Ads Below The Title

வேலை இழந்த அரண்மனை சேவகர்கள்! | Palace Courtiers who Lost Their Jobs

வேலை இழந்த அரண்மனை சேவகர்கள்! - Palace Courtiers who Lost Their Jobs

(அக்பர் பீர்பால் கதைகள்)


ஒருநாள் காலையில் அக்பரும், பீர்பாலும் அரண்மனை முற்றத்தில் நின்று கொண்டிருந்தனர். சூரியனுடைய பொன்னிறக் கதிர்கள் பட்டதால், யமுனை நதி தனி அழகுடன் விளங்கியது. தங்கத்தை உருக்கி வார்த்ததைப்போல் யமுனை நதி ஓடிக்கொண்டிருந்தது.

இந்த அழகிய காட்சியைக் கண்டு ரசித்தவாறு வெகுநேரம் தம்மை மறந்து நின்று கொண்டிருந்தார் அக்பர்.

அப்போது திடீரென்று, "மகாராஜா! மகாராஜா! திருடன் என் பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டு போகிறானே! உங்கள் கண்ணெதிரிலா இந்த அக்கிரமம் நடைபெறுவது?'' என்று ஒரு கூச்சல் கேட்டது.

சக்கரவர்த்தி திடுக்கிட்டவாறு, குரல் வந்த திசையை நோக்கினார்.

அரண்மனைக்கு வெளியே திருடர்கள் நாலைந்து பேராகச் சேர்ந்து ஒருவனை அடித்து அவனிடமிருந்து பொருள்களை அபகரித்துச் சென்றதைப் பார்த்தார்.

இதைப் பார்த்ததும் அவருக்கு ஆத்திரம் அதிகமாகியது.

"நம் எதிரிலேயே இந்த அக்கிரமம் நடை பெறுவதா?" என்று வருந்தினார்.
உடனே, சேவகர்களில் சிலரை அனுப்பி அந்தத் திருடர்கள் எங்கிருந்தாலும் அவர்களைப் பிடித்து வருமாறு உத்தரவிட்டார் அக்பர்.

சிறிது நேரம் சென்றது. சேவகர்கள் வெறுங்கையுடன் திரும்பினர்.

"நாங்கள் செல்வதற்குள் திருடர்கள் ஓடிப் போய் விட்டனர்,'' என்று சக்கரவர்த்தியிடம் கூறினர் சேவகர்கள்.

இதைக்கேட்ட அக்பர் மேலும், கோபமடைந்தார்.

"ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாதவர்கள். அரண்மனை எதிரிலேயே கொள்ளையடித்துக் கொண்டு போகிறார்கள் பார்த்துக் கொண்டு பேசாமல்தானே இருந்திருக்கிறீர்கள். இப்போது அந்தத் திருடர்களையும் விட்டுவிட்டுப் பொம்மைகளைப் போல் வந்து நிற்கிறீர்கள். நீங்கள் சேவகர் வேலைக்கு அருகதையற்றவர்கள். மாடு மேய்க்கத்தான் நீங்கள் லாயக்கு. என் முன்னே நிற்காதீர்கள். வெளியே செல்லுங்கள்'' என்று அவர்களை அரண்மனையிலிருந்து விரட்டி விட்டார்.

வேலை இழந்த சேவகர்கள் பட்டினியால் பெரிதும் வருந்தினர்.

"பீர்பாலிடம் சென்று நம் துயரத்தைக் கூறினால் அவராவது அரசரின் மனதை மாற்றி நம்மை மீண்டும் வேலையில் சேர்த்து விடுவார்" என்ற நம்பிக்கையுடன் வேலை இழந்த சேவகர்கள் பீர்பாலிடம் சென்றனர்.

"ஐயா, நாங்கள் ஒரு தவறும் செய்யவில்லை. எதிர்பாராதவிதமாக நடந்து விட்ட செய்கைக்காக சக்கரவர்த்தி எங்களை வேலையிலிருந்து நீங்கி விட்டார். வேலை கிடைக்காததால், நாங்கள் பெரிதும் துன்பப்படுகிறோம். நீங்கள்தான் அரசரிடம் கூறி எங்களை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளுமாறு கூற வேண்டும்,'' என்றனர்.

"என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்,'' என்று கூறிவிட்டு அரண்மனைக்குச் சென்றார் பீர்பால்.

