பூதம் - சிறுவர் கதைகள்
பூதம்
ஒரு விவசாயி ஒருநாள் குடும்பத்துடன் வெகுதூரத்தில் இருந்த நகரத்தை நோக்கிப் பயணமானார். இரண்டாம் நாள், உச்சி வேளைக்கு சாலை ஓரத்தில் இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் தங்கினர். அங்கே இரவு வரை தங்கி இளைப்பாறத் தீர்மானித்தனர்.
விவசாயி எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர். அவரால் சும்மா இருக்க முடியவில்லை. அதனால், ஓய்வு எடுக்கும் நேரத்தில் கயிறு திரிக்கலாமே என்று நினைத்தார். தன் மூத்த மகனை அனுப்பிக் கொஞ்சம் சணல் நார் வாங்கி வரச்சொன்னார். இரண்டாவது மகனை அனுப்பிக் காய்கறிகள் வாங்கி வரச்சொன்னார். மூன்றாவது மகனிடம் சமையலுக்கு மளிகைக் சாமான்கள் வாங்கி வரும்படிச் சொல்லி அனுப்பினார்.
மருமகள்களுக்கும் வேலை கொடுத்தார். மூத்த மருமகளை அனுப்பி, தண்ணீர் கொண்டு வரச்சொன்னார். அடுத்த மருமகளை அனுப்பி விறகு சேகரித்து வரச்சொன்னார். மூன்றாவது மருமகளை ரொட்டி சுட, மாவு பிசையும்படிச் சொன்னார். எல்லாரும் அவரவருக்குச் சொன்னபடி கொண்டு வந்ததும், மரத்தடியில் அமர்ந்து சணல் நாரைக் கொண்டு கயிறு திரிக்கத் தொடங்கினார்.
அந்த மரத்தில் ஒரு பூதம் வசித்து வந்தது. விவசாயி வந்து மரத்தடியில் அமர்ந்தது முதல், அது எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தது. இந்த ஆள் ஏன் இவ்வளவு பெரிய கயிற்றைத் திரிக்கிறான் என்று ஆச்சரியப்பட்டது. ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், கடைசியில் அது மரத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்தது. விவசாயியின் முன்னால் வந்து அதுபற்றி அவரிடம் கேட்டது.
பூதத்தைப் பார்த்ததும் விவசாயிக்குப் பயம் ஏற்பட்டது. ஆனால், அதை வெளிக் காட்டி கொள்ளவில்லை. வேலையில் கவனமாக இருப்பது போல் நடித்தார். பிறகு நிமிர்ந்து பார்த்து, “உன்னைக் கட்டுவதற்குத் தான்” என்றார்.
பூதத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது. பார்க்கப் பிரம்மாண்டமாக இருந்தாலும் அது மனதுக்குள் மிகவும் கோழை. எனவே, அது பயந்து போய் விவசாயியின் காலில் விழுந்து கருணை காட்டும்படி கெஞ்சியது.
“என்னை விட்டுவிடு. உன்னைப் பெரும் பணக்காரனாக ஆக்குகிறேன்” என்றது.
உடனே, பூமியைத் தோண்டி ஒரு பெரும் புதையலை எடுத்து அவருக்குத் தந்தது.
விவசாயிக்குத் தாங்கமுடியாத மகிழ்ச்சி. தனது பயணத்தைத் தொடராமல், பெரும் செல்வத்துடன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்.
விவசாயி பெரும் செல்வத்துடன் வீடு திரும்பியதைக் கேள்விப்பட்ட அவரது பக்கத்து வீட்டுக்காரர் விவரத்தைக் கேட்டறிந்தார். தானும் அந்த பூதத்திடமிருந்து பெரும் செல்வத்தைப் பெற்றுவரவேண்டும் என்று பேராசை கொண்டார். அவரும் தன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சென்று அதே ஆலமரத்தடியில் தங்கினார். தன் பிள்ளைகளுக்கும், மருமகள்களுக்கும் ஆளுக்கு ஒரு வேலை கொடுத்தார்.
ஆனால், அவரது மக்கள் சுத்த சோம்பேறிகள். அவர்கள் அந்த ஆலமரத்தின் குளுமையான நிழல் சுகத்தைத் துறக்க விரும்பவில்லை. அதனால் தந்தை சொன்ன வேலைகளைச் செய்ய மறுத்துவிட்டனர். மருமகள்களும் அவரை அலட்சியப்படுத்தினர். எனவே, எல்லா வேலைகளையும் அவரே செய்ய வேண்டியிருந்தது. பிறகு, சேகரித்து வந்த சணல் நாரைக் கொண்டு கயிறு திரிக்கத் தொடங்கினார். அவர் எதிர்பார்த்தபடியே, பூதம் மரத்திலிருந்து இறங்கி வந்தது.
அவர் முன்னால் வந்து, “இந்தக் கயிற்றை எதற்காகத் திரிக்கிறாய்?” என்று பூதம் கேட்டது.
“உன்னைக் கட்டுவதற்குத்தான்!” என்றார் அவர்.
பூதம் சிரித்தது. விவசாயிக்குப் பூதம் பயப்படாமல் சிரிப்பதைக் கண்டு குழப்பம் ஏற்பட்டது.
“ஆக, நீ பயப்படவில்லையா?” என்று கேட்டார்.
“நான் ஏன் பயப்பட வேண்டும்? உன் குடும்பமே உன்னைக் கண்டு பயப்படாத போது, நான் எதற்குப் பயப்பட வேண்டும்? இந்தக் கயிற்றைக் கொண்டு என்னைக் கட்டுவதை விட்டு, உன் மகன்களையும் மருமகள்களையும் கட்ட முயற்சி செய்!” என்று சொல்லிச் சிரித்துவிட்டு மீண்டும், மரத்தின் மீது ஏறிக் கொண்டது பூதம்.
தன் திட்டம் பலிக்காததை கண்ட பக்கத்து வீட்டுக்காரன், முதலில் தன் குடும்ப உறுப்பினர்களை சரி படுத்த எண்ணியபடியே ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
பூதம் - சிறுவர் கதைகள்
Reviewed by haru
on
September 19, 2013
Rating:
No comments