நள்ளியும் புள்ளியும் | பாட்டிக் கதை
"அக்கா!,
நல்லவன், புத்திசாலி இந்த இரண்டில் நான் எப்படி இருக்க வேண்டும்?"
பேரன் சந்தர் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் பேத்தி புவனாவைப் பார்த்துப் பார்வதிப் பாட்டி சிரித்துக் கொண்டே அன்றைய கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு காட்டில் ஆடு ஒன்றுக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அவைகளுக்கு நள்ளி, புள்ளி என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்து வந்தது. குட்டிகளும் வளர்ந்து சுயமாக வாழ வேண்டிய நேரம் வந்து விட்டது. எதிரிகளிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கச் சொல்லித் தாய் ஆடு அனுப்பி வைத்தது. இரண்டும் தனித்தனியாக வீடுகள் கட்டிக் கொண்டு வாழ ஆரம்பித்தன.
நள்ளி இரக்க குணமுடைய அறிவாளி.. மற்றவர்களைக் கவரக்கூடிய பேச்சுத் திறமையும் அதற்கு இருந்தது. அன்பினால் கொடிய விலங்குகளையும் நண்பர்களாக்கி, காட்டில் யாரும் பயமில்லா வாழ்க்கை வாழ எண்ணியது. முதலில் அதனுடைய போதனையைச் சிறிய பிராணிகளிடம் ஆரம்பிக்க, நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனுடைய கனிவான அர்த்தமுள்ள சிந்தனையைத் தூண்டும் பேச்சுக்கள் அவைகளைக் கவர்ந்து இழுத்தன.
தினமும் நள்ளி வீட்டின் முன் உபதேசம் நடக்கும். நாளுக்கு நாள் பல புதிய பிராணிகள் சேர்ந்து கொண்டே இருந்தன. ஒரு நாள் பெரிய ஓநாய் ஒன்று அங்கு வந்தது. அதைப் பார்த்து மற்ற பிராணிகள் பயந்து நடுங்கின. நள்ளி தன் கவர்ச்சிப் பேச்சால் அவைகளுடைய பயத்தைப் போக்கியதுடன் ஓநாயைத் தன் அருகில் கூப்பிட்டு உட்கார வைத்துக் கொண்டது.. திருப்தியாகச் சாப்பிட்டு வந்த ஓநாய்க்குப் பசியில்லை. நள்ளியின் பேச்சை ரசித்துக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருந்தது. கூட்டம் முடிந்தவுடன் கைகுலுக்கி ஓநாயை அனுப்பி வைத்தது.
எப்பொழுது வேண்டுமானாலும் தாழ்ப்பாள் போடாத தன் வீட்டுக்கு வரச் சொன்னது..
இந்த அதிசயத்தைப் பார்த்த மற்ற பிராணிகள் நள்ளியைப் பாராட்டின. ஆனால் புத்திசாலியான புள்ளி அசைவ உணவால் வாழும் மிருகங்களின் ஆபத்தை எடுத்துக் கூறியது. ஆனால், நள்ளி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அன்பு கலந்த உபதேசத்தால் கொடிய மிருகங்களின் உணவுப் பழக்கத்தையே மாற்றி விடப்போவதாகச் சொன்னது. 'கூரான கொம்புகள் உள்ள நமக்குப் பகலில் இந்த ஓநாயால் பயம் கிடையாது; இரவில் பாதுகாப்புக்காகக் கதவையாவது தாள் போட்டுக்ககொள்' என்று அது சொன்னதையும் அலட்சியம் செய்து விட்டது நள்ளி.
ஒரு நாள் ஓநாய்க்கு இரை கிடைக்கவில்லை. அலைந்து திரிந்ததால் அதற்கு அகோரப் பசி உண்டான போது நள்ளியின் நினைவு வந்தது. 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்பது போல் அன்று இரவு எல்லோரும் தூங்கிய பின் நள்ளி வீட்டுக்குச் சென்றது. தாழ்ப்பாள் போடாத கதவைத் திறந்து உள்ளே சென்றபோது நள்ளி நன்றாக துங்கிக் கொண்டிருந்தது.
பாவம் நள்ளி, சிறிது நேரத்தில் ஓநாய்க்கு இரை ஆகிப்போனது..
நள்ளியின் அன்பும், அருளும், பண்பும், பாசமும், இரக்க குணமும் பயனில்லாமல் போய்விட்டன. அடுத்த நாள் புள்ளி நள்ளி வீட்டிற்கு வந்து அங்கிருந்த எலும்புகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. அதற்கு ஓநாய் மேல் சந்தேகம் வர, அதனால் வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க அறிவோடு சிந்தனை செய்ய ஆரம்பித்தது.
நள்ளியைச் சாப்பிட்ட ஓநாய்க்கு அதன் சுவை மிகவும் பிடித்திருந்தது. புள்ளியையும் கபளீகரம் செய்ய இரவில் அங்கு வந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக இதைப் புள்ளி கவனித்தது. கதவு தாழ்ப்பாள் போட்டிருந்ததால் ஓநாய்க்கு உள்ளே போக முடியவில்லை. ஆனால் கதவைத் தள்ளிப் பார்ப்பதைப் பார்த்த புத்திசாலியான புள்ளி அதை ஒழித்துக் கட்ட ஒரு வழி கண்டுபிடித்தது.
மறு நாள் இரவு புள்ளி கதவைத் தாள் போடாமல் ஓநாய் நுழையும் இடத்தில் கருப்பான சுறுக்குக் கயிறை வைத்து அதன் மறு நுனியை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்தது. கதவைச் சிறிதாகத் திறந்து வைத்து வெளியே மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டது..
எப்பொழுதும் போல் ஓநாய் அன்றும் புள்ளி வீட்டுக்கு வந்தது. கதவு திறந்திருப்பதைப் பார்த்தவுடன் அதற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. புள்ளியைக் கபளீகரம் செய்ய அவசரமாக உள்ளே நுழைந்தது. கறுப்பாக இருந்த சுருக்குக் கயிறு அதன் கண்ணில் படவில்லை. கழுத்து நன்றாக மாட்டிக் கொண்டு கயிறு இறுக்க ஆரம்பித்தது. பயந்துபோய் ஓநாய் துள்ளத் துள்ள, கழுத்தில் இறுக்கம் அதிகமாகி விட்டது. குரல்வளை நசுங்கி மூச்சுத் திணறி இறந்து போனது.. அன்றிலிருந்து ஓநாய் பயமில்லாமல் மகிழ்ச்சியாகப் புள்ளி வாழ்ந்தது.
நள்ளியின் அன்பு அதைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடப் பயன் படவில்லை. ஆனால், புள்ளிக்கு அதனுடைய புத்திசாலித்தனம் உதவியது. அதனால் புத்திசாலித்தனத்தோடு அன்பு இருந்தால்தான் நாமும் வாழலாம்; மற்றவர்களையும் திருத்தி வாழ வைக்க முடியும்.
கதையை கவனமாக கேட்ட சந்தர் புத்திசாலியாக இருப்பதோடு நல்லவனாகவும் இருக்கப் போவதாகச் சொன்னான். புவனாவும் அதை ஆமோதிக், பாட்டி அவர்களை அணைத்து உச்சி முகர்ந்தாள். அன்பு ஸ்பரிசம் அனைவரையும் விரைவில் ஆனந்தமாகத் தூங்க வைத்தது.
நன்றி: மாத்தியோசி.காம்
நள்ளியும் புள்ளியும் | பாட்டிக் கதை
Reviewed by haru
on
August 09, 2012
Rating:
No comments