Ads Below The Title

KAVALAI TAMIL STORY

கரும்பாயிரத்தின் கவலை!

கரும்பாயிரத்துக்கு ஜோசியத்தில் தீவிர நம்பிக்கை உண்டு. அதனால் தன் ஜாதகத்தை ஜோசியம் தெரிந்தவர்களிடம் தவறாமல் காட்டுவான்; தன்னுடைய எதிர்காலத்தை பற்றி அவர்கள் சொல்வதை கவனமாக கேட்டு குறித்துக் கொள்வான். அவர்கள் சொல்லியபடி தான் நடக்கும் என்ற அசைக்க முடியாத எண்ணம் அவன் மனதில் வந்துவிட்டது.பிரபல ஜோசியர் ஒருவர் அவன் ஊருக்கு ஒரு முறை வந்திருந்தார். அந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் தன் ஜாதகத்தை எடுத் துக் கொண்டு அவரிடம் ஓடினான் கரும்பா யிரம். அவனிடமிருந்து இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு அவன் எதிர்காலத்தை பற்றிய சில முக்கியமான தகவல்களை கூறினார் அந்த ஜோசியர்.

எதிர்கால பலன்களை ஜோசியர் சொல்ல கேட்ட கரும்பாயிரம் இடிந்து போய் உட்கார்ந்து விட்டான். அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவனுக்கு பயங்கரமான கஷ்ட காலம் தான். அதற்கு பரிகாரம் ஏதாவது உண்டா என்று அவரிடம் கந்தசாமி கேட்ட போது, “”நீ கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை,” என்று கைவிரித்து விட்டார் ஜோசியர். அதற்கு பின் எதுவும் செய்ய தோன்றாமல் சோர்ந்து போனான். வாடிப்போன முகத்துடன் நீண்ட நேரம் சென்று வந்த கரும்பாயிரத்தை, அவன் மனைவி கண்ணம்மா சிரித்த முகத்துடன் வரவேற்றாள். “”கண்ணம்மா! இனிமேல் நமக்கு கஷ்டகாலம் தான். உன் முகத்தில் இந்த சிரிப்பு இனிமேல் இருக்குமா என்பது சந்தேகம்தான்!” என்று விரக்தியுடன் சொல்லிவிட்டு, வீட்டின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

“என்னங்க! அந்த ஜோசியர் ஏதாவது சொல்லிவிட்டாரா? உங்களை பிடிச்சிருக்கும் இந்த ஜோசிய பைத்தியம் என்னிக்குத்தான் போகுமோ? அப்படியே கப்பல் கவுந்த மாதிரி கன்னத்தில் கை வைச்சுட்டு உட்காராதீங்க. நாளைக்கு வேலைக்கு போகணும். படுத்து உறங்கினா கவலையெல்லாம் தன்னால பறந்து போய்விடும்,” என்று கணவனுக்கு ஆறுதல் சொன்னாள்.

“கண்ணம்மா! ஒருத்தனுடைய ஜாதகப்படி தான் எல்லாம் நடக்கும். அதுல ஒருத்தன் கஷ்டப்படணும்னு எழுதியிருந்தா அவன் கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும். தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது,” என்று ஆணித்தரமாக கூறினான் கரும்பாயிரம்.

கணவனின் மனதை என்ன சொன்னாலும் மாற்ற முடியாது என்று கண்ணம்மாவுக்கு தெரியும்.

“சரி அதுக்கு என்ன இப்போ? கஷ்டம் வந்தா கஷ்டப்பட்டுட்டு போறோம். அதுக்காக இப்பவே கண்ணீர் சிந்தணுமா? அடுத்தாப்புல செய்ய வேண்டிய வேலையை பாருங்கே,” என்று விஷயத்தை அதோடு முடித்து வைத்தாள். இருந்தாலும் கண்ணம்மாவின் மனதில் கவலை வந்துவிட்டது. பொழுது விடிந்தது. கந்தசாமிக்கு ஜோசியர் சொன்னதே மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது. “எப்படி கஷ்டப்பட போகிறோமோ தெரியலையோ!’ என்று நினைத்தபடி சோர்வுடன் படுக்கையை விட்டு எழுந்தான்.

