Ads Below The Title

bramma ratchasan tamil story

பிரம்ம ராட்சஷன்!

ஒரு ஊரில் ஆலமரம் ஒன்று இருந்தது. அது நல்ல சுவையுடைய நீரைக் கொண்ட ஒரு குளக்கரையில் இருந்தது. அந்த ஆலமரம் முதிர்ந்த வயதை உடையது.

அதன் நிழல் எப்பொழுதும் "குளுகுளு'வென இருக்கும். ஆலமரத்தடியில் ஒரு பெரிய மேடை இருந்தது.

ஊருக்குச் செல்லும் பிரதான சாலை அந்த ஆலமரத்தை ஒட்டியே சென்றது. நான்கு பக்கமுள்ள சிற்றுõர்களுக்கும், பேரூர்களுக்கும் அந்த சாலை வழியாகத் தான் சென்றாக வேண்டும்; திரும்பி வந்தாக வேண்டும். அதனால் அந்த சாலை மக்கள் பெருக்கம் நிறைந்து காணப்பட்டது.

வெயிலில் வருகிறவர்களுக்கு ஆலமரமும் அதன் "குளுகுளு' நிழலும் அருகில் குளத்தில் கிடைக்கும் கற்கண்டு போன்ற தன்மையிலான நீரும் பாலைவனத்து பசுஞ்சோலை போலிருந்தன.

வெயிலில் வந்து களைப்புத் தீர குளத்து நீரை பருகி, முகம் கழுவி, கல் மேடையில் ஆலமரத்து நிழலில் அமர்ந்து கொள்வர். நல்ல ஓய்வு கிடைக்கும் வரை அப்படி உட்கார்ந்து கொள்வர். சிலர் துண்டை விரித்து போட்டு படுப்பதும் உண்டு.


அங்கே மக்கள் கூட்டம் எப்போதும், "ஜேஜே' என்றிருக்கும். ஆனால், சிறிது நாட்களாக ஆலமரத்தடியில் வந்து தங்கி இளைப்பாறும் மக்கள் தொகை குறைய ஆரம்பித்தது.

ஆலமர நிழலுக்கு ஓடோடி வரும் அவர்கள் இப்போது அதன் அருகில் வரவே அஞ்சத் தொடங்கினர். தொலைவிலே நடந்து சென்றனர்.

ஆலமரத்தை அருகில் கடந்து செல்ல வேண்டி வந்தால் ஓட்டமாக ஓடினர். ஆலமரத்தை திரும்பிக் கூட பார்க்காது சென்றனர். அதற்கு காரணம் அந்த ஆலமரத்துக்கு புதிதாக வந்து சேர்ந்த ஒரு பிரம்ம ராட்சஷன் தான்.

நீர் அருந்த இளைப்பாற அவர்கள் உட்காருவதற்கு முன் மரத்தின் நீண்ட கிளைகளை ஆட்டி பயமுறுத்தும். அவர்களிடம் மூன்று கேள்விகள் கேட்கும். அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்கின்றனர் என்று பார்க்கும். அவர்கள் சரியான பதிலை சொல்லாவிட்டால் அதற்கு கடும் கோபம் வரும்.

அவர்கள் தலையை கிள்ளி எடுத்து விடும். கிள்ளி எடுத்த தலையை ஆலமரக் கிளைகளில் தொங்கவிடும். அப்படி அகப்பட்ட தலைகள் ஆலமரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.

அதனாலேயே யாத்ரீகர்கள், வழிபோக்கர்கள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் ஆலமர நிழலில் தங்க அஞ்சி அதன் அருகிலேயேவரயோசித்தனர்.

ஒரு மாமன்னன் தன் படைகளுடன் வந்து இறங்கத்தக்க அளவுக்கு ஆலமரம் பெரிதாகவும், அதை விட அதன் நிழல் பெரிதாக இருந்தும் எவருக்கும் பயன்படாமல் வீணாகிக் கொண்டிருந்தது.

குளத்து நீர் எவரும் பருகப்படாமல் பாசிப்படிந்து அதில் அல்லி, தாமரைப்பூக்கள் பூக்க ஆரம்பித்தன.

அந்த ஆலமரத்தின் அருகில் சற்று தள்ளி ஒரு கிராமம் இருந்தது. அதன் பெயர் சிங்கப்பட்டி. அக்கிராமத்தில் ராமாயி என்ற பாட்டி இருந்தாள். அறுபது வயது இருக்கும். அவளுக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் வசந்தா. அவளுக்கு திருமணம் ஆகி ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவன் பெயர் சுடலை. அவனுக்கு ஆறு வயது நடந்து கொண்டிருக்கும் போது அவன் அம்மாவும், அப்பாவும் சென்ற படகு ஆற்றில் கவிழவே இருவரும் இறந்து போயினர். பேரனை வளர்க்கிற பொறுப்பு பாட்டியை சேர்ந்தது.

