kutty thozhi குட்டித் தோழி
குட்டித் தோழி
இரயில் அரை மணி நேரம் தாமதம். எந்த ரயில் சரியான நேரத்திற்கு வருகிறது? இரயில் நிலையத்தில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் இந்த ஞாயிற்றுக்கிழமை அதிக கூட்டம். காட்பாடியில் இருந்து பெங்களூர் செல்ல எப்படியும் நான்கு மணி நேரம் பிடிக்கும். எப்படி நேரத்தை செலவு செய்வது? புதிதாய் வாங்கிய புத்தகம் இரண்டையும் வீட்டிலேயே விட்டுவிட்டேன். ஹிக்கின்போத்தம்ஸ் கடை எதிர் பிளாட்பாரத்தில் தான் இருந்தது. அங்கு சென்றுவர சோம்பேறித்தனம்!"டங் டங். பயணிகள் கவனத்திற்கு, சென்னையில் இருந்து பங்காருப்பேட்டை வழியாக பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஒன்றாவது பிளாட்பாரத்தில் வந்து சேரும்."
என்னுடைய சிறு வயதில், 'எப்படி இந்த அக்கா வார்த்தை தவறாமல், ஒரு தவறில்லாமல் அறிவிக்கிறாங்க'ன்னு அதிசயித்தது உண்டு.
வண்டி வந்தது. என் இருக்கையைத் தேடிப் பிடித்து உட்காருவதற்குள் பெரும் சிரமமாகிவிட்டது. எதிரிலே மூன்று நாள் தாடியுடன் முப்பத்தைந்து வயதான கணவன், முப்பதை சற்றே கடந்திருக்கும் மனைவி மற்றும் எல்லாம் வாழ்ந்து முடிந்தது போன்ற தோற்றத்தில் ஒரு பெரியவர். இரயிலின் சத்தத்தைவிட அதிகமாக அருகே அழுகுரல். குழந்தைகளின் சண்டை. சண்டையிட்டது ஒரு ஆறு வயது பெண்குழந்தையும் நான்கு வயது சிறுவனும்.
"விடுடா விடு" ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளுக்காக சண்டை. "மம்மி அந்தப் பையன் பீப்பீல எச்சி வெச்சிட்டான்". லேசான சிணுங்கல் அந்தப் பெண் குழந்தையிடம்.
"அமுதா.. இங்க வா. தம்பி தானே.. வா வந்து தாத்தாகிட்ட உட்கார்." அப்போது தான் தெரிந்தது அந்தக் குழந்தை எதிரே அமர்ந்திருந்த 35-30ன் குழந்தை என்று.
"தா அதை முதலில்; பையில் வைக்கிறேன். அமைதியா எங்காச்சும் இருக்கியா நீ?" இது அமுதாவின் அப்பா.
ஒரு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை. பயணம் முழுவதும் அமுதாவின் அட்டகாசங்களை மட்டுமே நோட்டமிட்டபடி நான். மடிக்கு மடி தாவினாள். தாத்தாவிடம் கொஞ்சினாள். அம்மாவிடம் அடாவடித்தாள். அந்தச் சிறுவனிடம் "உன் பேச்சு டூ" என்றாள். அப்பாவிடம் அடக்கமாக சில நிமிடம். என் மடிக்கும் வந்து சேர்ந்தாள்.
"பாப்பா பேரு என்ன?"
"பாப்பாவா? யாரு பாப்பா? I am a big girl"
"ஓ அப்படிங்களா மேடம்? சொல்லுங்க உங்க பேரு என்ன?
"அமுதா.. உங்க பேரு என்ன?" மழலைத் தமிழில் கேட்டாள்.
தமிழே அழகு! அதுவும் மழலைத்தமிழ் அழகோ அழகு..
"விழியன்"
"குட் நேம். ஹலோ விழியன். ஹவ் டு யு டு?" என் கையைக் குலுக்கினாள்.
