Ads Below The Title

Che Guevara History in Tamil | சே குவேரா வாழ்க்கை வரலாறு

Che Guevara (சே குவேரா) life history in Tamil (தமிழ்) with free PDF download. சேகுவேரா வாழ்க்கை வரலாறு (Biography) தமிழில்.

கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு முதல் மகனாக பிறக்கின்றார். அவர்கள் தங்களுக்கு பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து "ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா" என பெயர் சூட்டினர்.

அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. சேவிற்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம்.

சே’வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய், ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை அழைத்துச் சென்றார். நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராடவைக்க, ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின் நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, ஆஸ்துமா அவரை இறுகப்பற்றியது. வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார்.

இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். ஆடுகளத்தில் பின்னிருந்து ஆடும் தடுப்பாட்டக்காரனின் நிலையிலேயே பெரும்பாலும் விளையாடுவார்.. இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ரக்பியும் அவருக்குப் பிடித்தமான மற்றொரு விளையாட்டான சதுரங்கமும், எதிரிகளை வீழ்த்தும் தந்திரங்களைக் கொண்டு இருந்தது ஆச்சர்யமான ஒன்று. பிற்காலத்தில் போர்க்களத்துக்குத் தேவையான மன இயக்கத்தை, சிறுவயதிலிருந்தே அவருக்கே தெரியாமல் அவருக்கான சூழல்கள் உருவாக்கித் தந்திருக்கின்றன.

வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அப்போதே கவிதை எழுதுவதில் ஆர்வமுடையவராக இருந்தார். வளரிளம் பருவத்தில் பாப்லோ நெருடாவின் வார்த்தை அலைகள், ‘சே’வின் இதயத்தை மிகவும் பரவசப்படுத்தின. நெருடாவின் பெரும்பாலான கவிதைகளை மனப்பாடமாக ஒப்பிக்கும் அளவுக்கு ஈடுபாடு.

குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், கார்ல் மார்க்ஸ், போல்க்னர், வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர ஜவஹர்லால் நேரு, லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார். வசிப்பதோடு மட்டும் நின்று விடாமல் எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு அவரிடம் கனன்றுகொண்டு இருந்ததால், தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் தொகுப்பாக்கி, பின் பகுத்துப் பார்க்கும் தன்மையும் அவரிடம் இருந்தது. 

அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர் , அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார். 

 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்தி ருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும், அதற்குத் தங்களால் எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்ற தேடலுமே அந்தப் பயணத்துக்கான ஆரம்பம். 

பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடித் தேடிச்சென்று, அவர்களின் தோளில் கை போட்டு உண்டு, உறங்கி, கால் பந்தாடிய ‘சே’வின் உள்ளத்தில் பலவிதமான போராட்டங்கள் தொழு நோயாளர்களிடம் அவர் காட்டிய பரிவு மற்ற மனிதர்களிடம் இருந்து அவரை பிரித்துக் காட்டியது. 

இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” என்னும் தலைப்பில் உடன் பயணித்த கிரனாடோவால் எழுதப்பட்ட புத்தகம் உலகப் பிரபல்யம் பெற்றது இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

சேவின் வாழ்வை முழுவதுமாக புரட்டிப் போட்ட பயணம் அது. இதுவரையும் அவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்பு, நண்பர்கள், விளையாட்டு என அவரது உலகம் உல்லாசமாக இருந்தது. ஆனால் இந்த பயணம் அவருக்கு பல படிப்பினைகளை தந்தது. தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு, வர்க்க வேறுபாடுகளுக்குக் காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் வாஷிங்டனும் அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரண மாகக் கண்டறிந்தார். 

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக மார்க்க்சியம் (Marxism) அவர் சிந்தனையில் தோன்றியது. மார்க்சியம் என்றால் மார்க்சியம் என்பது கார்ல் மார்க்கஸ் போன்ற மேய்யியலாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை ஆகும். மார்க்சியம் என்பது கார்ல் மார்க்ஸ், மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் ஆய்வுகள், எழுத்துக்கள் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படும் உலகப்பார்வை ஆகும். மார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியமானது, இயங்கியல் பொருள் முதல்வாத கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும்.

மெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாக கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படை சித்தாந்தமாக அமைகிறது. இதனை பொது உடமை என்றும் வரையறுக்கின்றார்கள்.

