Care others always tamil story

Ads Below The Title
பிரச்சினை எப்போது வருமென்று தெரியுமா?
================================
ஒரு வீட்டில் எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.
எலி வலையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது.
வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.
அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.
அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."
உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.
மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.
அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.
ஒரு அரை மணி நேரத்தில் " டமால் " என்றொரு சத்தம்.
எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.
எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.
எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.
அருகில் இருந்த ஒரு மூதாட்டி "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.
அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.
உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.
சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.
இந்த முறை ஆட்டின் முறை.
விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.
பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.
எலி தப்பித்து விட்டது. அப்பாடா...
நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள்.
ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.
அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.
அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்......
அடுத்தவருக்கு முடிந்தவரை உதவிடுங்கள்
Care others always tamil story Care others always  tamil story Reviewed by haru on July 12, 2017 Rating: 5

No comments