கற்றுக் கொடுத்த காக்கைகள்!

Ads Below The Title
எங்கள் வீட்டு வாசலில் ஒரு பெரிய நெட்டிலிங்கம் மரம்
உள்ளது. சில நாட்களுக்கு முன்பு அதில் இரண்டு
காக்கைகள், முட்களால் சிறிய கூடு கட்டின.

இதனால் வாசல் முழுவதும் முட்கள் சிதறியிருந்தது.
நாங்கள் போகும் போதும் வரும்போதும் எங்கள்
கால்களில் குத்தி ஒரே எரிச்சலாக இருந்தது.

அதனால், என்கணவர், இரவு மொட்டை
மாடிக்குப் போய் அந்தக்கூட்டையெல்லாம் பிரித்து,
சுற்றி வைத்திருந்த முட்கள், பொடி கம்பி அனைத்தையும்
பிய்த்து எறிந்துவிட்டார்.

இரண்டு நாள் கழித்து மூன்றாம் நாள் பக்கத்தில் இருந்த
ஒரு பெரிய லக்ஷ்மிகடாட்ச கீரை மரத்தில்
(லெட்சகட்டகீரை) ஒரே காக்கா கூட்டம்.
நான்கு நாட்களாக கத்திக் கொண்டேயிருந்தன. நான்
விரட்டிப் பார்த்தேன். ஒரு கம்பில் கறுப்புத் துணியைக்
கட்டி மரத்தின் நடுவே வைத்துப் பார்த்தேன்.
எதற்கும் மசிவதாயில்லை.

மறுநாள் என் கணவர், மொட்டைமாடியில் போய்ப்
பார்த்தார். அந்த மரத்தில் முள்ளே இல்லாமல்
வெறும் காய்ந்த குச்சி, சாக்குப்பை, பஞ்சு
ஆகியவற்றை வைத்து காக்கா கூட்டமே சேர்ந்து அழகாகக்
கூடு கட்டியிருந்தது. இரண்டு காக்கைகளையும்
அந்தக் கூட்டில் குடி வைத்துவிட்டு அனைத்தும்
பறந்து சென்றுவிட்டன.

எங்களுக்கோ ஆச்சரியம் கலந்த சிரிப்பாகிவிட்டது. அந்தக்
கூட்டைப் பிரிக்காமல் விட்டுவிட்டோம்.
இப்பொழுது இரண்டு காக்கைகளும்
சௌகரியமாக உட்கார்ந்து முட்டையிட்டு அடைகாக்கின்றன.

இதிலிருந்து தனித்து நின்று எதையுமே செய்ய முடியாது.
துணைக்கு நல்ல உறவுகளும், நண்பர்களும்
தேவை என்ற பாடத்தை நாங்கள் கற்றுக்
கொண்டோம்.

நன்றி: மங்கையர் மலர்
கற்றுக் கொடுத்த காக்கைகள்! கற்றுக் கொடுத்த காக்கைகள்! Reviewed by haru on January 09, 2012 Rating: 5

No comments