இலகுவாக சொல்வது என்றால் சமவுடமை (சோசலிசம்) பொருளாதார நிர்வாகத்தில் கூடிய அரச பங்களிப்பை வலியுறுத்துகின்றது. முக்கிய துறைகள் அரசுடமையாக இருப்பதையும், சமத்துவத்துவை அல்லது சம வாய்ப்புக்களை நிலை நிறுத்தும் கொள்கைகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கை தர உயர்வுக்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது. மேலும், சோசலிச சிந்தனைகள் பொது நலம், கூட்டு செயற்பாடு ஆகிவற்றை முன்நிறுத்தி அமைகின்றன. பொதுவுடமை அல்லது கம்யூனிசம் வர்க்கமற்ற (பாகுபாடற்ற) சமுதாயத்தை அமைப்பதற்கு தேவையான கோட்பாடுகள் கொண்ட தத்துவம் ஆகும். ஏகாதிபத்திய, முதலாளித்துவ தத்துவங்களின் குறைபாடுகளுக்கான ஒரு தீர்வாகும்.

இந்தகொள்கை தொடர்பான அறிவு சேவிற்கு வரக் காரணம் நூல்கள் மட்டுமன்றி இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே மார்க்சியம் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது. 

இறுதியாக 1952, ஜூலை மாதம் அந்த பயணம் முடிவுக்கு வந்தபோது, ‘சே’ முழுவதுமாக மாறியிருந்தார். இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜென்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.

1953 ஜூலையில் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றதும் அங்கிருக்கப் பிடிக்காமல், மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.

அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்.

உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார். ஏற்கெனவே அவருக்குள் உருவாகியிருந்த அமெரிக்கா மீதான கோபத்தை குவேதமாலாவின் அரசியல் சூழல் அதிகப்படுத்தியது. குவேதமாலா கம்யூனிஸ்ட் ஆதரவு அரசைக்கவிழ்க்க, அமெரிக்கா தன் சி.ஐ.ஏ. மூலமாக தீவிரமாகச் செயல்பட்ட தருணம்.

குவாத்தாமாலா நகரில், ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவரையே பிற்காலத்தில் சே திருமணம் புரிந்தார் இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக்காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.

‘சே’, அங்கிருந்த கம்யூனிஸ்ட்களுடன் தன்னை இணைத் துக்கொண்டு, அமெரிக்காவுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால், அமெரிக்கா தனது எண்ணத்தைச் சுலபமாக நிறை வேற்றி ஜேக்கப் அர்பான்சோ அரசைக் கவிழ்த்தது. 

1954ம் ஆண்டு ஜூன் மாதம் குவாத்தாமாலாவை முற்றுகையிடும்போது தப்பியோடும் நிலை ஏற்பட்டு மெக்ஸிகோவில் தஞ்சம் புகுந்தவர் நாடு கடத்தப்பட்ட கியூபா மக்களைச் சந்தித்தார். இக்காலகட்டங்களில் கம்யூனிஸ்ட்களிடம் நெருங்கிப் பழகிய ‘சே’, மார்க்ஸிய லெனினியப் பாதை தான் தனது பாதை என்பதை உணர்ந்தார். அது குறித்த ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார்.

விவசாயிகளிடம் குவேதமாலா அரசு, ஆயுதங்களைக் கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபடச் செய்திருந்தால் அமெரிக்காவின் சதியை முறியடித்திருக்கலாம் எனும் பார்வையில், ‘சே’ கட்டுரைகள் எழுதினார். இதனால் சி.ஐ.ஏவின் பார்வைக்கு இலக்கானார். பாதுகாப்புக்காக அர்ஜென்டினா தூதரகத்தில் தங்கநேரிட்டது.

இச்சமயத்தில், அவரது எண்ணங்களால் ஒரு கியூபா போராளி வசீகரிக்கப்பட்டார். அவர் பெயர் நிக்கோ லோபஸ். கியூபாவின் ஜனாதிபதியாக இருந்த பாடிஸ்ட்டாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் ஒரு புரட்சி ஏற்படுத்திய ‘ஜூலை 26’ எனும் இயக்கம் அப்போதுதான் தோல்வியைச் சந்தித்திருந்தது.

1953ம் ஆண்டு இதே நாள் கியூபாவில் கொடுங்கோல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த பாடிஸ்டா தலைமையிலான அரசைத் தூக்கி எறிவதற்காக புரட்சிக்குத் தேவையான ஆயுதங்களைப் பெறுவதற்காக பிடல் அவரது சகோதரர் ரால் காஸ்ட்ரோ உள்ளிட்ட 120 வீரர்கள் சாண்டியாகோ கியூபாவில் அமைந்திருந்த மொன்காடா இராணுவத் தளத்தை தாக்குவதற்கு திட்டம் தீட்டினர். 

