Ads Below The Title

kadavul uyarthukirar tamil story

காய்கறிகள் விற்கும் கடை ஒன்று இருந்தது. அதில் ஜோசப் என்ற மனிதர் இருபது ஆண்டுகளாக வேலை செய்து கொண்டிருந்தார்.
அந்தக் கடையின் முதலாளி அவரது உழைப்பையும் , நேர்மையையும் வெகுவாக நேசித்தார். அங்கு பணிபுரிந்தவர்களிலேயே அவர் மட்டுந்தான் கிறிஸ்தவர். அவரது உணர்வுகளை முதலாளி மதித்தார். கடை திறக்கும்போதும் , மூடும்போதும் , வேறு சில பண்டிகை நாட்களிலும் செய்யப்படும் எந்த சடங்குகளிலும் அவர் கலந்து கொள்ளும்படி வற்புறுத்தப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அன்று மட்டும் யாருக்கும் விடுமுறை அளிப்பதில்லை. ஆனால் அவருக்கு மட்டும் ஆலயம் செல்வதற்காக , ஒவ்வொரு வாரமும் விடுமுறை அளிக்கப் பட்டது . கர்த்தர், தன்னுடைய வேலை ஸ்தலத்தில் தனக்குக் கிடைக்கும்படி செய்திருந்த சலுகைகளை எண்ணி அவர் அடிக்கடி கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்.
முதலாளி ஒரு நாள் இறந்து போனார் . அவருடைய இடத்தில் அவருடைய மகன் இருந்து கடையை நிர்வகிக்கத் தொடங்கினான். வந்த முதல் நாளிலேயே ஜோசப் , அவன் கண்களுக்கு நெருடலாகத் தெரிந்தார் .
கடையில் நடக்கும் சடங்குகளுக்கு அவர் விலகியிருப்பதும் , நல்ல வியாபாரம் நடக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் அவருக்கு மட்டும் விடுமுறை கொடுக்கப்படுவதும் அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. அத்துடன் அவருடைய பல வருட அனுபவத்தின் நிமித்தமாக அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த சம்பளத்தில் இரண்டு இளைஞர்களை நியமித்தால் அது கடையின் வளர்ச்சிக்கு உதவும் என்று நினைத்தான்.
ஒரு நாள் அவரைத் தனியே அழைத்து ,
" ஜோசப் நீங்க இருபது வருஷமா இங்கே இருந்துட்டீங்க. சில வருஷமா உங்க வேலை எங்களுக்கு திருப்திகரமானதா இல்லை. கடைக்காக நாங்க பூஜை நடத்தும்போது கலந்துக்குறதில்லை, நல்ல கூட்டம் வர்ர நாள்ல லீவு எடுத்துக்குறீங்க. இதெல்லாம் கடையோட வளர்ச்சியில நீங்க அக்கறை காட்டாததைத்தான் குறிக்குது. உங்களப் பாத்து நாளைக்கு மற்ற வேலையாட்களும் இதே மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சிட்டா கடை என்னத்துக்கு ஆகும் ? உங்களுக்கு ரெண்டு முடிவு நான் தரேன். நீங்களா வேலையை விட்டுப் போனா கூடுதலா ஒருமாச சம்பளமும் , கொஞ்சம் பணமும் தர்ரேன் , நானா அனுப்பிட்டா உங்களுக்கு தேவையில்லாத கெட்ட பேர்தான் வரும். உங்க ஆளுங்கதான் நிறைய பேரு இந்தத் தொழில்ல இருக்காங்களே. அவங்ககிட்ட சேந்துட்டீங்கன்னா உங்களுக்கும் நல்லது , அவங்களுக்கும் பிரச்சனையில்லை " .
உண்ணுகிற சோற்றில் மண்ணை அள்ளிப் போடுகிற காரியத்தை செய்துவிட்டு , ஏதோ சாதனை நிகழ்த்திவிட்டது போல அவர் முகத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். வானம் இடிந்து தலைமேல் விழுந்தது போலிருந்தது ஜோசப்புக்கு.
திருமணத்திற்குக் காத்திருக்கும் மகள் , கல்லூரிப் படிப்பில் கால் வைத்திருக்கும் மகன்கள். ஏற்கனவே இருக்கிற தேவைகளையே சந்திக்க முடியாமல் திணறும் வருமானம். இப்போது அதுவும் இல்லையென்றால் ? மனதிற்குள் கடைக்காக உழைத்த உழைப்பு நிழலாடியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதை விடப் பெரிய கடையிலிருந்து இன்னும் கூடுதலான சம்பளத்திற்கு அழைப்பு வந்ததும் ,
" இது கர்த்தர் எனக்காகக் கொடுத்த இடம் .இதை விட்டு நான்
போகமாட்டேன் " என்று மறுத்துவிட்டதும் நினைவுக்கு வந்தது .
