Kargil War History in Tamil | கார்கில் போர் வரலாறு
Kargil War History in Tamil:
Read and download the history of Kargil War (கார்கில் போர் வரலாறு) documentary story in Tamil (தமிழ்) language with pictures.கார்கில் போர் வரலாறு:
இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள பனி படரும் மிக உயர்ந்த இமயமலை பிரதேசம். பாரத மாதாவின் மணி மகுடத்தில் அழகுக்கு அழகு சேர்க்கும் அழகிய நகரம். திரும்பும் திசையெல்லாம் உயர்ந்து நிற்கும் மலை முகடுகள்.. அதை சுற்றி போர்த்தப்பட்டிருக்கும் பனித் திரைகள்.
பார்க்க பார்க்க பரவசப்படுத்தும் இந்த நகரம் ஸ்ரீநகரில் இருந்து 205 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஸ்ரீநகரையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மட்டும்தான் கார்கில் வழியாக செல்கிறது. கரடு முரடான மலை பிரதேசத்தில் இது ஒன்றுதான் போக்கு வரத்துக்கான ஒரே வழி.
தரை பகுதியில் இருந்து 16 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இந்த கோட்டின் இருபகுதியிலும் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன.
இரு நாட்டு ராணுவமும் அந்த பகுதியில் முகாமிட்டு இரவு பகலாக எல்லையை கண்காணித்து வருகின்றன. துப்பாக்கி குண்டுகளுக்கு கூட அஞ்சாத ராணுவ வீரர்களை குளிர்காலத்தில் பனிக் கீற்றுகள் துளைத்து நடுங்க வைத்து விடும். வெப்பம் (-48) டிகிரிக்கு மாறி விடும். குளிரில் பனிக்கட்டிகள் அந்த பகுதியையே சூழ்ந்து விடும்.
எனவே அந்த குளிர்காலத்தில் இரு நாட்டு ராணுவத்தினரும் தங்கள் பாசறைகளை அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவார்கள்.
குளிர்காலம் முடிந்ததும் மீண்டும் ராணுவம் தங்கள் நிலைகளுக்கு திரும்பும். அதை தொடர்ந்து ராணுவத்தின் ரோந்தும் தீவிரமாகும். இதுதான் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் வழக்கம்.
காஷ்மீருக்கு சொந்தம் கொண்டாடும் பாகிஸ்தானுக்கு எவ்வளவு பட்டாலும் புத்திவராது. கார்கில் பகுதிக்குள் ஊடுருவி ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலையை துண்டித்து விட்டால் அங்கிருந்து இந்தியாவை எளிதில் தாக்கலாம். இதன் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று பாகிஸ்தான் கனவு கண்டது.
இந்த ஊடுருவல் முயற்சிக்கு பல முறை திட்டம் வகுத்தார்கள். ஆனால் ஜியா உல் ஹக், பெனாசிர் பூட்டோ ஆகியோர் அதிபர்களாக இருந்தபோது அந்த திட்டத்தை நிராகரித்து விட்டனர்.
ஏற்கனவே 1971–ல் நடந்த போரில் பட்ட சூடும், அவ்வப்போது இந்திய ராணுவத்தின் அதிர வைக்கும் பதிலடிகளும் போரை நினைத்தாலே அவர்களை அஞ்சி நடுங்க செய்தது.
ஆனால் 1990–களில் பாகிஸ்தான் தூண்டுதலோடு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிராத தாக்குதல்கள் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவுக்கு வேட்டு வைத்தது. இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் உருவானது.
இந்த பதட்டத்தை தவிர்க்கவும் காஷ்மீர் பிரச்சினையை அமைதியாக தீர்த்து கொள்ளும் வகையிலும் 1999 பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு பஸ் பயணத்தை தொடங்கி வைத்து லாகூருக்கு பஸ்சில் சென்று வந்தார். இந்தியா அன்புடன் நேசக்கரம் நீட்டியது. ஆனால் பாகிஸ்தான் வம்பு செய்தது.
ஒரு புறம் நட்பு பாராட்டி கொண்டே திரைமறைவில் ஊடுருவல் வேலைகளை கச்சிதமாக செய்து கொண்டிருந்தது. 1999–ம் ஆண்டு குளிர்காலத்தில் படைகள் கீழே இறங்குவதற்கு பதில் அங்கேயே முகாமிட்டு இருந்தன. ராணுவ தளவாடங்களை கொண்டு வந்து குவித்தனர். படைகள் கீழே இறங்கி விட்டதால் காலியாக இருந்த இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியது. கார்கிலில் ஊடுருவி எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றனர்.
130 சதுர கிலோ மீட்டர் முதல் 200 சதுர கிலோ மீட்டர் வரை ஊடுருவி விட்டனர். முஷ்கோ பள்ளத்தாக்கு, டிராஸ் அருகில் உள்ள மார்போலா மலை முகடுகள், கார்கிலுக்கு அருகில் உள்ள கக்சர், சிந்து நதியின் கிழக்கு பகுதியில் உள்ள படாலிக் பகுதி, எல்லையோரத்தில் உள்ள சோர்பாட்லா பகுதி, சியாசின் பனி மலைக்கு தெற்கே அமைந்துள்ள துர்தோக் ஆகிய பகுதிகளை முற்றிலுமாக தங்கள் வசப்படுத்தி விட்டன.
இந்திய ராணுவ நிலைகளை கைப்பற்றியதோடு புதிதாக ராணுவ தளங்களையும் அமைத்து விட்டனர்.
வல்லவர்களாக இருந்தாலும் நம்மவர்கள் கோட்டை விடுவதிலும் கெட்டிக்காரர்களல்லவா? கார்கில் விசயத்திலும் அப்படித்தான்! பாகிஸ்தான் ஊடுருவலை கண்டு பிடிப்பதில் கோட்டை விட்டு விட்டனர்.
மாடு மேய்ப்பவர்கள்தான் முதலில் இந்த ஊடுருவலை இந்திய ராணுவத்தின் பார்வைக்கு கொண்டு வந்தனர். மலை முகடுகளில் மாடு மேய்க்க சென்றவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடமாட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மாடு மேய்ப்பவர்கள் சொல்லிய தகவலை கேட்டதும் உஷார் அடைந்த ராணுவத்தினர் கேப்டன் சவுரப் காலியா என்பவரது தலைமையில் படாலிக் பகுதிக்கு ரோந்து சென்றனர். அவர்களில் 5 பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர். அப்போதும் இது தீவிரவாதிகள் செயலாகத்தான் இருக்கும் என்று தான் நமது ராணுவம் நினைத்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் அங்கிருந்து கார்கில் ராணுவ கிடங்கை குறி வைத்து குண்டு வீசப்பட்டதில் ராணுவ கிடங்கு சேதமடைந்தது. அதன் பிறகுதான் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இருக்கிறது என்பதை உறுதி செய்தனர்.
முதுகில் குத்திய பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட பிரதமர் வாஜ்பாய் போர் பிரகடனப்படுத்தினார்.
தாய் மண்ணை காக்க கார்கில் போருக்கு நமது வீரர்கள் தயாரானார்கள்.
ஒரு ஆண்டுக்கு முன்புதான் (1998–ல்) 2–வது முறையாக பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலகிற்கே சவால் விடுத்த நமக்கே பாகிஸ்தான் சவால் விடுவதா? என்ற ஆவேசம்....
தரைப்படை, விமானப்படை, கப்பல் படை அத்தனையும் அசுர வேக தாக்குதலை தொடங்க தயாரானது. 2 லட்சம் வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கார்கில் போர்களத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
ஆனால் கார்கில் கரடு முரடான மலை பகுதி! போக்கு வரத்துக்கு ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலை மட்டும்தான் உண்டு. ஒரே வழியில் லட்சக்கணக்கில் வீரர்கள் செல்வது... ஆயுதங்கள் கொண்டு செல்வது.... பீரங்கிகள் அணிவகுப்பது... அவ்வளவு எளிதானதல்ல.
தாய் நாட்டை காக்க உயிரை துச்சமென மதித்து இளம் இந்திய சிங்க குட்டிகள் மலை முகடுகளில் துள்ளி குதித்தன. மிக உயர்ந்த மலை சிகரத்தில் கடுமையான சவால்களை சந்தித்து நமது ராணுவ வீரர்கள் நடந்து முன்னேறினார்கள்.
முதலில் ஸ்ரீநகர் – லடாக் தேசிய நெடுஞ்சாலையை மீட்க போராடினார்கள். இந்த போராட்டம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மலை முகடுகளின் உச்சியில் இருந்து பாகிஸ்தான் பொழிந்த குண்டு மழையையும், துப்பாக்கி குண்டுகளையும் கீழே இருந்து சந்தித்து அங்குலம் அங்குலமாக நகர்ந்தார்கள்.
சாலை முழுவதும் குண்டு வீச்சில் சேதம் அடைந்து கிடந்தது. வழி நெடுக கண்ணி வெடிகளும் மிரட்டியது. அவற்றை ராணுவத்தினர் அப்புறப்படுத்தினார்கள். 9 ஆயிரம் கண்ணி வெடிகள் செயலிழக்கச் செய்யப்பட்டது.

