Ads Below The Title

VANJAGA NARIYIN THANTHIRAM TAMILSTORY

ஒரு கிராமத்தில் பெரிய பண்ணை ஒன்று இருந்தது. அதில் ஏராளமான ஆடுகளும் , கோழிகளும் , மாடுகளும் வளர்க்கப்பட்டன. அதில் ஒரு கொழுத்த எருதும், ஒரு நாயும் கூட இருந்தன.
எருதும் , நாயும் முதலாளியின் செல்லப் பிள்ளைகள் போல இருந்தன. சிறு வயது முதலாகவே இரண்டுமே நல்ல நண்பர்கள். பண்ணையின் எந்த இடத்திலும் சுற்றித்திரிய அவற்றுக்கு உரிமை அளிக்கப் பட்டிருந்தது. முதலாளி சில நாட்களில் இரவு நேரங்களில் , முயல் வேட்டைக்கோ அல்லது காவலர்களைக் கண்காணிப்பதற்கோ செல்லும்போது மட்டும் நாயை உடன் அழைத்துச் செல்வார் . மற்ற நேரங்களிலெல்லாம் எருதும் , நாயும் ஒன்றாய் விளையாடும்.
ஒரு நாள் முதலாளி , கடலைத் தோட்டத்தை சேதப்படுத்தும் முயல்களையும் , காட்டுப் பன்றிகளையும் வேட்டையாடுவதற்காக நாயை அழைத்துச் சென்றார். எருது மட்டும் தனியாக இருந்தது. மற்ற பிராணிகளெல்லாம் அதனதன் இடங்களில் அடைக்கப்பட்டிருந்தன.
அப்போது ஒரு திருட்டு நரி கோழியையாவது , ஆட்டுக்குட்டியையாவது பிடித்துச் செல்லலாமென்று எண்ணி வேலிக்கு அடியில் பள்ளம் பறித்து பண்ணைக்கு உள்ளே வந்து விட்டது. பண்ணை முழுக்க சுற்றியும் அதற்கு ஏமாற்றமே மிஞ்சியது. கோழிகளும் , ஆடுகளும் மிகவும் பாதுகாப்பான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. நரி எவ்வளவோ முயற்சி செய்தும் உள்ளே நுழைய முடியவில்லை.
நரி பண்ணையையே சுற்றிச் சுற்றி வந்தது . ஒன்றுமே கிடைக்கவில்லை . நடந்து நடந்து எருது இருக்குமிடத்துக்கு வந்துவிட்டது. திடகாத்திரமான உடலுடனும் , அச்சுறுத்தும் கொம்புகளுடனும் மலை மாதிரி நின்ற எருதைப்பார்த்து நரி ஒரு நொடி பயத்தில் ஆடிப் போய்விட்டது .
எருது இதுவரை நரிகளைப் பார்த்ததில்லை. எனவே நரியை வினோதமாகப் பார்த்தது .
" யார் நீ , இதுவரை உன்ன நான் இங்க பாத்ததே இல்லையே ? " என்றது. எருதின் பேச்சில் தொனித்த சிநேகம் நரிக்கு தைரியத்தைக் கொடுத்தது.
" நான் நரிங்க. காட்டுக்குள்ளேருந்து வந்துருக்கேன். இந்த இடத்துல ஒரு பெரிய பலசாலி இருக்குறதா கேள்விப்பட்டேன் . அதனாலதான் உள்ள வந்தேன். நான் கேள்விப் பட்டதை விட நீங்க பெரிய பலசாலியாதான் இருக்கீங்க " என்றது .
எருதுக்கு பெருமை தாளவில்லை.
" என்னப் பாக்குறதுக்காகவா இவ்ளோ தூரம் வந்தே ? " என்றது சந்தோஷமாய் .
" ஆமாம் , ராஜா . அதுக்காக மட்டுந்தான் வந்தேன் " என்றது நரி. இப்போது அதன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது .
எருதுக்கு , " ராஜா " என்ற வார்த்தையைக் கேட்டது ஆனந்தமாக இருந்தது.