முதலாளி மகன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் ஜோசப்பிடம் பதில் இருந்தது . இருந்தாலும் எதுவுமே பேசவில்லை. அவன் கொடுத்த கவரை அணிச்சையாய் வாங்கி சட்டைக்குள் வைத்துக் கொண்டார். எதுவும் சொல்லாமல் கடையை விட்டு வெளியேறினார் .
" கர்த்தாவே , ஏன் இதை அனுமதிச்சிங்க ? இனி எப்படிக் குடும்பத்தை நடத்துவேன் ? அக்கம் பக்கத்தில் உள்ளவங்க எல்லாம் கேலியா பாப்பாங்களே . பெண்டாட்டி , பிள்ளைகளுக்கு இதை எப்படி சொல்லப் போறேன் ? இப்படி திடுதிப்னு துரத்தி விடுற அளவுக்கு அவ்ளோ பெரிய குற்றவாளியா நான் ? " மனது புலம்பிக் கொண்டிருக்க வீட்டை நெருங்கி விட்டார்.
" ஏசுவே , இந்த விஷயத்தை வீட்டுல சொன்னா என்ன நடக்கப் போகுதுன்னு எனக்குத் தெரியலை. நீங்கதான் அவங்க மனசை திடப்படுத்தணும். கையில இருக்கிற பணம் முடியறதுக்குள்ள அடுத்த வழியைக் காட்டுங்கப்பா " . சோர்வுடன் வீட்டுக்குள் நுழைந்தார்.
லேசான தலை சுற்றலும் படபடப்பும் சிறியதொரு தடுமாற்றத்தைக் கொடுத்தன.
" என்னங்க , அதுக்குள்ள திரும்பிட்டிங்க ? " என்ற ஷீலாவிடம் ,
" ஒடம்பு என்னமோ போல இருந்தது , அதான் ". அவர் பதிலில் அதிகம் கவனம் செலுத்தாமல் ஷீலா தொடர்ந்தாள்.
" ரெண்டு மூனு நாளாவே கர்த்தர் ஒரு வசனத்தைக் கொடுத்துக் கிட்டே இருந்தாருங்க .
" நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள் " . மல்கியா 4 :2 . எதுக்காக இந்த வசனத்தைக் கர்த்தர் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருக்கார்னு கேட்டு ஜெபம் பண்ணேன். இன்னிக்கு காலைல நீங்க கடைக்குப் போனதும் கர்த்தர் இதுக்கான விடையைக் கொடுத்தார் ".
ஜோசப்புக்கு வியர்த்து விட்டது,
" அதுக்குள்ள உண்மை தெரிஞ்சு போச்சா ? " . அவரது மன ஓட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் ஷீலா தொடர்ந்தாள் .
" நம்ம சபைக்கு ராகேல்னு ஒரு அம்மா வருவாங்க தெரியுமா , மேட்டுத் தெரு ? காய்கறிக்கடை ? அவங்க மகனும் , மருமகளும் கூட ஜெர்மெனில இருக்காங்களே? " . ஜோசப்புக்கு நினைவு வந்தது.
ராகேல் அம்மா. சபையில் அடிக்கடி சாட்சியைப் பகிர்ந்து கொள்ளும் பெண்மணி. பல பாடுகளுக்கு மத்தியில் காய்கறி வியாபாரம் செய்து மகனைப் படிக்க வைத்து , வெளிநாட்டுக்கு அனுப்பியும் வியாபாரத்தை மட்டும் விடாமல் செய்து வரும் உழைப்பாளி.
" அவங்களுக்கு என்னாச்சு ? " ஜோசப்.
" அவங்களுக்கு ஒன்னும் ஆகல "
ஷீலா தொடர்ந்தாள்.
" மருமகளுக்கு அம்மா கிடையாது . அப்பா மட்டுந்தான் . இப்ப அந்தப் பொண்ணு மாசமா இருக்குதாம். பிரசவத்தை அங்கேயே வச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்களாம். அந்தம்மாவுக்கு இப்ப விசா , டிக்கெட்லாம் ரெடியாயிடுச்சாம் . அடுத்த மாசம் கிளம்புறாங்க . குழந்தை கொஞ்சம் வளந்து அவங்க திரும்பி வர எப்படியும் ரெண்டு வருஷம் ஆயிடுமாம் . அதுவரைக்கும் கடையைப் பூட்டி வச்சிருக்க முடியாது . வேற யார்கிட்டயாவது ஒப்படைச்சா திரும்ப கடையை வாங்குறது கஷ்டம் " .
