Ads Below The Title

ullathai payanpaduthuvom tamil story

அடர்ந்த காடு ஒன்று இருந்தது.
சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.
அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் . அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.
நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது . இருவரையும் நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி. தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார்.
மறுநாள் இரண்டு வீரர்களையும் அவருடைய இடத்துக்கு வரவழைத்தார் .
" இளைஞர்களே! இதுவரை உங்களுடைய பராக்கிரமத்தால் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி . இதில் ஜெயிக்கும் ஒருவன்தான்
தலைவனாக முடி சூட்டப்படுவான். இப்போது உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும் , சமையல் பாத்திரங்களும் , நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும் கொடுக்கப்படும். நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும் வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் . தீர்ந்த பிறகு காற்றில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக் கடற்கரையில் வைத்துக் கொளுத்துங்கள் . அதிலிருந்து வரும் புகையைக் கண்டவுடனேயே இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம் . உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன்தான் தலைவனாகத்
தேர்ந்தெடுக்கப்படுவான் " என்றார்.
மஞ்சள் மரம் என்பது அந்தக் காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
தலைவர் சொன்ன நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு ஆளுக்கொரு தீவுக்குப் பயணமானார்கள் . பொதுவாகவே ஒவ்வொரு காட்டுவாசிக்கும் ஒரு நாளைக்கு ஒரு படி சோளம் தேவைப்படும். அந்த இளைஞர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் என்பதால் அவர்களுக்கு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகத் தேவைப்படும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு மூட்டை சோளம் அவர்களுக்கு மூன்று மாத காலம் வரும் . இறைச்சித் தேவைகளுக்கு அந்தத் தீவில் கிடைக்கும் முயல்களும் , மீன்களும் போதுமானதாக இருக்கும். ஆனால் சோள அடையோ , சோள சோறோ சாப்பிட்டால்தான் அவர்களுக்குப் பசி அடங்கும்.
அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள். போட்டி ஆரம்பமாகிவிட்டது . இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள்.
நாட்கள் ஓடின. மூன்று மாதம் முடிந்தது. படகுக்காரர்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது.
அவன் கரைக்கு வந்ததும் மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான் ,
" தலைவா , எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தும் நான் சாமர்த்தியமாக இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன். அவனும் என்னைப் போலத்தாக்குப் பிடித்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன் " என்றான்.
தலைவருக்கு அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அச்சம் உண்டாகிவிட்டது . இருந்தாலும் இன்னும் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்க முடிவு செய்தார். இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது . தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார். படகோட்டியை அழைத்து ஒரு படகை எடுக்கச் சொன்னார் .
இரண்டு மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது. அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது துஷ்ட மிருகங்கள் தின்று தீர்த்த எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா ? என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது. ஏனென்றால் தீவுகளுக்குச் சென்ற சிலர் பசியில் இறந்ததும் உண்டு. இந்தப் போட்டியை அறிவித்தது கூடத் தவறோ என்று மனம் கலங்கினார்.
கொஞ்சதூரம் காட்டுக்குள் நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார். ஆம் . அங்கே மூங்கிலாலும் , ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது.
அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடிவந்தான். முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான். தலைவரை வணங்கி வரவேற்றான்.
" உள்ளே , வாருங்கள் தலைவா " என்று அழைத்துச் சென்று அமர வைத்தான். உள்ளே ஓடிப்போய் சூடான சோள அடையும் , மீனும் கொண்டு வந்து கொடுத்தான். தலைவருக்கோ ஒன்றும் புரியவில்லை.
" உனக்குக் கொடுக்கப் பட்ட சோளம் மூன்று மாதத்துக்குள் முடிந்திருக்குமே . நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை வரவேற்கிறாய். நீயும் நன்கு சாப்பிட்டு கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ? " என்றார்.
" கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே " என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான். அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது. அவன் சொன்னான் ,
" தலைவா, நான் வந்த அன்றே எனது தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன். இரண்டு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது. நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன். இந்த நான்கு மாதம் மட்டுமல்ல . இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும் " என்றான்.
தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
" நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன் . நீயோ உன் அறிவாலும் , உழைப்பாலும் என்னைத் திணறடித்து விட்டாய் . காட்டுக்கு ஒரு நல்ல தலைவனைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி " என்றார்.
கையில் கொடுக்கப் பட்டதைத் திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே ஜெயிக்கிறார்கள். அது பொருளாக இருந்தாலும் , வாழ்க்கையானாலும் , நேரமானாலும்.
" உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார் "
ullathai payanpaduthuvom tamil story ullathai payanpaduthuvom tamil story Reviewed by haru on September 29, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]