" என்னை ராஜான்னா சொன்னே ? "
என்றது.
" ஆமாம் ராஜா . உங்க பெருமை உங்களுக்கே தெரியலை . இப்ப நான் காட்டுக்குப் போய்ட்டு வந்து நாளைக்கு எல்லாம் விவரமா சொல்றேன் . என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது.
அந்த இரவு முழுதும் எருதுக்குத் தூக்கம் வரவில்லை. மனசெல்லாம் இனம் புரியாத சந்தோஷம் . நரி தன்னைப் பற்றி சொன்ன ,
" பலசாலி , ராஜா " என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் மனதுக்குக்குள் அசை போட்டு மகிழ்ந்தது. அடுத்த நாள் இரவுக்காகக் காத்திருக்கத் தொடங்கியது .
********
காட்டுக்குச் சென்ற நரிக்கு ஒரே குதூகலம். எவ்வளவோ காட்டு விலங்குகளை அது சாப்பிட்டதுண்டு. ஆனால் ஒரு முறை கூட இப்படி ஒரு கொழுத்த எருதை ருசி பார்த்ததில்லை. தான் மட்டும் தனியாக எருதிடம் மோதினால் ஐந்தே நிமிஷத்தில் எருது குடலை உருவி விடும் என்று நரிக்கு நன்றாகவே தெரியும். எனவே அது வேறொரு திட்டம் தீட்டியது.
பகல் முழுவதும் காட்டுக்குள் அலைந்து , காட்டிலேயே சுவையான பழங்கள் , கிழங்குகள் , காய்கள் , மான்கள் விரும்பி உண்ணும் தாவரங்கள் போன்றவற்றை சேகரித்து மூட்டை கட்டியது.
அந்த நாளிலும் முதலாளிக்கு வேட்டை இருந்ததால் அன்று இரவிலும் நாய் அவருடனேயே வயலில் தங்கிவிட்டது. நரி சொன்னபடியே இரவில் எருதிடம் வந்துவிட்டது. தரை மட்டும் குனிந்து எருதை வணங்கி ,
" வணக்கம் மகாராஜா ! இது அடிமையோட காணிக்கை .
ஏத்துக்குங்க " . கொண்டு வந்த பொருட்களையெல்லாம் எருதின் காலடியில் வைத்து வணங்கியது .
எருதுக்குத் தலைகால் பிடிபடவில்லை.
" என்னப்பா , என்னென்னமோ சொல்ற , ஏதேதோ செய்ற ?" என்றது குதூகலமாய் .
" எல்லாம் பிறகு சொல்றேன் மகாராஜா. முதல்ல இந்தக் காணிக்கையை ஏத்துக்குங்க " .
நரி கொடுத்த மூட்டையை எருது பிரித்துப் பார்த்தது. அடடா , மனதைத் கவரும் மணம் மிக்க உணவுப் பொருட்கள். ஒவ்வொன்றாய் ருசித்து மகிழ்ந்தது. இத்தனை வருட வாழ்க்கையில் கண்டிராத அருமையான சுவை . நரியின் அன்பில் எருதுக்குக் கண்ணீரே வந்து விட்டது.
" ஆஹா என்ன ருசி ! என்ன ருசி ! உன்னோட அன்பும் , மரியாதையும் என்னைத் திணற அடிக்குது . உனக்கு நான் என்ன செய்யணும் ? " என்று கேட்டது.
இதற்காகத்தானே நரியும் காத்திருந்தது ? கண்களில் கண்ணீரோடு ஆரம்பித்தது .
" மகாராஜா ! இத்தனை பலசாலியா, கம்பீரமா இருக்குற நீங்க இப்படி கிடைக்கிறத தின்னுகிட்டு , வேலிக்குள்ள சிறைப்பட்டு அடிமை வாழ்க்கை வாழலாமா ? என்னோட காட்டுக்கு வந்துடுங்க. அங்க ராஜாவா இருக்குற சிங்கத்தை அடிச்சு விரட்டிட்டு நீங்களே ராஜாவாயிடுங்க. இப்ப நீங்க சாப்பிட்ட மாதிரி ஆயிரக்கணக்கான உணவு வகைகள் அங்க இருக்குது. காலமெல்லாம் உங்களுக்கு சேவை செய்ய நாங்கள்லாம் இருக்கோம் . உடனே புறப்படுங்க. உங்களை இப்படிப் பாக்க ரொம்ப வேதனையா இருக்கு ?" . கண்களைத் துடைத்துக் கொண்டது.
