குரங்கின் காற்றாடி! | Monkey and its Kite

Ads Below The Title
அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி விடுமுறை என்றாலே குட்டிக் குரங்கு முத்துவிற்கும், பாலுவிற்கும் கொண்டாட்டம்தான். அப்பா எவ்வளவு சொல்லியும், துணிப்பையைக் கொண்டு செல்லாமல், நெகிழி உறைகளில் காய்கறிகளை வாங்கி வருவார் முத்துவின் அம்மா.

அந்த நெகிழி உறைகள்தான் முத்துவிற்கும் பாலுவிற்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொழுதைப் போக்கும். ஆம், அந்த நெகிழிப் பைகளை வயதான கரடி மாமாவிடம் கொடுத்து காற்றாடி செய்து வானில் பறக்கவிடுவதில் இருவருக்கும் பெரு மகிழ்ச்சி.

அப்பா குரங்கு நெகிழியால் (பிளாஸ்டிக்) எவ்வளவு தீமை என்று கூறியும், அதைக் காதில் வாங்காது, நாள்தோறும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரும் உறைகளை அப்படியே குப்பைத் தொட்டியில் எறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார் முத்துவின் அம்மா. வாங்கி வருகிற பெரிய உறைகளை எடுத்து காற்றாடி விட்டுக் கொண்டிருந்தான் முத்து.

Monkey and its Kite

எவ்வளவு சொல்லியும் மனைவியும், மகனும் மனம் திருந்தாதது கண்டு மிகவும் வருந்தினார் முத்துவின் அப்பா.

எப்பப் பார்த்தாலும் அப்பாவுக்குக் குறை சொல்றதே வேலையாகப் போய்விட்டது என முத்துவும் பாலுவும் அப்பாவின் வருத்தத்தைப் புரிந்து கொள்ளாமல் பள்ளி விடுமுறை நாட்களில் காற்றாடி விடுவதைக் கடமையாக்கிக் கொண்டனர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வெளியூரில் வேலை முடித்து தனது ஊருக்கு, மோட்டார் வண்டியில் வந்து கொண்டிருந்தது ஓர் இளங்கரடி.

உயரமான குன்றின் மீது பல குட்டிக் குரங்குகளுடன் காற்றாடி பறக்கவிட்டு உற்சாகமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர் முத்துவும் பாலுவும்.

முத்துவின் காற்றாடிக்கு பாலு தன் காற்றாடி மூலம் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். ஒருவரை ஒருவர் வெற்றி பெறுவதற்கான விளையாட்டு அது. அதற்காக அவர்கள் அந்நூலில் வஞ்சிர கோந்து, கண்ணாடிச் சில்லு தூள்கள், பாட்டரி கரி என பலவற்றைச் சேர்த்து, கத்தி போன்று கடினமாக்கி வைத்திருந்தனர். எதிர்பாராதவிதமாக முத்துவின் காற்றாடி அறுந்தது.

காற்றில் அசைந்து அசைந்து காற்றாடி நூல் வண்டியில் வந்து கொண்டிருந்த இளங்கரடியின் கழுத்தை அறுத்துவிட்டது.

அய்யோ! என்று அலறியது இளங்கரடி. ரத்தம் வேகமாக வெளியேறியது. அருகில் இருந்தவர்களின் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது கரடி.

பயத்தில் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தனர் பாலுவும் முத்துவும். அவர்களின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

மறுநாள் செய்தித்தாளில் காற்றாடி நூலால் இளங்கரடி கழுத்து அறுபட்ட செய்தியும், அதற்குக் காரணமான முத்து, பாலுவின் படங்களும் வெளியாகியிருந்தன.

தனது தவறை உணர்ந்த குட்டிக் குரங்குகள் காவல் நிலையத்தில் தலைகவிழ்ந்து நின்றனர். தந்தையும் தாயும் வந்து காவலரிடம் மன்னிப்புக் கேட்டனர். இனி, பெற்றோரின் பேச்சை மீறுவதில்லை, பூமிக்கும் தீங்கு விளைவிப்பது இல்லை என்றும் வாக்கு அளித்தனர்.

நானும், இனி கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளையே கொண்டு செல்வேன் என முத்துவின் தாயார் கூறினார்.

அட! இதுதான் குடும்பத்தோடு தமிழ்ப் புத்தாண்டு சபதமா? என்று கேட்டார் காவலர் சிரித்தபடியே...

ஆமாம்... ஆமாம்... என்றனர் அனைவரும் சிரித்தபடியே.


நன்றி! பெரியார்பிஞ்சு

எழுத்தாளர்: கன்னிக்கோவில் இராஜா
குரங்கின் காற்றாடி! | Monkey and its Kite குரங்கின் காற்றாடி! | Monkey and its Kite Reviewed by haru on May 23, 2014 Rating: 5

No comments