Ads Below The Title

ulagathiku uppai iru உலகத்திற்கு உப்பாய் இரு

உலகத்திற்கு உப்பாய் இரு

ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை' கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு' என்று கட்டளை போட்டது 'தலை'. ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன் முறையிட்டான். 'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்' என்று சொன்னது.

மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் 'ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?' என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். 'வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்' என்று சொல்லி விட்டார்.

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை 'எனக்குத் தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு பிடித்துக் கேள்' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்டபோது. 'எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது' என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.

மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே 'ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன' என்று சொன்னது. அப்போது மன்னன் 'நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்' என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் 'கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன' என்றது.

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது
ulagathiku uppai iru உலகத்திற்கு உப்பாய் இரு ulagathiku uppai iru உலகத்திற்கு உப்பாய் இரு Reviewed by haru on August 19, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]