சிறு சிறு குழுக்களாக வெறும் 30 ஆயிரம் வீரர்கள் மட்டுமே போர்க்களத்தில் இருந்தார்கள். படை சிறிதாக இருந்தாலும் அவர்களின் நெஞ்சுரம் அதிகமாக இருந்தது.
எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை கடந்தால் பாகிஸ்தான் படைகளை பல முனைகளில் புகுந்து தாக்கி துவம்சம் செய்து இருப்பார்கள். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடக்க கூடாது என்ற கட்டுப்பாடு ராணுவத்துக்கு விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் நேருக்கு நேராக தாக்கி அவர்களை ஓட வைப்பது மட்டும்தான் சாத்தியமாக இருந்தது.
பகல் நேரத்தில் ராணுவம் நகர்ந்ததால் மலை உச்சியில் இருந்து கவனித்து குண்டுகளை வீசினார்கள்.
இதனால் இரவு நேரத்தையே தாக்குதலுக்கு தேர்வு செய்தார்கள். அடர்ந்த காடு... முகம் தெரியாத கும்மிருட்டு... கண்களில் தெறித்த கோபக் கனலில் ராத்திரி நேரத்தில் வேட்டையாடினார்கள். எதிரிகள் பலரை எமலோகத்துக்கு அனுப்பினார்கள்.