“என்னங்க! அந்த ஜோசியர் எங்க இருக்காரு? அவருடைய விலாசத்தை சொல்லுங்க. என்னோட ஜாதகத்தை அவரிடம் சென்று காட்டி, பலன் கேட்டு வருகிறேன்,” என்று கேட்டாள் கண்ணம்மா.
“வேண்டாம் கண்ணம்மா! எனக்கு கஷ்டம்னா உனக்கு மட்டும் நல்லது நடக்குமா? ஜோசியருக்கு வேறு செலவு செய்ய வேண்டாம்,” என்று அலுத்துக் கொண்டான் கரும்பாயிரம்.

“சரி வேண்டாம் விடுங்க. எனக்கு தெரிந்த இன்னொரு ஜோசியரிடம் காசு இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க குளித்து, சாப்பிட்டு விட்டு வேலைக்கு கிளம்புங்க,” என்று வேலையை கவனிக்க சென்றாள் கண்ணம்மா?
வேலை முடித்து மாலை ஆறு மணிக்கு வந்தான் கரும்பாயிரம். அவன் களைப்பு தீர, சூடாக டீ கொடுத்தாள் கண்ணம்மா. கரும்பாயிரம் முகத்தில் வருத்தம் நிறைந்து இருந்தது.

“நான் இன்னிக்கு அந்த ஜோசியரிடம் போயிட்டு வந்துட்டேன். என் ஜாதகத்திலே என்ன இருக்கு தெரியுமா? நான் இன்னும் இரண்டு வருஷத்தில் புது வீடு கட்டி, அதில் குடியேற வேண்டுமாம்,” என்றாள் கண்ணம்மா.

“உளராதே கண்ணம்மா! ஏற்கனவே எனக்கு கஷ்டகாலம் ஆரம்பித்துவிட்டது. கையில் வீடு கட்டும் அளவுக்கு பணம் இல்லை. வசதி படைச்சவங்க மட்டும்தான் வீடு கட்ட முடியும். அதெல்லாம் நமக்கு கனவுதான்,” என்று அக்கறை இல்லாமல் சொன்னான் கந்தசாமி.

“இத பாருங்க! எல்லாம் விதிப்படி நடந்துதான் தீரும். நமக்கு சொந்தமாக அரை கிரவுண்டு நிலம் இருக்கு இல்லையா? நல்ல நாளாக பார்த்து வீடு கட்டற வேலையை ஆரம்பிக்க வேண்டும். இல்லேன்னா எனக்கு கெட்ட கோபம் வரும்,” என்று அழ ஆரம்பித்தாள் கண்ணம்மா.

“ஜோசியர் சொன்னது சரியாகத் தான் இருக்கு. நீ பிடிவாதக்காரி ஆச்சே! நீ நினைத்ததை செய்து முடிக்கலைன்னா என்னை நிம்மதியா இருக்க விடமாட்டயே! எனக்கு கஷ்டகாலம் ஆரம்பித்துவிட்டது. வீடு கட்டறதுன்னா லேசான விஷயமா? சரி பார்க்கலாம்,” என்று மனைவியை சமாதானப்படுத்தினான்.

கண்ணம்மா அதோடு விட்டு விடவில்லை. கரும்பாயிரத்தை சும்மா இருக்க விடாமல் அடுத்தடுத்து செய்ய வேண்டியதை செய்ய வைத்தாள். வீடு கட்டும் வேலை ஆரம்பமாகியது. கரும்பாயிரம் வேலை செய்யும் இடத்திலும், வங்கியிலும் கடன் வாங்கி கட்டட வேலைகளை பாதியில் நின்று விடாமல் பார்த்து கொண்டான். அதனால், அவனுக்கு ஏகப்பட்ட அலைச்சல், கவலை எல்லாம் ஏற்பட்டன. எப்படியாவது வீடு கட்டி முடித்துவிட வேண்டும் என்று இரவு , பகல் பாராமல் கடுமையாக உழைத்தான் கரும்பாயிரம்.

