மாற்ற வேண்டியது உலகை அல்ல உங்களை
இது வெறும் கதையல்ல. நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு தகவல்.
நிறைய பேர் உலகம் இப்படி இருக்கிறதே, மனிதர்கள் இப்படி இருக்கிறார்களே என்று புலம்புவார்கள். இவர்கள் எப்போதுதான் மாறுவார்களோ, இவர்கள் எப்படித்தான் திருந்துவார்களோ என்று கூறுவார்கள். ஆனால் உலகத்தை மாற்ற முயற்சிப்பதை விட, நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிப்பதுதான் சிறந்தது.
இதற்கு உதாரணமாக ஒரு கதை:
ஒரு காலத்தில் மங்கலாபுரி என்ற நகரத்தை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன், ஒரு நாள் வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா சென்றான். அந்த நாட்களில் வாகனங்கள் ஏதும் இல்லாததால் பல இடங்களுக்கு நடந்தே செல்ல வேண்டியதாயிற்று.
தனது பயணத்தை முடித்துக் கொண்டு அரண்மனைக்கு வந்த மன்னன், தன் கால்களில் கடுமையான வலியை உணர்ந்தான். இதுதான் அவன் அதிகமான தூரம் நடந்து சென்ற முதல் பயணம் என்பதாலும், அவன் சென்று வந்த பகுதிகள் பல கரடுமுரடாக இருந்ததாலும் கால்வலியை அவனால் தாங்கவே முடியவில்லை.
இந்த நிலையில், மன்னன் ஒரு ஆணையிட்டான். அதாவது, "இந்த நகரம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளையும் விலங்கின் தோலை கொண்டு பரப்பி விட வேண்டும்" என்பதாகும்.
இதனை நிறைவேற்றுவதற்கு ஏராளமான விலங்குகளை கொல்ல வேண்டி வரும், மேலும் இதற்கு ஏராளமான பணம் செலவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இதனை உணர்ந்த மன்னனின் பணியாளர் ஒருவர், மிகுந்த பணிவுடன் மன்னனிடம் சென்று, நீங்கள் கூறியபடி, நகரம் முழுவதையும் தோலால் பரப்பினால் ஏராளமான பொருட்செலவாகும். உங்கள் ஒருவருக்காக இப்படி நகரத்தையே மாற்றுவது தேவையில்லாத செலவினம். அதற்கு பதிலாக நீங்கள் மிகவும மிருதுவான ஒரு தோலைக் கொண்டு காலணி செய்து கொள்ளலாமே என்று ஆலோசனைக் கூறினான்.
ஆச்சரியத்தில் மூழ்கிய மன்னன், இறுதியாக தனது பணியாளரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு தனக்காக ஒரு காலணியை தயாரிக்க சொன்னான்.
இது வெறும் கதையல்ல. நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு தகவல். அதாவது, இந்த பூமியை மிகவும் மகிழ்ச்சியான உலகமாக நாம் மாற்றிக் கொள்ள முடியும், அதற்காக நாம் நம்மைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டுமேத் தவிர, இந்த உலகத்தை அல்ல என்பதுதான் அது.
மாற்ற வேண்டியது உலகை அல்ல உங்களை
Reviewed by haru
on
June 08, 2012
Rating:
No comments