mun kobam tamil story
முன் கோபம்!
ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும்.கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.
நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.
அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.
ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.
முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!
நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.
அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க் அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.
எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.
மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.
mun kobam tamil story
Reviewed by haru
on
September 17, 2016
Rating:
No comments