Ads Below The Title

urchagamaga ulliam seivom tamil story

ஒரு செழிப்பான நாடு இருந்தது. நல்ல இயற்கை வளமும் , செழிப்பான மண்வளமும் அந்நாட்டின் மிகப் பெரிய வலிமையாக இருந்தன. அந்த நாட்டின் அரசர் மிகவும் நல்லவர்.
இவ்வளவு இருந்தும் அங்கே ஒரு பிரச்சனை அடிக்கடி நடந்து வந்தது . கள்வர்கள் கூட்டம் ஒன்று திடீர் திடீரென்று வந்து மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தது. அது மட்டுமின்றிப் பக்கத்தில் இருந்த காட்டில் இருந்து அபாயகரமான மிருகங்களும் உள்ளே நுழைந்து கால்நடைகளை இழுத்துச் சென்றன.
காடுகளும் , மலைகளும் சூழ்ந்திருந்ததால் எந்த வழியாக ஆபத்து வரும் என்று காவலாளர்கள் கணிக்க முடியவில்லை. எனவே அந்நாட்டின் அரசர் ஒரு முடிவுக்கு வந்தார் . மக்களையெல்லாம் அழைத்துப் பேசினார்.
" மக்களே , நமக்கு இத்தனை வளமிக்க நாட்டைக் கடவுள் அருளியிருந்தும் நம்மால் இங்கே நிம்மதியாக இருக்க முடியவில்லை. எந்த வழியிலிருந்து ஆபத்து வரும் என்பதையும் நம்மால் கனிக்கமுடியவில்லை. எனவே இப்போது நாம் ஒரு காரியம் செய்யப் போகிறோம் . நம்மைச் சுற்றிலும் உள்ள மலைகளில் இருந்து பாறைகளை எடுத்து வந்து செதுக்கி நம்முடைய நாட்டைச் சுற்றிலும் உயரமான கோட்டைச் சுவர் எழுப்புவோம். இரண்டு இடங்களில் மட்டும் வலிமையான கதவுகள் பொருத்தி அங்கே எப்போதும் வீரர்களைக் காவல் நிறுத்துவோம் . அதற்குப் பிறகு நமக்கு ஒரு ஆபத்தும் நேராது. நீங்கள் எல்லாரும் ஒத்துழைப்புக் கொடுத்தால் இந்த வாரத்திலேயே பணிகளைத் துவங்கலாம் " என்றார் .
மக்கள் எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர். மன்னர் மேலும் சொன்னார் ,
" இந்தப் பணியில் ஈடுபடுபவர் ஒவ்வொருவருக்கும் நல்ல சன்மானம் வழங்கப்படும் . அது மட்டுமன்றி முழு வலிமையுடன் சிறப்பாக வேலை செய்யும் குழுவுக்கு ஏராளமான பொன்னும் , வைரமும்
பரிசளிக்கப்படும் ". இப்போது இன்னும் அதிகமான ஆரவாரம் .
ஊரே பரபரப்பானது. இளைஞர்களும் , பலசாலிகளும் , கட்டுமஸ்தான உடல் கொண்டவர்களும் அணி திரண்டனர். மலைகளைப் பெயர்த்துப், பாறைகளைக் கோட்டைக்குத் தக்க கற்களாக செதுக்கி , அவற்றைத் தூக்கி வந்து அடுக்குவது மிகப் பெரிய வேலையல்லவா ?
அந்த வாரத்திலேயே வேலை துவங்கி விட்டது. பாறைகள் ஒரே வடிவமான கற்களாக செதுக்கப்பட்டன. ஒரு கூட்டம் இளைஞர்கள் அவற்றைக் கயிற்றில் கட்டியும் , சக்கரங்களில் ஏற்றியும் இடமாற்றம் செய்ய ஆரம்பித்தனர். ஒரு கூட்டத்தினர் அஸ்திவாரம் இடத்துவங்கினர்.
உற்சாகமாய் வேலை துவங்கும்போது அங்கே திடீரென்று வந்து நின்ற இருவரைப் பார்த்து அவர்கள் எல்லாரும் சிரித்துவிட்டார்கள்.
ஏனென்றால் அவர்களில் ஒருவர் கால் ஊனமுற்றவர். மற்றொருவரோ நடக்கவே தடுமாறும் ஒரு குள்ளர்.