எருதும் அழுது விட்டது.
" நீ சொல்றது உண்மைதான். இனிமே நான் அடிமையா வாழ மாட்டேன். என்னோட நண்பன் நாய் வந்தது சொல்லிட்டு நாளைக்கு ராத்திரி உன்னோட வர்றேன். ஆனா சிங்கம்னா எப்படி இருக்கும் ? நான் பாத்ததே இல்லையே ? " என்றது
தன்னுடைய திட்டம் நிறைவேற ஆரம்பித்ததைக் கண்டு நரி மனதுக்குள் சந்தோஷப்பட்டது .
" சிங்கம்ங்கறது ஒன்னுமேயில்லை மகாராஜா. நீங்க பூனை பாத்துருக்கீங்க இல்லையா ? அதுலயே கொஞ்சம் பெரிய பூனை . அவ்வளதான் என்றது.
எருதுக்குப் பூனையென்றால் நன்றாகவே தெரியும். மூக்கால் ஒரு சீறு சீறிக் கழுத்தைத் தாழ்த்திக் கொம்பை முட்ட வருவதுபோல் அசைத்தால் அரண்டு ஓடிப்போகும் பூனைகள் அதன் நினைவுக்கு வந்தது .
" ஓ !சிங்கம்னா இவ்வளவுதானா? அப்பன்னா இனிமே காட்டுக்கு ராஜா நான்தான் " . எருதின் மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
" சரிங்க மகாராஜா , நீங்க ஆயத்தமா இருங்க . நாளைக்கு ராத்திரி கிளம்புவோம். அடுத்த நாள்லேர்ந்து நீங்கதான் காட்டுக்கு ராஜா. யார் எது சொன்னாலும் காதுல வாங்கிக்காதிங்க. பொறாமைல ஏதாவது சொல்லி உங்கள தடுக்கப் பாப்பாங்க .
ஏமாந்துடாதிங்க ". சொல்லிவிட்டு மீண்டும் எருதை விழுந்து வணங்கிவிட்டு
வெளியேறியது நரி .
**********
எதிர்பார்த்தது போலவே நாய் , காலையிலேயே வந்துவிட்டது. சுற்றி வளைக்காமல் விஷயத்தை சொல்லிவிட்டது எருது. நாய்க்கு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
" நண்பா , எனக்கென்னவோ இது பெரிய ஏமாற்று வேலையாய்ப் படுது. இங்க உனக்குக் கிடைக்கிற பாதுகாப்பு வேற எங்கயுமே கிடைக்காது. என்னை மாதிரி அன்பான நண்பர்களை விட்டுப் போக நினைக்காதே " என்றது.
எருது இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால் உடனே பதில் சொன்னது .
" எது ஏமாற்று வேலை ? இத்தன வருஷமா என்னை முன்னேற விடாம அடைச்சு வச்சு , ஒவ்வொரு தேவைக்கும் உங்க கையை எதிர்பாக்க வச்சு அடிமையாவே வளத்ததுதான் ஏமாத்து வேலை . இப்ப நான் ராஜாவாகப் போறேன். சுதந்திரமான வாழ்க்கை , விதவிதமான உணவு வகைகள். எனக்கு வேண்டியத இனி நானே தேர்தெடுப்பேன் . மத்தவங்க குடுப்பாங்கன்னு காத்திருக்க வேண்டாம். தயவு செஞ்சு என் வழியில் என்னை விட்டுடு" என்றது.
அதற்கு மேல் நாய் ஒன்றும் பேசவில்லை. எருது இரவை எதிர்பார்த்துக் காத்திருந்தது.