1953ம் ஆண்டு ஜூலை 26 அதிகாலை 6.00 மணி பிடல் அவரது சகோதரர் ரால் காஸ்ட்ரோ உள்ளிட்ட 120 வீரர்கள் சாண்டியாகோ கியூபாவில் அமைந்திருந்த கியூபாவின் இரண்டாவது மிகப் பெரிய இராணுவத் தளத்தை தாக்குகின்றனர். அச்சமயம் பாடிஸ்டா கட்டளைத்தளபதியாக கடமையாற்றிய தருணம் தளத்தில் 400 க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர்.

பிடலினுடைய திட்டம் என்னவென்றால் அபெல் சண்டமரிய தலைமையிலான 20 வீரர்கள் அடங்கிய முதலாவது குழு இராணுவத் தளத்திற்கு முன்பாக அமைந்திருக்கும் வைத்திய சாலையைக் கைப்பற்றுவது, லெஸ்டர் தலைமையிலான 5 வீரர்கள் அடங்கிய இரண்டாவது குழு என்னும் கட்டிடத்தைக் கைப்பற்றுவது,பிடல் தலைமையிலான 90 பேர் அடங்கிய மூன்றாவது குழு தளத்தைத் தாக்கி தொலைத்தொடர்பு நிலையத்தைக் கைப்பற்றுவது என்பதாகும். 

மொன்கடாவை முற்றுகையிட அவன் தலைமையில் 1953 ஜூலை 26 அன்று சியோனிப் பண்ணையிலிருந்து புரட்சிப்படை புறப்பட்டது. தாக்குதல் ஆரம்பிக்கின்றது ஆயுதங்கள் தாங்கி வந்த வாகனம் தாக்குதலுக்கு இலக்ககின்றது ஆயுத பற்றாக்குறையினால் கெரில்லா வீரர்கள் பலர் பின்வாங்குகின்றனர்.

பிடல் இழைத்த ஒரு சிறிய தவறினால் அவரின் வாகனம் சிறிய விபத்துக்குள்ளகின்றது அவரைக் காப்பாற்ற கெரில்லா வீரர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள பிடல் தனது வாகனத்தை இராணுவத்தளத்தின் வாசலை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தார். ஆனால் வாகனத்தின் பின்னால் இருந்த வீரர்கள் தாக்குதல் ஆரம்பித்து விட்டதால் தாம் இராணுவத்தளத்தின் உள்ளே இருக்கின்றோம் என நினைத்து வெளியே குதிக்கின்றனர் இதனால் அபாயமணி ஒழிக்க பாடிஸ்டாவின் இராணுவம் சுதாரித்துக் கொள்கின்றது.

தாக்குதல் முடிவில் 15 கெரில்லா வீரர்களும் 3 இராணுவத்தினரும் கொள்ளப்பட 23 கெரில்லா வீரர்களும் 5 இராணுவத்தினரும் காயமடைகின்றனர். எஞ்சிய வீரர்கள் பிடல் மற்றும் அவரது தம்பி ரால் காஸ்ட்ரோ உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு தீவுச்சிறையில் அடைக்கப்பட்டனர் அவர்களில் 56 கெரில்லாக்கள் கொலையும் செய்யப்படுகின்றனர். பதினைந்து ஆண்டு கால சிறைவாழ்க்கை என தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் மக்கள் புரட்சியின் விளைவாக பிடல் பொது மன்னிப்பின் பெயரில் விடுதலை ஆகின்றார்.

நிக்கோலோபஸ்க்கு, குவேத மாலாவில் ‘சே’வைச் சந்தித்தபோது புத்துணர்ச்சி ஏற்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க சில யோசனைகள் அவரது எண்ணத்தில் பளிச்சிட்டன. சித்தாந்தங்களில் தேர்ச்சி பெற்றிருந்த சே குவேரா மட்டும் கியூபா புரட்சியில் பங்கெடுத்தால், போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் கிடைக்கும் என்று லோபஸ் நம்பினார். இது குறித்து காஸ்ட்ரோவின் சகோதரர் ரால் காஸ்ட்ரோவுடன் பேசினார்.

இரண்டு மகத்தான சக்திகள் இணைந்த தருணம் கியூபா வளர்ச்சியின் அத்திவாரம். அப்போது ‘சே’வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால் ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இதனால்தான் ‘சே’ மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.

புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின், விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது.