" யோவ் , எங்க வந்திங்க ரெண்டு பேரும் ? இங்க நடக்குறது ஒன்னும் பூப்பறிக்கிற வேலை இல்லைய்யா . பெரிய பெரிய பலசாலிங்களே செய்றதுக்கு திணர்ற வேலை. பாறை கீறைல மோதிக்காம சீக்கிரம் எடத்த காலி பண்ணுங்க " என்றான் ஒரு இளைஞன். அவன் சொன்னதைக் கேட்டு எல்லாரும் இன்னும் அதிகமாகச் சிரித்தார்கள்.
வந்தவர்களோ கோபப்படவில்லை . அதில் குள்ளமானவர் சொன்னார்.
" நீங்கள் செய்யத் துவங்கி இருப்பது நம் நாட்டுக்கான மிகப் பெரிய சேவை. இதில் உங்களைப் போல எங்களால் பத்தில் ஒரு பங்கு கூட செய்ய இயலாது. இருந்தாலும் எங்களால் இயன்றதை செய்ய எங்களை அனுமதியுங்கள் ". அவருடைய பேச்சு அவர்களுக்கு ஞாயமானதாகத் தோன்றியது.
கால் ஊனமானவரும் சொன்னார் ,
" எங்களுக்கு சம்பளம் எதுவும் வேண்டாம் . எல்லாரும் நாட்டுக்காக உழைக்கும்போது நாங்கள் மட்டும் ஒன்றும் செய்யாமல் இருக்கிறோம் என்ற குற்ற உணர்விலிருந்து விடுபட்டால் அதுவே எங்களுக்குப் போதும் . நாளை முதல் வேலைக்கு வருகிறோம் " என்று சொல்லிவிட்டு , மற்றவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
சொன்னபடியே அவர்கள் வந்து விட்டார்கள். குள்ளர் அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கும் வேலையை ஏற்றுக் கொண்டார். தண்ணீர் கேட்டு யாரேனும் கரம் உயர்த்தினால் ஓடிப்போய்த் தண்ணீர் கொடுப்பதுடன் ,
இனிமையாகப் பாடவும் செய்தார். இது அவர்கள் களைப்பில்லாமல் உற்சாகமாய் வேலை செய்ய உதவியது. அது மட்டுமல்லாமல் அவருக்கு நகைச்சுவையாகப் பேசும் திறமையும் இருந்ததால் எல்லாருக்குமே அவரைப் பிடித்து விட்டது. நாளடைவில் அவரைப் பார்த்தாலே வேலையாட்கள் அனைவரும் தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தனர் . பாறைகளையெல்லாம் பஞ்சு மெத்தைகள் போலத் தூக்கிச் சென்றனர்.
கால் ஊனமானவர் வைத்தியத்தில் தேர்ந்தவராக இருந்ததால் அவர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் காயங்கள் , சுளுக்கு , மயக்கம் போன்றவற்றுக்கு அருகிலேயே இருந்து உடனடி சிகிச்சை அளித்தார். கொடிய விஷ ஜந்துக்களின் கடிக்குக் கூட அவரிடம் மருந்து இருந்தது. அவரும் அவர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
அனைவரின் உற்சாகமான உழைப்பில் ஓரிரு மாதங்களிலே வலிமையான மதில் உருவாகிவிட்டது. இனிமேல் எந்த பயமும் இல்லையென்று மக்களெல்லாரும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் ராஜா ஏராளமான சன்மானங்களை அள்ளி வழங்கினார்.
அவர்கள் எல்லாரும் சேர்ந்து தங்களுக்குக் கிடைத்த சன்மானத்திலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து அவர்களை உற்சாகப்படுத்திய அந்த இரண்டு ஊனமுற்றவர்களுக்கும் கொடுக்க முடிவு செய்தார்கள். இருந்தாலும் முழு பலத்துடன் சிறப்பாக உழைத்தவர்களுக்கான சிறப்புப் பரிசு யாருக்கு என்பதில் பெரிய எதிர்பார்ப்பு உண்டானது.
மலைகளைப் பெயர்த்து அடுக்கிய குழுவினர் தங்களுக்குத்தான் சிறப்புப் பரிசு என்று நினைத்தார்கள். அதைக் கற்களாக செதுக்கியவர்களும் தங்களுக்குத்தான் பரிசு என்று நினைத்தார்கள். அவற்றை சுமந்து கொண்டுபோன குழுவினர் , அஸ்திவாரமிட்டு ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிய குழுவினர் , சுண்ணாம்பும் , காரையும் அரைத்துப் பூச்சுப் பூசிய குழுவினர் அனைவருமே தங்களது உழைப்புதான் பரிசுக்குரியது என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தார்கள்.