அடடா எனக்கு இது தோன்றாமல் போச்சே. பக்கத்தில் கடன் வாங்கிய வார இதழை மூடி வைத்து விட்டேன். அடுத்த ஒரு மணி நேரம் என்னைப் படாதபாடு படுத்திவிட்டாள். கேள்வி மேல் கேள்வி. "நீங்க எங்க வேலை செய்யறீங்க. என்ன கேம்ஸ் விளையாடுவீங்க? ஏன் இவ்வளவு குண்டா இருக்கீங்க? எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?" சலிக்காமல் பதில் தந்தேன்.
ஒரு கட்டத்தில் அவள் கேள்விகளில் இருந்து தப்பிக்க அவளிடம் சின்ன விளையாட்டு விளையாடினேன்.
"அமுதா இது என்ன?"
"இது கூட எனக்குத் தெரியாதா? சர்க்கிள்"
"சரி. இந்த வட்டம் மாதிரி என்ன என்ன பொருள் உனக்குத் தெரியும்? சொல்லு பார்ப்போம்."
"இட்லி, தோசை, அம்மா வளையல், நிலா, சன், பாட்டி பொட்டு, ம்ம்ம் காயின், என் டாலர்... .." எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆரம்பித்தவள் கூட்ஸ் வண்டிபோல சொல்லிக்கொண்டே போனாள்.
அதன் பின்னர் பாட்டு ஒன்றை சொல்லித் தந்தேன். அவளும் ஆடிக்கொண்டே பாட்டு பாடி என்னையும் ஆட வைத்தாள். பேசிப் பேசி என் சக்தியே குறைந்துவிட்டது. ரயில்வே கேண்டீனில் இருந்து பஜ்ஜி போண்டா வந்தது. ஒரு ப்ளேட் கொடுக்கச் சொன்னேன். மூன்று போண்டா பதினாறு ரூபாய். ஒன்றை எடுத்து அமுதாவிடம் கொடுத்தேன். அவள் அம்மாவைப் பார்த்து சாப்பிடட்டுமா என்று கேட்பாள் என எதிர்பார்த்தேன்.
எதிர்பாராத பதில்!
"அங்கிள். இது பேட் ஆயில்ல (bad oil) செய்து இருப்பாங்க. ஸ்டொமக் ப்ராப்ளம் வரும். நீங்க இப்பவே குண்டா இருக்கீங்க. இன்னும் சாப்பிட்டா அவ்வளவு தான்"
சுரீர் என்று மண்டை மீது அடித்தது போல இருந்தது. கேண்டீன் சர்வர் வேகமாக நடையைக் கட்டினார். மிகவும் நெருடலாகிவிட்டது. வாயில் வைத்ததை உண்டுவிட்டு மீதி இருந்த இரண்டு போண்டாவை அந்த வழியே யாசகம் கேட்டு வந்த ஒரு வயதான பாட்டியிடம் கொடுத்தேன்.
அமுதா என்னைப் பார்த்து அநாயசமாக, "அவங்க ஒடம்பு கெட்டுப்போனா பரவாயில்லையா?" எனக் கேட்டுவிட்டு அவள் அம்மாவின் மடியினில் குடிபெயர்ந்தாள்.
என்ன செய்வதென தெரியாமல் கண்ணயர்ந்தேன். குப்பம் ரயில் நிலையத்தில் ஜன்னலோர சீட் காலியானது. அமுதா மீண்டும் வந்து மடி மீது உட்கார்ந்து கொண்டாள்.
அவள் வகுப்புக் கதைகளைக் கூற ஆரம்பித்தாள். தன் தோழி ஜெனி·பர் வைத்திருக்கும் பென்சில் பாக்ஸ் முதல் அவள் வகுப்பு ஆசிரியை வரை ஓயாமல் பேசினாள். எத்தனை உன்னிப்பான பார்வைகள், நினைவுகள், கவனிப்புகள். அவள் பேசி எனக்குத் தாகம் எடுத்தது.