************
எருது எதிர்பார்த்திருந்தபடியே நரி நள்ளிரவில் வந்து சேர்ந்தது. எருது விட்ட ஒரே உதையில் கதவு திறந்து கொண்டது. நரியைப் பின் தொடர்ந்து ஓடியது .
" நான் இனிமேல் ராஜா " என்று உற்சாகமாய் மனதுக்குள் சொல்லியபடி ஓடியது. விடிந்த போது இரண்டும் காட்டுக்குள் வந்துவிட்டன . பச்சைப் பசேலென்ற தாவரங்களும் , பாறைகள் வழியாய் ஓடி வந்த நீரும் எருதுக்குப் பரவசத்தை உண்டாக்கின.
" எங்க அந்த சிங்கம் ? அதை உதைச்சு விரட்டிட்டு நான் சீக்கிரம் ராஜாவாகணும் " என்றது. நரி
" இதோ நெருங்கிட்டோம் மகாராஜா " என்றது. சற்று நேரத்திலேயே சிங்கத்தின் குகை வந்து விட்டது.
நரி வாசலில் நின்று அழைத்தது ,
" மகாராஜா , காணிக்கை கொண்டு வந்துருக்கேன் . ஏத்துக்குங்க . என்னையும் கொஞ்சம்
கவனிச்சுக்குங்க " என்று சத்தமிட்டது.
எருதுக்கு ஒன்றுமே புரியவில்லை.
" நரியின் கையில் ஒன்றுமே இல்லை. ஆனால் காணிக்கை கொண்டு வந்திருப்பதாகச் சொல்கிறது. ஒரு வேளை சிங்கத்தை ஏமாற்றி வெளியே கொண்டு வர நரி செய்யும் தந்திரமாக இருக்கலாம் . வரட்டும் அந்த சிங்கம் . ஒரு கை பார்த்து விடுவோம் " . எருது தயாராக நின்று கொண்டது.
ஈரல் குலையை நடுங்க வைக்கும் உறுமலோடு சிங்கம் வெளியே வந்தது. அதன் கண்கள் நெருப்புத் துண்டங்களாய்ப் பிரகாசித்தது.
" இதுவா சிங்கம் ? என்ன பயங்கரம் ! பெரிய அளவில் உள்ள பூனையென்று நரி சொன்னதெல்லாம் ? "
நரியின் முகத்தைப் பார்த்தது. நரி வாய் நிறையப் பல்லாக ,
" மகாராஜா, அருமையான உணவு கொண்டு வந்துருக்கேன். எனக்கும் ரொம்ப பசிக்குது. வேண்டியத எடுத்துக் கிட்டு அடிமைக்கும் ரெண்டு துண்டு வீசுங்க " என்றது.
என்ன நடக்கிறது என்று எருது புரிந்து கொள்வதற்குள் சிங்கத்தின் வலுவான நகங்களும் , பற்களும் எருதைக் கிழித்து எருதின் உயிரைக் குடித்தன. ராஜாவாகும் ஆசையில் வந்த எருது சிங்கத்துக்கும் , வஞ்சக நரிக்கும் உணவாகிப் போனது.

இன்று இது போன்ற வஞ்சக நரிகள் எழும்பி தேவபிள்ளைகளுக்கு வீணான இச்சைகளைக் காட்டிக், கர்த்தரின் பரிசுத்த ஐக்கியத்திலிருந்து அவர்களை திசை திருப்பி அவர்களை எளிதாகப் பட்சிக்க ஆரம்பித்து விட்டன. விரும்பியதையெல்லாம் அனுபவிக்கலாம் என்ற வாக்குறுதி எங்கிருக்கிறதோ அதற்குப்பின் சத்துரு பட்சிக்கும்படி வாய் பிளந்து அமர்ந்திருக்கிறானென்று உணர்ந்து கொள்.

" நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்..."
எபேசியர் 4 :14
VANJAGA NARIYIN THANTHIRAM TAMILSTORY VANJAGA NARIYIN THANTHIRAM TAMILSTORY Reviewed by haru on October 26, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]