சரியாக இரண்டு வருடம் சென்றது. கரும்பாயிரம் புதிய வீட்டை கட்டி முடித்திருந்தான். அந்த வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டான். இன்னொரு பகுதியை வாடகைக்கு விட்டான். இன்னொரு பகுதியில் தன் குடும்பத்துடன் குடியேறினான். பிறகு ஒரு வழியாக நிம்மதி பெருமூச்சுவிட்டான்.

“கண்ணம்மா! ஜோசியர் சொன்னது எவ்வளவு சரியாக இருந்தது பார்த்தியா? இந்த ரெண்டு வருஷமும் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் எப்படியோ கஷ்டப்பட்டு இந்த வீடு கட்டிவிட்டேன். இனிமேல் கவலைப்பட வேண்டாம்,” என்று சொன்ன கணவனை பார்த்து சிரித்தாள் கண்ணம்மா.

“ஜோசியர் சொன்னது ஒண்ணும் பலிக்கவில்லை எல்லாம் நான் போட்ட திட்டம்தான்! நான் என் ஜாதகத்தை எந்த ஜோசியரிடமும் எடுத்து செல்லவில்லை. என் ஜாதகப்படி இரண்டு வருஷத்தில் வீடு கட்ட வேண்டும் என்று உங்களிடம் பொய் சொன்னேன். உங்கள் கவனத்தை நல்ல வழியில் திருப்ப விரும்பினேன். ஜோசியர் சொன்னதையே நினைத்துக் கொண்டு நீங்கள் சோர்வடைய கூடாது என்பதற்காக அப்படி பொய் சொன் னேன். இப்போது சொல்லுங்கள், நீங்கள் உண்மையிலேயே கஷ்டத்தை அனுபவித்தீகளா?” என்று கேட்டாள் கண்ணம்மா.

“ஆமாம்! வீடு கட்டுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என்று விட்டுக் கொடுக்காமல் சொன்னான் கரும்பாயிரம்.
“நிச்சயமாக இல்லை. எப்போ வீடு கட்டினாலும் நீங்கள் இதே அளவு சிரமப்பட வேண்டும்தானே? மற்றபடி உங்களுக்கு வேறெந்த கஷ்டமும் இல்லையே? நீங்கள் பட்ட கஷ்டம் இன்று வீடு ஆகிவிட்டது. எந்த நஷ்டமும் வரவில்லையே! உண்மையில் கஷ்டம் என்றால், நாம் இருந்த நிலையை விட மோசமாக போயிருக்க வேண்டும். இன்று நாம் முன்னை விட நன்றாக, வசதியாக இருக்கிறோம். சரிதானே!” என்று கணவனுக்கு விவரமாக விளக்கினாள் கண்ணம்மா.

அப்போதுதான் கரும்பாயிரத்துக்கு மனைவியின் புத்திசாலித்தனம் புரிந்தது. “”விதியை மதியால் வென்று விடலாம்” என்பதை நிரூபித்துவிட்டாள் என் மனைவி. நான் ஜோசியர் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தால் மனதாலும், உடலாலும் உற்சாகம் இழந்திருப்பேன். நிச்சயம் கஷ்டப்பட்டிருப்பேன். உடலால் உழைப்பிற்கு பலன் நிச்சயம் உண்டு. எனக்கு இப்போது ஒரு சொந்த வீடு கிடைத்துவிட்டது. நன்றி கண்ணம்மா,” என்று பெருமிதம் கொண்டான் கரும்பாயிரம்.
KAVALAI TAMIL STORY KAVALAI TAMIL STORY Reviewed by haru on August 22, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]