ஜோசப்புக்கு இப்போது கொஞ்சம் புரிந்ததது.
" அதனாலதான் , கடையை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டுப் போனா நல்லதுன்னு நினைக்கிறாங்க. வாடகை ஒன்னும் தர வேண்டாம் . கரன்ட் பில்லும் , வரியும் மாத்திரம் கட்டிக்கிட்டு இருந்தா போதும். எனக்கென்னமோ கர்த்தர் கொடுத்த வசனத்துக்கும் , இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருக்குதுன்னு தோனுதுங்க . நீங்களும் ‍எத்தனை நாள்தான் இப்படியே மத்தவங்களுக்கே உழைச்சுக் கொடுப்பீங்க ? உங்க உழைப்பும் , அறிவும் நமக்குப் பயன்படட்டுமே. அந்தம்மா வரதுக்குள்ள நாம கொஞ்சம் சம்பாதிச்சு வேற இடத்துல கடை ஏற்பாடு பண்ணிக்கலாம். இப்போதைக்கு நீங்க கொஞ்சம் பணம் மட்டும் ரெடி பண்ணிட்டா போதுங்க ".
ஜோசப் கண்மூடி ஜெபித்தார் ,
" ஆண்டவரே , நீங்க எதை செய்தாலும் அது எங்க நன்மைக்காகத்தான் இருக்கும்ங்கறத ஒரு நிமிஷம் மறந்து ஏதேதோ புலம்பிட்டேன். மன்னிச்சிடுங்கப்பா . சத்துருக்களுக்கு முன்பாக ஒரு பந்தியை ஆயத்தப் படுத்தி என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிற தேவன் என்னை வெட்கப்பட்டுப் போக விடமாட்டிங்க. நன்றிப்பா. இனியும் நடத்துங்கப்பா " .
அவர் ஜெபித்து முடித்துக் கண்களைத் திறக்கும்போது வீட்டுக்குள் அப்துல் வருவதைப் பார்த்தார். அப்துல் பல வருடங்களாக அவர்களது கடைக்குக் காய்கறிகள் சப்ளை செய்து வருபவர் .
" என்னா ஜோசப்பு , என்னமோ கேள்விப்பட்டேன் . நீ ஒன்னும் கவலைப்படாதே. இது ஒனக்கு நல்ல நேரம்னு நெனைச்சுக்க. புதுசா வர்ர பயலுவளுக்கு , ஏற்கனவே இருக்குற ஆறுகள்லாம் முட்டாளு , தாம் மட்டுந்தான் புத்திசாலின்னு தோனும். அவனுக்கு உன் அருமை தெரியலை. நான் சொல்ற கேளு. நீ சின்னதா ஒரு கடய மட்டும் புடி. சரக்கு ஃபுல்லா நான் தரேன். சாய்ங்காலம் வித்துட்டு நீ பணம் குடுத்தா போதும் " குரலைத் தாழ்த்திக் கேட்டார்.
" வீட்டு செலவுக்கு , புதுசா கடையை புடிக்க ஏதாச்சம் காசு , கீசு வேணாலும் கூச்சப்படாம கேளு ".
ஜோசப் அவர் கையைப் பிடித்துக் கொண்டார்.
" செலவுக்கெல்லாம் காசு இருக்குது பாய் . கடையும் ரெடியாயிடுச்சு. ஒரு வாரத்துக்குள்ள எல்லாமே பண்ணிட்டு சொல்றேன் பாய் . ரொம்ப நன்றி " .
அடுக்களையை நோக்கிக் குரல் கொடுத்தார்.
" ஷீலா, கர்த்தர் தம்முடைய வார்த்தையை உறுதிப் படுத்துறார் . டீ எடுத்துட்டு வா " என்றார் .
செல்லமே ,
சில நேரங்களில் மனிதர்கள் உனக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாய்த் தோன்றலாம். ஆனாலும் கர்த்தர் எதையும் காரணமின்றி அனுமதிப்பதில்லை. உன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்தது என்று உணர்ந்து கொள்.
" அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார் "
1 சாமுவேல் 2 :8
kadavul uyarthukirar tamil story kadavul uyarthukirar tamil story Reviewed by haru on August 24, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]