குழந்தை பிற்காலத்தில் பேரறிஞனாகவும், கவிஞனாகவும் வருவான் என்பது அவன் படிப்பில் காட்டிய ஆர்வமும் கேட்கத் தொடங்கிய கேள்விகளுமே தெள்ளத் தெளிவாகக் காட்டின.

எதையும் ஏன், எதற்கு என்று அவன் கேட்கத் தொடங்கி தன் அறிவை வளர்த்துக் கொள்வதில் அக்கரை காட்டினான். தன் பேரன் புத்திசாலியாக இருப்பதை அறிந்து பாட்டி மகிழ்ந்தாள்.

அப்படி ஒரு முறை அருகில் உள்ள ஊரில் நடந்த ஒரு திருவிழாவிற்கு பேரனை அழைத்துச் சென்றாள் பாட்டி. அப்படி போகும் போது பிரம்மராட்சஷன் வாழும் ஆலமரத்தை ஒட்டிய சாலை வழியாக அவர்கள் செல்ல வேண்டி வந்தது.

அந்த ஆலமரத்தில் வாழும் பிரம்ம ராட்சஷனைப் பற்றி பாட்டி நன்கு அறிந்திருந்ததால் பேரனை ஆலமரத்தை விட்டு ஒதுக்கி அழைத்துச் சென்றாள்.

பெரியதும் நிழல் கொடுக்கக்கூடியதுமான ஆலமரத்தடியில் சிறிது நேரம் விளையாடி விட்டு பிறகு குளத்தின் குளிர்ந்த நீரையும் பருகிவிட்டுச் செல்ல விரும்பினான் சிறுவன்.

""சுடலை! ஆலமரத்தில் வாழும் பிரம்மராட்சஷன் பொல்லாதது... அது ஆலமர நிழலில் தங்குகிறவர்களிடம் மூன்று கேள்விகள் கேட்கும். அந்த கேள்விகளுக்கு சரியான பதிலை கூறாவிட்டால் அவர்கள் தலையை கொய்து ஆலமரத்தடியில் கட்டித் தொங்கவிட்டு விடும். அதனால் இப்போது ஆலமரத்து அருகே செல்லவே அஞ்சுகின்றனர். வா நாம் போய்விடலாம்!'' என்றாள் பாட்டி.

""பாட்டி! அப்படி என்ன மூன்று கேள்விகளை கேட்கிறது அந்த பிரம்மராட்சஷன்? அதற்கு இவர்கள் என்ன பதில் சொன்னார்கள்?'' என்று கேட்டான்.

""முதல் கேள்வியாக உலகில் எது பெரியது?'' என்று கேட்கும்.

""சரி! அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்களாம் பாட்டி!''

""இமயமலை என்பார்களாம்!''

""அது சரியான பதில் இல்லையா?''

""ஆம்... பிரம்மராட்சஷன் அடுத்ததாக இரண்டாவது கேள்வியான நல்லதை விட தீமையே அதிகம் செய்யும் சிறிய வஸ்து எது?'' என்று கேட்கும்.

""பாம்பின் விஷம் சிறிதாக மருந்துக்கு பயன்படுகிறது. ஆனால், மரணம் விளைவிக்கவே அதிகமாக பயன்படுகிறது!'' என்பர்.

""அந்த பதிலும் சரியில்லை என்று சொல்லிவிடுமா?''

""ஆமாம்... மூன்றாவது கேள்வியாக உருண்டு வேகமாக ஓடுவது எது?'' என்று கேட்கும்.

""அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?''

""வண்டிச்சக்கரம், பணம் என்று சொல்வர். இந்த பதில்கள் பிரம்ம ராட்சஷனுக்கு திருப்தியை அளிக்காது. உடனே அவர்கள் தலையை கிள்ளி எடுத்து மரத்தில் தொங்கவிட்டு விடும். சுடலை... நாம் இங்கிருப்பது ஆபத்தை விளைவிக்கும். வா... போய் விடலாம்,'' என்று அவனது கையை பிடித்தாள் பாட்டி ராமாயி.

ஆலமரம் அருகில் சென்றான் பேரன். கால்களை அகல விரிந்து பலமாக ஊன்றி இடுப்பின் இருபுறமும் கைகளை பதித்து பெருங்குரலில், ""ஏ... பிரம்மராட்சஷா... உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல வந்திருக்கிறேன். வா... வெளியே... கேள் உன் கேள்விகளை!'' என்று கூறினான்.

