Ads Below The Title

fathers plan tamil story

ஒரு அழகான குடும்பம் இருந்தது. அப்பா, அம்மா ஒரு மகன்.
அப்பா தொலை தூரமுள்ள ஒரு ஊரில் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வந்து போவார்.
அப்பா அருகிலில்லை என்றாலும் , சில வியாபாரிகள் மூலமாக அவர்களுக்குத் தேவையான பணம் , பொருட்கள், ஆடைகள் போன்ற அனைத்தையும் ஏராளமாக அனுப்பி வைப்பார். மகனும் தனக்குத் தேவையான பொருட்களை அவர்களிடம் சொல்லி அனுப்புவான். அவர்கள் அப்பாவிடம் சொல்லி வாங்கி வருவார்கள்.
மகன் இளைஞனானான். அவனுக்கு ஒரு ஆசை வந்தது. அந்த ஊரின் பல இளைஞர்களிடம் Pony என்ற ஒரு வகையான மட்டக்குதிரைகள் இருந்தன . அதுவே அவர்களின் பெருமை. அவர்களைப் போலவே தனக்கும் ஒரு மட்டக்குதிரை வேண்டும் என்று விரும்பினான் .
அதனை அப்பாவிடமும் சொல்லி அனுப்பினான். அப்பா நிச்சயம் சீக்கிரமாகவே குதிரை வாங்கி அனுப்புவார்
என்று கற்பனை செய்து மகிழ்ந்தான்.
நாட்கள் ஓடின. குதிரை மட்டும் வரவில்லை. சோர்ந்து போனான். அப்போது அப்பாவிடமிருந்து
ஒரு ஆள் வந்தார்.
" ஆஹா! அப்பா எனக்கு குதிரை அனுப்பிட்டாங்க" சந்தோஷமாய் குதித்தபடி அவரிடம் சென்றான்.
வந்தவர் அவனிடம் குதிரை பற்றி எதுவுமே பேசவில்லை.
" தம்பி கிளம்பு. நீ ஒரு மாதம் என்னோடு இருக்கணும் " அவனை அழைத்துச் சென்றார். அவனும் அவர் குதிரை வாங்கத்தான் அழைக்கிறாரோ என்று எண்ணிக் கிளம்பினான்.
அவர் ஒரு மைதானத்திற்கு அவனை அழைத்துச் சென்று அவனை ஓடச் சொன்னார். அவன் ஒன்றும் புரியாமல் ஓடினான். இது ஒரு வாரம் தொடர்ந்தது. பிறகு வாள்சண்டை கற்றுக் கொடுத்தார். அவன் வெறுத்துப் போனாலும் கற்றுக் கொண்டான்.
ஒரு மாதம் முடிந்தது. குதிரை பற்றி எதுவுமே சொல்லாமல் போய் விட்டார். அவனுக்கோ அழுகை அழுகையாக வந்தது.
இன்னும் சில மாதங்கள் ஓடின. திடீரென வாசலில் குதிரை கனைக்கும்
சத்தம்.
"ஐ ! அப்பா குதிரை அனுப்பிட்டாங்க " தலைகால் புரியாமல் ஓடினான். அங்கே ஒரு மனிதர் குதிரையில் இருந்தபடி கேட்டார்,
" தம்பி போகலாமா?" .
சரி எங்காவது அழைத்துச் சென்று குதிரையை ஒப்படைப்பார் போலும் என்று நினைத்தபடி அவர் பின்னால் போனான்.
அவரோ இறங்கவேயில்லை. குதிரையோ வேகம் எடுத்தது. கால் கடுக்க இவனும் ஓடினான். நெடுந்தூரம் சென்று குதிரை காட்டுக்குள் நின்றது.
அவர் சொன்னார்
" தம்பி நீ ஒரு மாதம் என்னோடு இருக்கணும் " . சரி. இவராவது குதிரை கொடுத்தால் போதும் என்று எண்ணித் தலையசைத்தான்.
