மாற்றம் | லஞ்சம் தவிர் | தமிழ் அறிவு கதைகள்
ஜமீன்தார் ஒருவர் தனது வீட்டுக்கு இன்னொரு ஜமீன்தாரை விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்தாளி வரும்போது மாளிகை பளபளப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக சுத்தப்படுத்தி அலங்காரமாக்கும் வேலை நடந்தது.
அந்த மாளிகையில் நடுநாயகமாக, பிரமாண்டமாக இருந்த பளிங்குகளால் ஆன படிக்கட்டுகளை பளபளப்பாக்கும் வேலையும் நடந்தது. வேலை செய்பவர்கள் மேலே இருந்து துடைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த ஜமீன்தார் ஒருவனை பார்த்து, `ஏன் மேலே இருந்து துடைக்கிறாய், கீழே இருந்து துடைத்துக் கொண்டு போ` என்றார்.
வேலை செய்பவர்கள் திரு திரு என முழித்தார்கள். அந்த படிக்கட்டுகளை எப்படியும் துடைக்கலாம். ஆனால் எது அதிக பலனைத் தரும். கீழே இருந்து துடைத்தால், அதிகபட்சம் நான்கு படிக்கட்டுகளை துடைக்கலாம். அதற்கும் மேல் துடைக்க, துடைத்த படிகட்டுகள் மீதே கால் வைத்து ஏற வேண்டி இருக்கும். அது மீண்டும் அழுக்காகுமே?
இனி இந்த கதையில் நீதியை மட்டும் பார்ப்போம். நம் நாட்டில் மக்கள் லஞ்சம் கொடுக்கக் கூடாது, அவர்கள் தரமானவர்களாக இருந்தால்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களும் தரமானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவும் உண்மை. எனவே மக்களிடமும் தரம் வேண்டும்தான். ஆனால் அதைவிட வேகமான மாற்றத்தை தலைவர்கள்தான் தரமுடியும்.
எப்படி படிக்கட்டுகளை மேலே இருந்து துடைத்தால் அது அதிக பலனைத் தருமோ, அதேபோல் மேலே இருப்பவர்கள் சுத்தமாக இருந்தால் அது சமுதாயத்தில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு குப்பனோ, ராமனோ சிகெரெட் பிடிப்பதை, அல்லது அவர்கள் தரும காரியங்கள் செய்வதை பார்த்து மற்றவர்கள் பின் தொடரும் வாய்ப்பு குறைவு. ஆனால் அதே செயலை ஒரு தலைவரோ அல்லது நடிகரோ செய்தால் அதன் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே மாற்றம் இருபக்கமும் வேண்டும். அது மேலே இருந்து ஆரம்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
மாற்றம் | லஞ்சம் தவிர் | தமிழ் அறிவு கதைகள்
Reviewed by haru
on
January 27, 2015
Rating:
No comments