காலநிலையில் ஏற்பட்ட சிக்கலால் படகு எதிர்பார்த்த இடத்தை எதிர்பார்த்த நேரத்தில் அடைய முடியாமல் போகின்றது. இதனால் இராணுவம் சுதாரித்துக் கொள்கின்றது. இச் சூழ்நிலையில் தன் சகாக்கள் பலரை இழந்தான். மிஞ்சியவர்களின் துணையோடு இராணுவத்திற்கு ஆயுதங்கள் வரும் இரயில் கவிழக்கபடுகின்றது இராணுவத்தினர் சிறைபிடிக்கபடுகின்றனர்.

1957, ஜனவரி 17ம் தேதி, தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டதன் மூலம் புரட்சியாளர்களின் முதல் வெற்றிச் சங்கொலி கியூபாவில் எதிரொலித்தது. அன்று துவங்கி மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நடந்தது கெரில்லா யுத்தம். துவக்கத்தில் குழுவில் மருத்து வராகவும் லெஃப்டினென்ட்டாகவும் இடம்பெற்ற ‘சே’, தன் திறமை, துணிச்சல், மதிநுட்பம் ஆகியவற்றால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த நிலையிலிருந்து படைகளை வழி நடத்தினார்.. கொரில்லாப் படைக்குக் கமாண்டராக அறிவிக்கப்பட்ட ‘சே’ கடுமை யான ஆஸ்துமா துன்புறுத் தியபோதிலும், அடர்வனங் களிலும் மலைகளிலும் சளைக்காமல் வீரர்களுக்குத் தெம்பூட்டியபடி படையை வழி நடத்தினார்.

"சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்" போன்ற அவரது வாசகங்கள், களத்தில் வீரர்களுக்கு தெம்பூட்டி சீற்றம் கொள்ளவைத்தன.

யுவேராவில் நடைபெற்ற யுத்தத்தில், 53 ராணுவத்தினரை வெறும் 18 கெரில் லாக்களைக் கொண்டு வீழ்த்தியதுதான் ‘சே’வின் வீரத்தை கியூபாவுக்கு வெளிச்சமிட்டது. 1958ம் வருடம் ஸாண்டா கிளாராவைக் கைப்பற்றினார் . கொடுங்கோலன் பாட்டிஸ்ட்டா ஸாண்டா டொமிங்கோவிற்குத் தப்பியோடினான். 1958 ஆகஸ்ட் மாதத்தில், புரட்சிப் படை தலைநகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கெரில்லா யுத்த வெற்றி, உலகின் அனைத்து நாடு களையும் வியப்பில் ஆழ்த்தியது.

1959, பிப்ரவரி 16ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன் குவேராவை ஒரு கியூபன் என்று அறிவித்தபிறகு அந்த வருடம் அக்டோபர் மாதம் தேசிய வங்கியின் அதிபராகவும் ஃபிடல் காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்டார். விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் ‘சே’. 

தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் ‘சே’ என கையெ ழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் 1961ம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியைத் துறந்து தொழிற்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். இருந்தாலும் ‘சே’ தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். 

விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார். ‘சே’ மற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையே யுத்தத்துக்கு முன்பும் பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதி யாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என ‘சே’ திடமாக நம்பினார். கியூபாவுக்கு ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ரஷ்யா வாக்குறுதி தந்தபோது, ‘‘ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்’’ எனத் தைரியமாகக் குரல் கொடுத்தார். அமெரிக்கா, கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்துக்குக் காரணம்.

அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத் தது. ‘‘அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப் பேன்’’ என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் ‘சே’. சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

இந்நிலையில் காங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. மூன்று மாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்துக்குப் பிறகு, ‘சே’ 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு ‘சே’ நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு ‘சே’வைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.

அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ ‘சே’வை சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது ‘சே’வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும், அதுதான் ‘சே’ கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு. 

அது மட்டுமன்றி வேறு சில காரணங்களும் சொல்லபடுகின்றது அவை 1964ம் ஆண்டு ஜூலை மாதம் இரு அமைச்சர்களின் நியமன சம்பவம் பொருளாதாரக் கொள்கைகளில் அமைச்சர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய ஒரு வாய்ப்பாகியது. அவ்விரு நியமனங்களுமே குவேரா வெளியேறுவதற்கு ஒரு தூண்டுகோலாகியது. மற்றுமொரு காரணம் குவேராவின் எண்ணமும் விருப்பமுமான மற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் புரட்சி வெடிக்கச் செய்யும் திட்டம். மற்ற தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பது அதைவிட முக்கியம் என்று போர்க்கொடி தூக்கினார்கள்.

1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் குவேரா அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு மூன்று மாத அதிகாரப்பூர்வமான சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியபோது, தனது அதிகாரப்பிடி தளர்ந்து போனதை குவேரா அறிந்து கொண்டார். அதனால் கியூபாவை விட்டு விலகி மற்ற நாடுகளில் புரட்சி ஓங்குவதற்கு உதவி புரியும் பொருட்டு அங்கிருந்து கிளம்பினார்.