ஒரு மாதம் முழுக்க அவர் அவனுக்கு எலும்பு முறிவுக்கும் , தசைப்பிடிப்புக்கும் மருத்துவம் பார்ப்பதையும் , காயத்துக்கும் விஷக்கடிக்கும் பயன்படுத்தும் பச்சிலைகளையும் கற்பித்தார். குதிரையைத் தொடக்கூட விடவில்லை.
ஒரு மாதம் முடிந்தது. "சரி தம்பி நீ போகலாம் " என்று சொல்லிவிட்டுக் குதிரையுடன் போய்விட்டார் இதுவும் போச்சா ? அழுதுகொண்டே அப்பாவைக் குறை சொல்லிக் கொண்டே வீடு சென்றான்.
"இவரெல்லாம் ஒரு அப்பாவா? கேட்டதைக் கொடுக்காமல் என்னை நாய் மாதிரி அலையவிட்டு விட்டாரே !"
மற்றவர்கள் மட்டக் குதிரையில் போவதைப் பார்த்தால் துக்கம் தொண்டையை அடைக்கும். அப்பா மேல் வெறுப்பு பொங்கும். குதிரை ஆசையை மறந்தே போனான்.
சில மாதங்கள் கழித்து ஒரு நாள் வாசலில் குதிரை கனைக்கும் சத்தம். ஆர்வமில்லாமல் வெளியே சென்று பார்த்தான். அவன் கண்ட காட்சி அதிர வைத்தது. வெளியே நின்றிருந்தது அப்பா. அவருடன் அழகான ஒரு வெள்ளைக் குதிரை. அதுவும் அவன் கேட்ட மட்டக்குதிரை அல்ல. உயர்ந்த அரேபியக்குதிரை.
அப்பாவைக் கட்டிக்கொண்டு அழுதான். அவரிடம் கேட்டான்,
" இதை ஏம்ப்பா முதல்லேயே கொடுக்காம தேவையில்லாத காரியங்களால என்னை வெறுப்பேத்தினிங்க?"
அப்பா அவன் நெற்றியில் முத்தமிட்டு சொன்னார்,
" நீ கேட்டது மட்டக்குதிரை. நான் என் பிள்ளைக்குக் கொடுக்க விரும்பியது உயர்ஜாதிக்குதிரை . ஆனால் அதை வைத்து நிர்வகிக்க உனக்குப் பயிற்சி வேண்டும். குதிரை ஓடிப்போனால் ஓடிப் பிடிக்கவும், யாராவது குதிரையைக் கவர்ந்து கொள்ள உனக்கு ஆபத்து ஏற்படுத்தினால் தற்காத்துக் கொள்ளவும் முதல் நபரைக் கொண்டு பயிற்றுவித்தேன். அடுத்த பயிற்சியில், ஆளில்லாத இடத்தில் உனக்கோ , குதிரைக்கோ அடிபட்டு விட்டால் நீயே சமாளித்துக் கொள்ளும் திறமையைப் பெறவைத்தேன் . இப்போது நீ முற்றிலும் தகுதியுள்ளவன். நான் செய்ததில் எதாச்சும் தவறு உண்டா? " .
கண்ணீரோடு மகன் சொன்னான் ,
" இல்லப்பா. உங்க அன்பும், ஞானமும் ஈடில்லாதது. என்னுடைய சிந்தனைக்கு அது எட்டாதது"
செல்லமே! அழாதே. நீ கேட்டதை விட சிறப்பானதை அப்பா தருவார். அதற்கான பயிற்சிதான் இது. அவர் அனுப்பும் ஒவ்வொருவருமே உனக்கான பயிற்சியாளர்கள்தான். அவர் செய்யும் எதுவுமே உனக்கு சிறப்பானதைக் கொடுக்கத்தான்.
" நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார். தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? "
எபிரேயர் 12 :7

fathers plan tamil story fathers plan tamil story Reviewed by haru on September 22, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]