அரசர் முடிவை அறிவிக்க வந்தார். கூட்டத்தில் எதிர்பார்ப்பும் சலசலப்பும் உண்டாயிற்று. அரசர் சொன்னார்.
" மலையைப் பெயர்ப்பதும் , அதை ஒரே வடிவமுள்ள கற்களாய் செதுக்குவதும், செதுக்கிய கற்களைக் கட்டித் தூக்கி வருவதும் , அவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக ஏற்றி மதிலாக அடுக்குவதும் மற்றும் இது தொடர்பாக நீங்கள் செய்திருக்கும் எல்லா வேலைகளுமே கடினமானவைதான். அத்துடன் அர்ப்பணிப்பும் , புத்தி சாதுர்யமும் இல்லாமல் இவற்றையெல்லாம் செய்வது இயலாத காரியந்தான். எனவே இதிலுள்ள ஒவ்வொரு குழுவுமே பரிசுக்குரியதுதான் " மன்னர் சற்று நிறுத்தியபோது கூட்டத்தில் பெரிய எதிர்பார்ப்பு உண்டானது.
மன்னர் தொடர்ந்தார்.
" நீங்களெல்லாம் திடகாத்திரமானவர்கள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்திருக்கிறார். இந்த ஆரோக்கியமான சரீரத்தைக் கொண்டு இதைவிட இன்னும் அதிகமாவும் உங்களால் சாதிக்க முடியும். ஆனால் இந்தத் தகுதி எதுவுமே இல்லாமல் , நாட்டுக்காக எதையாவது செய்ய வேண்டுமென்ற பார்த்துடன் , தங்களால் முடியுமா என்று கூட சிந்திக்காமல் உங்களோடு சேர்ந்து உழைத்த அந்த இரண்டு பலசாலிகளை அழைக்கிறேன் " என்றார்.
உடனே ஒரு சிலர் ஓடிப்போய் ஊனமுற்றவர்கள் இருவரையும் தூக்கி வந்தார்கள் .
" இவர்கள்தான் மாபெரும் பலசாலிகள் . தங்கள் குறைபாடுகளைவிட நாட்டுக்காக ஏதேனும் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணந்தான் இவர்கள் மனதில் இருந்தது. இந்த உடலை வைத்துக் கொண்டு நாம் என்ன பெரிதாக சாதித்து விட முடியும் என்று நினைத்து முடங்கிவிடாமல் , தங்களுக்கு இதனால் என்ன கிடைக்கும் என்று எண்ணி விடாமல் தங்களிடம் இருப்பதைக் கொண்டு இந்தப் பணிக்குப் பெரிய தொண்டு செய்த இவர்களையே முழுபலத்துடன் தொண்டு செய்தவர்கள் என்று அறிவிக்கிறேன் " மன்னர் அவர்கள் இருவரையும் ஆரத்தழுவி சிறப்புப் பரிசுகளை அள்ளி வழங்கினார் . மன்னரின் தீர்ப்பை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

எப்படிப்பட்ட உடல்நிலையில், எப்படிப்பட்ட பொருளாதார சூழ்நிலையில் அல்லது எத்தனை நஷ்டப்பட்ட நிலையில் இருந்து நாம் ஊழியம் செய்கிறோம் என்பதை அல்ல , அப்படிப்பட்ட சூழலிலும் நாம் எத்தனை உற்சாகமாய் ஊழியம் செய்கிறோம் என்பதையே தேவன் பார்க்கிறார். உலகம் உன் நிலையைக் கண்டு உன்னை உதாசீனப் படுத்தலாம். ஆனால் உன்னதமான தேவன் நீ அவருக்காகச் செய்யும் சிறிய செயல்களுக்குக் கூடப் பெரிதாகப் பரிசளிக்கக் காத்திருக்கிறார். உற்சாகமாய் செயல்படு.

"அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்"
2 கொரிந்தியர் 9 :7
urchagamaga ulliam seivom tamil story urchagamaga ulliam seivom tamil story Reviewed by haru on October 27, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]