Ads Below The Title

சிங்கக்குட்டியின் புது தீபாவளி! | Young Lions New Diwali

ஒரு நாள் சிங்க ராஜா குடும்பத்துடன் காட்டைச் சுற்றி வலம் வந்தது. அப்போது இளவரசர் சிங்கக்குட்டி காணாமல் போய்விட்டது. இளவரசர் சிங்கக்குட்டி வழிதவறி நாட்டுக்குள் நுழைந்தது. இது தெரியாமல் காட்டில் விலங்குகள் இளவரசரைத் தேடிக் கொண்டிருந்தன.

அன்றைக்குத் தீபாவளி. எங்கு பார்த்தாலும் மனிதர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக இருந்தார்கள். நம்ம இளவரசர் சிங்கக் குட்டிக்கோ பட்டாசு சத்தம் பயத்தை உண்டாக்கியது. இதற்கு முன்பு இதுபோன்ற சத்தத்தை அது கேட்டதே இல்லை. அதனால், ஒருவித பயத்துடன் எங்குச் செல்வது எனத் தெரியாமல் சுற்றிச் சுற்றி வந்தது.
அஞ்சி நடுங்கிக்கொண்டு ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்றது. அப்போது அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று, சிங்கத்தை அடையாளம் கண்டுவிட்டது.

Lion and Dog

என்ன சிங்கக்குட்டி! நாட்டில் தீபாவளியை வேடிக்கை பார்க்கக் காட்டில் இருந்து வந்துவிட்டீரோ” என்று கேட்டபடி சிரித்தது.

தெருநாயைப் பார்த்த சிங்கக்குட்டி, முதலில் பயந்தது. பிறகு அதன் பேச்சைக் கேட்டுக் கொஞ்சம் தைரியம் பெற்றது.

இல்லை... இல்லை... நான் வேடிக்கை பார்க்க வரல நண்பா. வழி தவறி நாட்டுக்குள்ள வந்துட்டேன். தீபாவளி என்றால் என்னான்னே எனக்குத் தெரியாது. இங்கே எங்கு திரும்பினாலும் சத்தம் காதைப் பொளக்குதே... இதுதான் தீபாவளியா?” எனக் கேட்டது.

என்ன.. சிங்கக்குட்டியாரே! இந்தச் சத்தத்திற்கா பயந்துவிட்டீர். இது பட்டாசு சத்தம். தீபாவளி நாட்டுக்குள் நடக்கும் முக்கியமான பண்டிகை. இதை மனிதர்கள் ரொம்ப ஜாலியாகக் கொண்டாடுவார்கள். ஊசிப் பட்டாசு, சரவெடி, புஸ்வாணம், சங்கு சக்கரம் எனப் பல பட்டாசு, மத்தாப்புகளை வெடித்து மகிழ்ச்சியடைவார்கள்.

சில சமயம் சிறுவர்கள் எங்களைப் போன்ற அப்பாவி பிராணிகளின் வாலில் பட்டாசுகளைக் கட்டி, அதை வெடிக்கச் செய்தும் மகிழ்வார்கள்” என்றது தெருநாய்.

Also Read: முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும்

நண்பா! தீபாவளி பத்தியும், பட்டாசு குறித்தும் சொன்னதற்கு ரொம்ப நன்றி. நான் காட்டுக்குச் செல்ல வழி சொல்ல முடியுமா?” என்று கேட்டது சிங்கக்குட்டி.

சரி! வாருங்கள் வழி காட்டுகிறேன்” என்று கூறி, காட்டின் வாசல் வரை கொண்டுவந்து விட்டது நாய்.

இளவரசரைக் காணாமல் பதறிப் போயிருந்த விலங்குகள், காட்டின் வாசலில் இளவரசரைக் கண்டவுடன் ஓடிவந்து அணைத்துக் கொண்டன. சில விலங்குகள் அரசருக்குத் தகவல் கூற விரைந்தன.

சிங்க ராஜாவும் விரைந்து வந்தது. இளவரசரைக் கண்டதும் மகிழ்ந்தது. தீபாவளி, பட்டாசு பற்றி இளவரசர் கூறியதைக் கேட்டுச் சிங்க ராஜா வியந்தது.

