துணி துவைத்த சீடர்கள் - பரமார்த்த குரு கதைகள் | Paramartha Guru Kathaigal
துணி துவைத்த சீடர்கள்
பரமார்த்த குரு கதைகள் (Paramartha Guru Stories)
குருதேவா! ஜமீன்தார் ஜம்புலிங்கம் வீட்டில் துணி துவைப்பதற்கு ஆள் தேவையாம். அந்த வேலையைச் செய்தால் என்ன? என்று சீடர்கள் கேட்டனர்.
துணி துவைக்கிற தொழிலுக்குப் பொதி சுமக்கும் கழுதை வைத்திருக்க வேண்டும். நம்மிடம் அது இல்லையே, என்ன செய்வது? என்றார் பரமார்த்தர்.
கழுதை இல்லாவிட்டால் என்ன? அதற்குப் பதில் தான் நாங்கள் இருக்கிறோமே! என்று சீடர்கள் கூறினர்.
இருந்தாலும், நிஜமான கழுதை இருந்தால் நல்லது! நல்ல கழுதையாக ஒன்று வாங்கி வாருங்கள், என்று உத்தரவிட்டார், பரமார்த்த குரு.
அன்று மாலையே அவர் மடத்துகுக் கழுதை ஒன்று வந்து சேர்ந்தது.
கழுதையைப் பார்வையிட்ட பரமார்த்தர், அதன் வாலைப் பிடித்து முறுக்கிப் பார்த்தார்! கோபம் கொண்ட கழுதை, விலுக் கென்று ஒரு உதை விட்டது!
ஐயோ! என்று அலறியபடி தூரப் போய் விழுந்தார் பரமார்த்தர். முட்டாள்களே! என் பெருமைகளைப் பற்றி கழுதையிடம் ஒன்றுமே சொல்ல வில்லையா? என்று கோபமாகக் கேட்டார்.
குருதேவா! உங்களைப் பற்றி எல்லா விஷயங்களையும் தெளிவாக எடுத்துச் சொன்னோம்! அதனால்தான் உதைத்ததோ என்னவோ! என்றான் மடையன்.
ஆமாம் குருவே! அப்படியும் இருக்கலாம். என்று ஒத்து ஊதினான், மட்டி.
பரவாயில்லை. அடிக்கிற கைதான் அணைக்கும். அதுபோல் உதைக்கிற கழுதைதான் உண்மையாய் உழைக்கும். ஆகையால் இந்தக் கழுதையே இருக்கட்டும்! என்றார் பரமார்த்தர்.
குருவும் சீடர்களும் கழுதை வைத்திருப்பதை அறிந்த உள்ளூர் திருடன், அதை எப்படியாவது திருடிச் செல்ல திட்டமிட்டான்.
ஒருநாள், கழுதையின் கழுத்தில் கட்டப்பட்டு இருந்த கயிற்றை அவிழ்த்துக் கொண்டு இருந்தான், திருடன். ஆனால் அதற்குள் சீடர்கள் வரும் சப்தம் கேட்கவே அவசரம் அவசரமாகக் கழுதையை மட்டும் தூர ஓட்டிவிட்டு, அதன் இடத்தில் தான் நின்று கொண்டான்.
வெளியே வந்து பார்த்த சீடர்களுக்கு வியப்பும் அதிர்ச்சியுமாக இருந்தது.
இதென்ன? கழுதை இருந்த இடத்தில், மனிதன் இருக்கிறானே! என்றான் மூடன்.
ஒருவேளை இது மாயமந்திரம் தெரிந்த கழுதையாக இருக்குமோ! எனச் சந்தேகப்பட்டான் மண்டு.
அதற்குள் பரமார்த்தரும் வந்து சேர்ந்தார். உன்னைக் கழுதையாகத்தானே வாங்கி வந்தோம். நீ எப்படி மனிதமாக மாறினாய்? என்று கேட்டான் முட்டாள்.
நான் முதலில் மனிதனாகத்தான் இருந்தேன். ஒரு முனிவரின் கோபத்துக்கு ஆளாகி விட்டேன். அவர்தான் என்னைக் கழுதையாகப் போகும்படிச் சாபம் இட்டார்.. இப்போது சாபம் நீங்கி விட்டதால் மறுபடி மனிதனாக மாறி விட்டேன்! என்று புளுகினான், திருடன்.
திருடனின் பொய்யைப் புரிந்து கொள்ளாத பரமார்த்தர், மனிதனைக் கழுதையாக மாற்றியதால் தப்பித்தோம். அதே முனிவர் சிங்கத்தையோ, புலியையோ கழுதையாக மாற்றியிருந்தால் இந்நேரம் நம்மையெல்லாம் சாப்பிட்டிருக்கும். நல்லகாலம்! தப்பித்தோம்! என்று மகிழ்ந்தார்.
சீடர்களும், விட்டது தொல்லை, என்று மகிழ்ந்தனர்.
கழுதை இல்லாமலேயே ஜமீன்தார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த சீடர்கள், துணிகளை மூட்டை கட்டி, பாசி பிடித்த ஒரு குட்டைக்கு எடுத்துச் சென்றார்கள்.
வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும் என்பது ஜமீன்தார் கட்டளை என்று சொல்லியபடி, வெவ்வேறு நிறங்களில் இருந்த துணிகளைக் கல்லில் தேய்த்துக் கிழித்தான், மட்டி.
வெள்ளையாக இருந்த வேஷ்டியில் பாசியை தோய்த்துப் பச்சை நிறமாக மாற்றினான் மடையன்.
ஒரே துணியாக இருந்ததைக் கசக்கிப் பிழிந்து முறுக்கி, பல துண்டுகளாக ஆக்கினார்கள், முட்டாளும் மூடனும்.
அப்பாடா! ஒரு வழியாக நன்றாக வெளுத்துக் கட்டி விட்டோம்! என்று மகிழ்ந்தபடி ஜமீன்தார் வீட்டுக்குப் புறப்பட்டனர்.
நீங்கள் ஒரு துணி போட்டீர்கள். நான் அதையே பத்தாக்கிக் கொண்டு வந்திருக்கிறேன்! என்று பெருஐம அடித்துக் கொண்டான், முட்டாள்!
வெள்ளையைப் பச்சையாக்கி விட்டேன்! என்று குதித்தான் மடையன்.
சீடர்கள் கொண்டு வந்த துணிகளைப் பிரித்துப் பார்த்த ஜமீன்தாருக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது.
அடப்பாவிகளா! முழுசாய் இருந்ததை எல்லாம் கிழித்துக் கோவணத் துணிகளாய் ஆக்கி விட்டீர்களே; புத்திகெட்டவர்களை நம்பி இந்தக் காரியத்தைச் செய்யச் சொன்னேனே! என்று புலம்பியபடி சீடர்களை விரட்டி அடித்தார்.
நம் தொழில் திறமையை யாருமே புரிந்து கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறதே! என்று வருத்தப்பட்டபடி மடத்துக்கே திரும்பினார்கள், ஐந்து சீடர்களும்.
துணி துவைத்த சீடர்கள் - பரமார்த்த குரு கதைகள் (Kathaigal). Read and download Paramartha Guru Stories in tamil with pictures for kids.
துணி துவைத்த சீடர்கள் - பரமார்த்த குரு கதைகள் | Paramartha Guru Kathaigal
Reviewed by haru
on
October 23, 2014
Rating:
Reviewed by haru
on
October 23, 2014
Rating:



No comments