முன்னேறிய ராணுவத்துக்கு வலுசேர்க்க விமானப் படை விமானங்களும் குண்டுகளை வீசியது. ஆனால் உயர்ந்த மலை முகடுகளுக்கிடையே பனி மூட்டத்தில் விமானங்களை செலுத்துவது கடினமாக இருந்தது.


நமது கடற்படையினர் போரின் போக்கை மாற்றினர். எதிரிகளை வீழ்த்த புது வியூகம் அமைத்தனர். கராச்சி துறைமுகத்துக்கு சரக்கு கப்பல்கள் செல்ல முடியாதபடி நடுக்கடலில் தடுத்து நிறுத்தியது நமது கடற்படை.
ஒரு புறம் பெருளாதார சிக்கல். இன்னொரு புறத்தில் போர். நிலைமையை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. ராணுவத்துக்கு 6 நாட்களுக்குத்தான் எரிபொருள் இருந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் அலறியது.

இந்திய வீரர்களின் ஆவேச தாக்குதலில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் ஒவ்வொன்றாக இழந்து வந்த பாகிஸ்தான் உலக நாடுகளின் எச்சரிக்கையால் படைகளை விலக்கி கொள்ள முன் வந்தது. இதற்கான அறிவிப்பை நவாஸ்ஷெரீப் வெளியிட்டார்.
இது அப்போது தளபதியாக இருந்த முஷரப்புக்கு பிடிக்கவில்லை. இதுவே பிற்காலத்தில் ராணுவ புரட்சி நடத்தி முஷரப் ஆட்சியை பிடிக்க வித்திட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் படைகள் 80 சதவீதம் வெளியேறிய பிறகும் ஊடுருவிய தீவிரவாத குழுக்கள் போரை தொடர்ந்தது. அவர்களை ஒரு வாரத்தில் அடித்து விரட்டி கார்கில் பகுதி முழுவதையும் நமது ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
போர் முடிவுக்கு வந்ததாக ஜூலை 26–ந் தேதி இந்திய தேசம் உலகுக்கு அறிவித்தது.
இந்த போரில் இந்தியா 527 வீரர்களை தியாகம் செய்துள்ளது. 1863 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக எங்கள் தரப்பில் 357 வீரர்களை தான் இழந்தோம் என்று போலி கணக்கு காட்டியது பாகிஸ்தான். ஆனால் 4 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி விட்டனர் என்ற உண்மையை பிற்காலத்தில் நவாஸ்ஷெரீப்பே ஒத்துக் கொண்டார்.
"நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்!"
Download As PDF
Kargil War History in Tamil | கார்கில் போர் வரலாறு
Reviewed by haru
on
July 26, 2014
Rating:

No comments