saaba vimochanam tamil story
சாப விமோசனம்!
ஒரு சமயம் தேவலோகத்தில், தேவர்கள் உற்சாக மிகுதியால் அளவுக்கு மீறி அமிர்தத்தை சுவைத்து மகிழ்ந்தனர். எனவே, போதை தலைக்கேறி தாம் என்ன செய்கிறோம் என்பதை மறந்து பூஜைக்குரிய பூங்காவனத்தை நாசம் செய்தனர்.இச்செய்கையினால் கோபமுற்ற தேவேந்திரன் அவர்களைக் கண்டித்து, “”நீங்கள் செய்த இப்பாபச் செயலுக்கு பூலோகத்தில் தேனீக்களாக மாறி அங்கு காட்டிலுள்ள பூச்செடிகளிலிருந்து தேன் சேகரித்து பிழைத்துக் கொள்ளுங்கள். கஷ்டப்பட்டு உழைத்தால் உங்களுக்கு நல்ல புத்தி உண்டாகும்,” என சபித்தார்.
தங்கள் தவறை உணர்ந்த தேவர்கள், “”பிரபு! நாங்கள் அறியாமல் செய்த இக்குற்றத்தை மன்னித்து தங்களுக்கு பணிவிடை செய்ய அருள் புரியுங்கள். சாப விமோசனம் அளியுங்கள்!” என்று வேண்டினர்.
“”அற்பர்களே! நீங்கள் செய்ததோ மாபெறும் குற்றம். கொடுத்த சாபம் கொடுத்ததுதான். அதைத் திரும்பிப் பெற இயலாது. இருப்பினும் இச்சாபத்திலிருந்து விடுதலைப் பெற ஒரே வழிதான் உள்ளது. காட்டில் தேன் சேகரிக்க வரும் வேடர்கள் தீ பந்தத்தோடு தேன் அடையில் வாழும் உங்களைத் தீயால் விரட்டி தேனை தங்கள் சுரை குடுக்கையில் சேகரித்துக் கொள்வர். ஆனால், எவன் ஒருவன் உங்கள் வேண்டுகோள்படி தீங்கு செய்யாமல் தேனைச் சேகரித்துக் கொண்டு நீங்கள் வாழும் தேன் அடையை கடலில் வீசி எறிகிறானோ அப்போது தான் நீங்கள் உங்கள் சுய உருவை அடைந்து என்னை அடைவீர்கள்,” என்றார் தேவேந்திரன்.
சாபத்தினால் தேவர்கள் தேனீக்களாக மாறி விந்தியமலை சாரல் காட்டில் தேனடையில் வாசம் செய்தனர். வழக்கம் போல் தேன் சேகரிக்கும் வேடர்கள் தீப்பந்தத்தில் கொளுத்தி தேனீக்களை விரட்டினர்.
ஒரு தேனீ தன் இனிய குரலில், “”அன்பார்ந்த வேடர்களே… எங்களைத் தீ பந்தத்தில் சுடாதீர்கள். உங்களுக்கு வேண்டிய தேனைத் தருகிறேன்,” என்றது.
வேடர் தலைவன் இக்குரலைக் கேட்டு, “”ஏதோ பிரமைப்போல் தோன்றுகிறது. தேனீயாவது பேசுவதாவது!” என்று சிரித்துக் கொண்டே சென்றுவிட்டனர். இது வழக்கமாக நடந்து வந்தது. துன்பத்திலிருந்து விடுதலைக் கிடைக்காமல் தேனீக்கள் தவித்தன. கடவுளை நினைத்து வேண்டின.
ஒரு நாள் நல்ல உள்ளம் படைத்த தர்மன் என்ற வேடன் தீ பந்தத்தோடு வந்தான். வழக்கம் போல் அவனைக் கண்ட தேனீ, “”அன்பனே! கொஞ்சம் நில். நான் சொல்வதைக் கேள். உன்னை செல்வந்தனாக மாற்றுவேன்,” என்றது.
அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்த தர்மன்தான் காண்பது கனவா அல்லது நினைவா என்ற குழப்பத்தோடு தேனீயின் வேண்டுகோள்படி தீப்பந்தத்தை எறிந்துவிட்டு அது சொல்வதைக் கேட்க இசைந்தான்.
“”நண்பனே! நாங்கள் தேவர்கள். எங்கள் தலைவரின் சாபத்தால் தேனீக்களாக மாறி அல்லல் படுகிறோம். எங்களைக் காப்பாற்ற நீதான் உதவ வேண்டும். அதாவது நீ எங்கள் அருகில் வந்து எங்களுக்கு எவ்வித தீங்கும் செய்யாமல் தேனை எடுத்துக் கொண்டு எங்கள் அடையை கடலில் வீசி எறிந்து விடு. இதைச் செய்தால் உன்னை பெரிய செல்வந்தனாக மாற்றுவோம்,” என்றது.
