருப்பணிக்கு ஆட்கள் போதவில்லை என்றால் உடனே அரசருக்குச் சொல்லி அனுப்பவும். நேற்று வேலை செய்ததைப் போல் அவர் வந்து வேலை செய்வார்” என்று எழுதியிருந்தது.

இதைப் படித்த மேற்பார்வையாளருக்கு ஆணவம் ஒழிந்தது.

பின் அவனும் மற்ற வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்து அவர்களுக்கு ஊக்கமளித்தான்.
சோழனின் பெருமை | மேற்பார்வையாளரின் ஆணவம் ஒழிந்தது | தமிழ் அறிவு கதைகள் சோழனின் பெருமை | மேற்பார்வையாளரின் ஆணவம் ஒழிந்தது | தமிழ் அறிவு கதைகள் Reviewed by haru on July 03, 2013 Rating: 5

No comments