பாகுபாடு பார்க்கலாமா? | Don't Show Partiality

Ads Below The Title
ஒரு காட்டில் ஒரு பஞ்சவர்ணக் கிளியும், காகமும் வாழ்ந்து வந்தன.

கிளியோ எப்போது பார்த்தாலும் காகத்தைப் பார்த்து "கறுப்பா, கறுப்பா'' என அழைத்து அவமதித்தது. அதற்கு காகம் வருத்தத்துடன் "கடவுள் என்னைப் படைக்கும்போது மின்சாரம் இல்லாமல் இருட்டாக இருந்ததோ... என்னவோ... அதற்கு நான் என்ன செய்ய?' என்று சலித்துக் கொண்டது.

Parrot Cartoon

ஒருநாள், அந்தக் காட்டிற்கு வந்த ஒரு வேட்டைக்காரர் மரத்தின் மீது அமர்ந்திருந்த பல வண்ணங்களால் ஆன கிளியை "லபக்'கென்று பிடித்து, வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார். அச்சமயம் காகமோ "நல்ல வேளை நான் கறுப்பு' எனப் பெருமைப்பட்டது. இருந்தாலும், இத்தனை நாள் கிளியிடம் பழகிவிட்டோமே என்று நினைத்து, வேட்டைக்காரரைத் தொடர்ந்து சென்று கண்காணித்தது.

கிளியை, வேட்டைக்காரர் கூண்டில் அடைத்து "அக்கா சொல்லு... அக்கா சொல்லு...' என்று பாடாய்படுத்திக் கொண்டிருந்தார். வசம்பைச் சுட்டுக் கிளியின் நாக்கில் வைத்து நாக்கைப் பேசுவதற்கு ஏற்றவாறு பதப்படுத்திக் கொண்டிருந்தார். கிளியோ வலி தாங்காமல் அலறியது. இதைப் பார்த்த காகம் மனம் வருத்தமுற்றது.

அன்று அமாவாசை நாள். வேட்டைக்காரரின் மனைவி வாசல் சுவரில் படையல் சோறு வைத்து "கா... கா... கா...' எனக் கூவி காகத்தை அழைத்தாள்.

அப்போது அங்கு வந்த காகம், சிலிர்த்துக் கொண்டவாறு கிளியைப் பார்த்து சொன்னது... "கிளியே பார்த்தாயா? தன் மொழியில் உன்னைப் பேச வைக்க மனிதன் சூடு வைக்கிறான். ஆனால், என் மொழியில் கூவிக் கூப்பிட்டு எனக்குச் சோறு வைக்கிறாள் அவனது மனைவி!'' என்று கூறிவிட்டு, காகம் சாப்பிட ஆரம்பித்தது.

பிறகு கொஞ்ச நேரம் கழித்து, யாரும் இல்லாத நேரம் பார்த்து. கிளியின் கூண்டைத் திறந்துவிட்டு, "நண்பா வெளியே வா' என அழைத்தது. கிளியும் வெளியேறி வந்தது. இரண்டும் காட்டை நோக்கிப் பறந்தன.

கிளி காகத்தை நோக்கி, "நண்பா! என்னை மன்னித்து விடு. அறியாமல் நிறப்பாகுபாடு பார்த்து உன்னை மனம் நோகச் செய்துவிட்டேன். இனிமேல் இதுபோல் பாகுபாடு பார்க்க மாட்டேன்' என்று மனதார வருத்தப்பட்டது.

-கா. முத்துச்சாமி, தொண்டி.


Source: dinamani.com

பாகுபாடு பார்க்கலாமா? | Don't Show Partiality பாகுபாடு பார்க்கலாமா? | Don't Show Partiality Reviewed by haru on April 07, 2014 Rating: 5

No comments