‘சே எங்கே?’ பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது. ‘சே’வை சுட்டுக் -கொன்றுவிட்டார் காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியது. காஸ்ட்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. ‘சே எங்கே?’ எனக் கேட்ட யாருக்கும் காஸ்ட்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ.

உண்மையில் ‘சே’ ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னிலையில் தனது எல்லா பதவிகளையும் கியூபா நாட்டு குடியுரிமையையும் துறந்தார். அந்த வருட ஜூலை மாதம் கெய்ரோ வழியாக காங்கோவிற்கு ரகசியமாகப் பயணித்தார். அவரது பதவி மற்றும் கியூபாவின் குடியுரிமை துறப்பு பற்றி செய்தியை ஃபிடல் காஸ்ட்ரோ அக்டோபர் மாதம் கியூபன் மக்களுக்கு அறிவித்தார். 

காஸ்ட்ரோவை விட்டு பிரிவதற்கு முன் சே எழுதிய கடிதத்தை ஒரு பொதுக் கூட்டத்தில் காஸ்ட்ரோ படித்தார். அதில் என்னை கியூபாவின் புரட்சியுடன் தொடர்புபடுத்திய கடமை முடிந்துவிட்டது. அந்தக் கடமையை நான் செவ்வனே முடித்து விட்டேன். உங்களிடமும், மற்ற போராளிகளிடமும், என்னுடைய மக்கள் ஆகிவிட்ட கீயூபன் மக்களிடமும் நான் விடை பெறுகிறேன் என்று எழுதியிருந்தார்.

1966ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கோவை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் உருகுவே, பிரேஸில், பராகுவே, அர்ஜெண்டைனா, பொலிவியா நாடுகளில் பயணம் செய்தவர். 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் தீவு நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . 

இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது.

பொலிவியாவில் நடந்த கொரில்லாப் புரட்சியின் போது பொலிவியக் காடுகளில் பதுங்கி இருந்தார். தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்குக் காரணம். 

இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து ‘சே’வை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் ‘சே’ காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ. பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது.

1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.காலை 10.30 யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.

நண்பகல் 1.30 அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.

பிற்பகல் 3.30 காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ‘‘நான்தான் ‘சே’. நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார்.



மாலை 5.30 அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக ‘சே’வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் ‘சே’ கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.


இரவு 7.00 ‘சே பிடிபட்டார்’ என சி.ஐ.ஏவுக்குத் தகவல் பறக்கிறது. அதே சமயம், ‘சே’ உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.

தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ‘‘இது என்ன இடம்?’’ என்று ‘சே’ கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ‘‘பள்ளிக்கூடமா… ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?’’ என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் ‘சே’வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.

அக்டோபர் 9 அதிகாலை 6.00 லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார். கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் ‘சே’வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது கனவா என நினைத்தார்.

பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக்கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.

காலை 10.00 ‘சே’வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏவிடம் இருந்து தகவல் வருகிறது.

வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் ‘சே’ 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.

காலை 11.00 ‘சே’வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப் பணியமர்த்தப்படுகிறார். 

நண்பகல் 1.00 கைகள் கட்டப்பட்ட நிலையில், ‘சே’வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ‘‘முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!’’ என்பார் ‘சே’. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார்.

தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு ‘சே’ கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார். ‘‘கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’ இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!


மணி 1.10 மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஒன்பது தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான். 


 
அக்டோபர் 18 கியூபா, ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் ‘சே’வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ட்ரோ. ‘‘வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட ‘சே’ நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்’’ என வேண்டுகோள் விடுக்கிறார்.


எது எப்படி ஆயினும் சே குவேராவை இன்றும் போற்றும் மக்கள் அவனைப்பற்றி இழிவாக வெளிவரும் செய்திகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்கள் என்பதே உண்மை. சே குவேராவின் சிந்தனையும் இலட்சியங்களும் இன்றைக்கும் சிறந்தவையாக கருதபடுகிறது..


“சே”தான் இந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழ்கின்றார்.


Che Guevara (சே குவேரா) life history in Tamil (தமிழ்) with free PDF download. சேகுவேரா வாழ்க்கை வரலாறு (Biography) தமிழில்.
Che Guevara History in Tamil | சே குவேரா வாழ்க்கை வரலாறு Che Guevara History in Tamil | சே குவேரா வாழ்க்கை வரலாறு Reviewed by haru on September 14, 2013 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]