பீர்பால் சென்றபோது கூட சக்கரவர்த்தி ஆழ்ந்த கவலையில் இருந்தார். வழக்கமாக, பீர்பால் வரும்போதே புன்சிரிப்புடன் அவரை வரவேற்கும் சக்கரவர்த்தி, அன்று வழக்கத்திற்கு மாறாக மவுனமாக இருந்தார். சற்றுநேரம் சென்றதும், அவரே பேசத் தொடங்கினார்.

Akbar and Birbal at Palace

"அரண்மனை எதிரில் நம் கண் முன்னாலேயே திருட்டு நடைபெற்றிருக்கிறதே! இங்கேயே இவ்வாறு இருந்தால், மற்ற இடங்களில் இன்னும் எவ்வளவு மோசமாக இருக்கும்?'' என்று பீர்பாலிடம் கூறினார் அக்பர்.

"அரண்மனை அருகே திருட்டு நடைபெற்று விட்டதால், நாடு முழுவதும் திருட்டும், கொள்ளையும் நிறைந்திருக்கும் என்று நினைக்கக் கூடாது. தங்கள் ஆட்சியில் திருட்டும், கொள்ளையும் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்று வெளிநாட்டிலிருந்து வந்தவர்களே தங்களைப் பாராட்டியிருக்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து ஏன் கவலை கொள்கிறீர்கள்?'' என்றார் பீர்பால்.

"வெளிநாட்டவனுக்கு நம் நாட்டைப் பற்றி என்ன தெரியும்? ஏதோ ஓரிடத்தில் பார்த்து விட்டு நம் மனம் மகிழ்ச்சியடைய வேண்டுமென்பதற்காக, அவர்கள் அவ்வாறு கூறியிருக்க வேண்டும். அதையெல்லாம் நாம் உண்மையென்று எடுத்துக் கொள்ளலாமா?'' என்றார் அக்பர்.

அப்போது மாலை மறைந்து இருள் பரவத் தொடங்கியது.

அரண்மனையிலுள்ள பணியாள் ஒருவன் வந்து பேரரசரின் அறையிலுள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றினான். அரசரின் பக்கத்தில் உயரமான மேடை ஒன்றின் மீது ஒரு பெரிய விளக்கு இருந்தது. அதையும் ஏற்றினான் அந்தப் பணியாள். பணியாள் விளக்கை ஏற்றியதும் அறை முழுவதும் ஒளி பரவியது.

இதனைப் பார்த்த பீர்பால், "அரசே, இந்த விளக்குக் கம்பத்தின் கீழே பாருங்கள். இருளாக இருக்கிறது. ஆனால், இந்த விளக்கின் வெளிச்சம் அறை முழுவதும் பரவியிருக்கிறது,'' என்றார்.

"எதற்காக இதைக் கூறுகிறாய்?'' என்றார் அக்பர்.

"அந்த விளக்கைப் போல்தான் நம் அரண்மனை விவகாரமும். இங்கிருந்து பரவும் ஒளி நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. விளக்கின் கீழே இருள் இருப்பதால், நாடு முழுவதும் இருளாக இருக்கும் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது,'' என்றார் பீர்பால்.

"ஆம். நீ கூறுவது உண்மைதான்!'' என்றார் அக்பர்.

"அவ்வாறு இருக்கும்போது அந்தச் சேவகர்களை மீண்டும் வேலைக்கு வைத்துக் கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை அல்லவா?'' என்றார் பீர்பால்.

"இதற்காகத்தான் இவ்வளவு தூரம் சுற்றி வளைத்து விஷயத்துக்கு வந்தாயா? நாளை முதல் மறுபடியும் அவர்கள் வேலைக்கு வரலாம்,'' என்றார் அக்பர்.

பீர்பால் அவருக்கு நன்றி கூறிவிட்டு, சேவகர்களிடம் சென்று, "நாளை முதல் நீங்கள் எப்போதும்போல் வேலைக்கு வரலாம்!'' என்றார்.

இதைக் கேட்டதும், சேவகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயம், பீர்பாலுக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

Source: dinamalar.com
வேலை இழந்த அரண்மனை சேவகர்கள்! | Palace Courtiers who Lost Their Jobs வேலை இழந்த அரண்மனை சேவகர்கள்! | Palace Courtiers who Lost Their Jobs Reviewed by haru on March 30, 2015 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]