""யாரடா சிறுவன் என் கேள்விகளுக்கு பதில் சொல்ல தோள்தட்டி வந்திருப்பது?'' என்றபடி ஆலமரத்தில் இருந்து வெளி வந்த பிரம்மராட்சஷன், சிறுவன் பயப்படட்டும் என்று தலைகள் தொங்கும் ஆலமரக் கிளைகளை உக்கிரமாக ஆட்டிற்று. அது புயல் வீசுவது போல பயங்கரமாக இருந்தது.

அதை கண்டு அஞ்சவில்லை. ""ஏ... பிரம்மராட்சஷா... உன் உருவம் கண்டு எள்ளி நகையாடாதே... கேள் உன் கேள்விகளை?'' என்றான்.

""சாவதென்று வந்து விட்டாய்... உன் விதியை யாரால் மாற்ற முடியும்? என் முதல் கேள்வி இதுதான். உலகிலேயே பெரியது எது?'' என்று ஆலமரத்து கிளைகளை பயங்கரமாக ஆட்டியபடி கேட்டது.

""உலகில் பெரியது அன்பு,'' என்றான்.

அதைக் கேட்டதும் பிரம்மராட்சஷனின் கண்கள் கலங்கின. "சரியான பதிலை சொல்லிவிட்டாயே?' என்பது போல சுடலையை பார்த்தது.

""அடுத்த கேள்வியைக் கேள்!'' என்றான் சுடலை.

""நன்மையை விட தீமையே செய்கிற சிறிய வஸ்து எது?''

""மனிதனின் நாவு!'' என்றான்.

தான் நினைத்திருந்த பதிலையே தங்கு தடையின்றி சொன்னதும் பிரம்மராட்சஷன் அசந்து போயிற்று. மூன்றாவதாக தான் கேட்கப் போகிற கேள்விக்கு அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்றெண்ணி, ""உருண்டு வேகமாக ஓடுவது எது?'' என்று கேட்டது.

""காலம்!'' என்றான்.

அடுத்த கணம், ""சிறுவனே! என் கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்லிவிட்ட நீ சிறந்த அறிவாளி தான். நான் தாயன்பை புரிந்து கொள்ளாமல் என் அன்னையை சிறிய வஸ்துவான என் நாவால் திட்டி வதைத்தேன். அவளை கொடுமைப்படுத்தினேன்.

""என்னை பத்து மாதம் சுமந்து பெற்ற அவள் மணி வயிற்றை எட்டி உதைத்தேன். பெற்ற மனம் துடித்தது. நான் என் தாய்க்கிழைத்த கொடுமைகளை பார்த்த ஒரு முனிவர் "நீ பிரம்மராட்சனாகக் கடவாய்' என்று சபித்துவிட்டார். அது போலாகிவிட்டது.

""நான் தவறுகளை உணர்ந்து"எனக்கு எப்போது சாபவிமோசனம்?' என்று கேட்டேன். காலம் வரும் பொழுது என்று சொல்லி விட்டு போய்விட்டார் அம்முனிவர். அதற்குத் தான் நான் இவ்வளவு நாட்களாக காத்திருந்தேன்.

""உருண்டு வேகமாக ஓடும் காலம் உன் வடிவில் வந்து என்னை சாபத்தில் இருந்து விமோசனமடைய செய்து விட்டது...'' என்று சொல்லி சுடலையை வணங்கி எழுந்த போது பிரம்மராட்சஷன் மறைந்து அழகான ஒரு இளைஞன் அங்கிருந்தான்.

அந்த இளைஞன் ஆலமரத்தில் தொங்கிய தலைகளை எல்லாம் எடுத்து மண் தோண்டி புதைத்தான். ஆலமரத்தடியில் இருந்த மேடையையும் பிற பகுதிகளையும் சுத்தப்படுத்தினான். குளக்கரையை சுற்றி வளர்ந்து புதிராக மண்டிக் கிடந்த செடி, கொடிகளை நீக்கி குளக்கரையை அழகாக்கினான்.

பிரம்மராட்சஷனின் கொடிய மூச்சுப்பட்டு வாடியும் கருகியும் போய் இருந்த ஆலமரம் இப்போது பச்சை பசேலென்ற இலைகளோடு காணப்பட்டது. மரத்தை விட்டுச் சென்ற பறவைகள் எல்லாம் திரும்பி ஆலமரத்தில் தங்கின.

அவைகளில் விதவிதமான குரலொலிகள் இனிமையாக கேட்டன. வழிப் போக்கர்களும், யாத்ரீகர்களும் ஆலமரத்தடியில் உள்ள மேடையில் தங்கி ஓய்வெடுத்து குளத்து நீரை பருகி மகிழ்ந்தனர். இவ்வளவுக்கும் காரணமான சுடலையை எல்லாரும் பாராட்டினர்.
bramma ratchasan tamil story bramma ratchasan tamil story Reviewed by haru on August 19, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]