அப்பா! இந்த ஆண்டு நாமும் தீபாவளி பண்டிகையைக் காட்டில் கொண்டாடலாமா?” என்று கேட்டது இளவரசர் சிங்கக்குட்டி.

அப்படியே ஆகட்டும்” என்றது சிங்கராஜா.

காடே விழாக்கோலம் பூண்டது. எங்கு பார்த்தாலும் தோரணங்கள் கட்டப்பட்டுப் புதுக் காடாக மாறியிருந்தது. வெளியூர் சென்றிருந்த பறவைகள் பயணத்தை முடித்து, காட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன.

காட்டை நெருங்கியதும் தோரணங்களைக் கண்டன. நண்பர்கள் மூலம் செய்தியை அறிந்துகொண்டன. நேராக சிங்கராஜாவை சந்திக்கக் குழுவாகப் பறந்தன.

Also Read: சிங்கத் தோல் போர்த்திய கழுதை

அரசே! வணக்கம். நாங்கள் ஊர்ஊராகப் பயணம் செய்பவர்கள். நிறைய ஊர்களில் தீபாவளி கொண்டாட்டங்களைப் பார்த்திருக்கோம். நம் காட்டில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடப் போவதாக அறிந்தோம், சந்தோஷம். அத்துடன் வருத்தமும் அடைகிறோம்” என்றன வேதனையுடன்.

lion with wild animals

என்ன பறவைகளே! மகிழ்ச்சி என்கிறீர்கள். கூடவே வருத்தம் என்றும் கூறுகிறீர்கள். எனக்குப் புரியும்படி கூறுங்கள்” என்றது சிங்கராஜா.

அரசே! தீபாவளி பண்டிகையை நாம் தாராளமாகக் கொண்டாலாம். அதாவது புது உடை, பலகாரங்கள் செய்து கொண்டாடலாம். ஆனால் பட்டாசுகள் வேண்டாமே” என்றது ஒரு பறவை.

எதற்காகப் பட்டாசுகள் வேண்டாம் எனக் கூறுகிறீர்கள்” என்று கேட்டது சிங்கராஜா.

அரசே! பட்டாசுகளை வெடிக்கும்போது, அதிலிருந்து வெளியேறும் நச்சுப் புகை, காற்று மண்டலத்தில் கலந்துவிடும். முயல், முள்ளம்பன்றி போன்ற சிறிய விலங்குகளுக்கும், சிட்டுக்குருவி, தேன்சிட்டு போன்ற பறவைகளுக்கும் மூச்சு திணறலை ஏற்படுத்தும். பட்டாசு சத்தம் ஒலி மாசை ஏற்படுத்தும். அதனால்தான் எங்களைப் போன்ற பறவைகள் கூடும் கிராமங்களில் பறவைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மனிதர்கள் பட்டாசு வெடிக்காமல்,

தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்" என்றது.

ஓ! அப்படியா? பட்டாசில் இவ்வளவு பெரிய தீங்கு இருக்கிறதா? இளவரசர் ஆசைப்பட்டதால்தான் நான் ஒப்புக்கொண்டேன்” என்றது சிங்கராஜா.
அப்பா! பலருக்குத் தொந்தரவு தரும் பட்டாசை வெடிக்காமல், ‘ஓசையில்லா தீபாவளி’யைக் கொண்டாடலாமே" என்றது இளவரசர் சிங்கக் குட்டி.

அப்படியே ஆகட்டும்" என்றது சிங்கராஜா.

மகிழ்ச்சியில் சிறகைப் ‘படபடவென’ அடித்தன பறவைகள்.


கதை ஆசிரியர்: கன்னிக்கோவில் இராஜா

நன்றி: தி இந்து (October 23, 2014)

Story & Image Credit: The Hindu


சிங்கக்குட்டியின் புது தீபாவளி! | Young Lions New Diwali சிங்கக்குட்டியின் புது தீபாவளி! | Young Lions New Diwali Reviewed by haru on October 25, 2014 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]