"அமுதா காபி, டீ, பால் ஏதாச்சும் குடிக்கறியா, இல்ல இதுக்கும் ஏதாச்சும் வெச்சிருக்கியா?"
"நீங்க குடிங்க"
டீ குடித்தேன். பிளாஸ்டிக் கப்பை கீழே போட வந்தேன், அமுதாவின் பார்வையில் ஏதோ இருப்பது புரிந்தது.
"கீழே போடாதே" என்ற எச்சரிக்கை கண்களாலே. நானும் என்ன செய்ய என்று கேட்டேன்.
உடனே தன் அம்மா அருகிலிருந்த கவரை எடுத்து நீட்டினாள். அதில் ஏற்கெனவே 4-5 கப்புகளும், பிஸ்கட் கவர்களும் இருந்தன. வார்த்தைகள் தேவையில்லை அவள் செய்கைக்கு. எத்தனை பாடங்களை சொல்லாமல் சொல்லித் தருகிறாள்.
அள்ளி அணைத்தபடி "யாருடா உனக்கு இதெல்லாம் சொல்லித் தந்தது?" ஆனந்த ஆச்சரியத்தில் நான். அவள் முகத்தில் புன்னகை. அப்பாவையும் அம்மாவையும் பார்த்தாள். அப்பாவிற்கு சந்தோஷம். மெல்லத் தலையாட்டியபடி என் காதருகே வந்து "எங்க புவனா மிஸ்" என்று ரகசியம் பேசினாள்.
இதன் நடுவே, காட்பாடியருகே ஒரு சிறுவனிடம் சண்டையிட்டாளே அந்தக் குடும்பம் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கியது. அமுதா ஓடிச்சென்று அந்தப் பீப்பீயை அவனுக்குப் பரிசளித்து வந்தாள்.
"உனக்கு இதே தொழிலாப் போச்சு". அமுதாவின் அப்பா தன் பணத்தை இப்படியே விரயப்படுத்துகிறாள் என்று வருத்தப்பட்டார்.
"அங்கிள், நாம ஏதாச்சும் கேம் விளையாடலாமா?" என்றாள்.
நான் "இப்போ ஐந்து கண்ணாடிப் பொருள்களை சொல்லு பார்ப்போம்" என்றேன்.
"உங்க மூக்குக் கண்ணாடி" விழுந்து விழுந்து சிரித்தாள் கள்ளமில்லாமல். "ஜன்னல் கண்ணாடி" "கிஸான் பாட்டில்" "அப்புறம்..ம் ம்.. அதோ லைட் மேல கண்ணாடி" "அங்ங். அப்பா குடிப்பாரே அந்த old monk பாட்டில்.. .." நிசப்தம். எங்கள் உரையாடலை சுற்றி இருந்த அனைவரும் ரசித்துக் கொண்டிருக்க, அனைவருக்கும் ஆச்சர்யம்.
படால்..படால் என்று அமுதாவின் கன்னம் பதம் பார்க்கப்பட்டது. அவளைத் தன் பக்கம் இழுத்தார் அவள் அப்பா. "சார்.." என்று நான் தடுக்க..முறைத்தார்.
அமுதா அழுது அழுது தூங்கிவிட்டாள். கலகலவென இருந்த இடம் காலியானது போல இருந்தது.
கே.ஆர்.புரத்தில் வண்டி நின்றது. அந்தக் குடும்பம் இறங்கியது. இன்னமும் அம்மா தோள்மீது தூங்கியபடி அமுதா. பத்தடி நடந்த பின்னர், மெல்லக் கண்களைத் திறந்தவள் மெல்லிய சிரிப்பை என் மீது வீசிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்.
அந்தக் குட்டித் தோழியை இனி எப்போது காண்பேனோ என்ற ஏக்கம் மனதை நிறைத்தது.
kutty thozhi குட்டித் தோழி
Reviewed by haru
on
August 19, 2016
Rating:
No comments