“”நான் உங்களுக்கு ஒரு தீங்கும் விளைவிக்கமாட்டேன். உங்கள் விருப்பப்படியே செய்கிறேன்,” எனக் கூறி தேன் அடைக்கு அருகில் சென்றதும் சுரைக் குடுக்கையில் தேன் தானாக நிரம்பியது. உடன் தேன் அடையை எடுத்து கடலில் வீசினான். அடுத்த நிமிடமே தேனீக்கள் தேவர்களாக மாறினர்.
“”நண்பனே! நீ தினந்தோறும் நாங்கள் வசித்த மரத்தடியில் உன் சுரை குடுக்கை வைத்தால் அது நிறைய தேவாமிர்த தேன் நிரம்பும். அதை அருந்துபவர்கள் எந்த நோயால் அவதியுற்றாலும் அதிலிருந்து நிவாரணம் பெற்று சுகம் பெறுவார்கள். அதனால் நீ மேன்மை அடைவாய்!” எனக் கூறி மறைந்தனர்.
அதன்படி தர்மனும் தினந்தோறும் மரத்திலிருந்து தேனைச் சேகரித்துக் கொண்டு நகரத்தில் பெரிய தனவந்தர்களுக்கு தன் தேவாமிர்த தேனை அளித்து அவர்களை நோயிலிருந்து விடுவித்து சுகம் பெறச் செய்தான். இத்தேனைப் பருகியதால் இளமை தோற்றம் கொண்டனர் பலர். மக்கள் ஆதரவினால் தர்மன் பெரிய செல்வந்தனாக மாறினான்.
தர்மனின் அருகில் வசித்த அவன் இனத்தைச் சேர்ந்த மார்க்கன் என்ற மற்றொரு வேடன் தர்மனின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைக் கொண்டான். நானும் தான் தேன் சேகரித்து வருகிறேன். ஆனால், தர்மன் கொண்டு வரும் தேன் எப்படி தேவாமிர்தமாகிறது. இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என சந்தேகம் கொண்டு ஒரு நாள் தர்மன் காட்டிற்கு செல்லும் போது அவன் அறியாமல் மார்க்கனும் அவனைப் பின் தொடர்ந்தான். தர்மன் மரத்தடியில் தேன் சேகரித்துச் செல்வதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு அதுபோல் தேன் எடுத்து தானும் செல்வந்தனாக மாறலாமென்று அவனைப் பேராசை ஆட் கொண்டது.
பொறாமையும், பேராசையும் மார்க்கனை வழித் தவற செய்தது. ஆகவே, யாவரும் அறியாமல் தன் குடுக்கையை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக மரத்தடியை அடைந்தான். நற்குணம் கொண்ட தர்மனுக்கு தான் தேவர்கள் அருள் புரிந்தனர். பேராசைப் பிடித்தவர்களுக்கல்ல. அதனால் மார்க்கன் மரத்தடியில் குடுக்கையை வைத்ததும் தேனீக்கள் எங்கிருந்தோ கூட்டமாக வந்து அவனை சூழ்ந்து கொட்டின. வலி தாங்காமல் ஓட்டம் பிடித்தான் மார்க்கன். அப்போதும் அவனை விட்டபாடில்லை.
“”கடவுளே நான் செய்தது தவறு தான் என்னைக் காப்பாற்றுங்கள்!” எனக் கூறினான். தேனீக்கள் மறைந்தன. ஆனால் தேனீக்கள் கொட்டிய வேதனை தாங்காமல் தர்மனின் காலில் விழுந்து பேராசையால் தான் செய்ததைக் கூறி தன்னை மன்னிக்கும்படியும் தன் வேதனையைப் போக்கும்படியும் வேண்டினான்.
நற்குணம் படைத்த தர்மன், “”நண்பா! நீ செய்தத் தவறை உணர்ந்து மன்னிப்புக் கோறுகிறாய். கவலைப்படாதே!” என்று ஆறுதல் கூறி தன் தேவாமிர்த தேனைக் கொடுத்து பருகச் செய்தான். அடுத்த நிமிடமே அவன் வேதனை மறைந்தது.
பிறகு அவனுக்கு நல்வழிக் கூறி, “”பிறருக்கு அன்புக் காட்டி உதவி செய்தால் நீ உயர் அடைவாய். இந்த பணப்பை கொண்டு நேர்மையாய் உன் தொழிலை செய்!” என்று அறிவுரைக் கூறினான்.
மார்க்கனும் திருந்தி மக்களிடம் பாராட்டுப் பெற்று மேன்மை அடைந்தான்.
saaba vimochanam tamil story
Reviewed by haru
on
August 24, 2016
Rating:
No comments