குயில் அக்கா | காக்கா அண்ணன் | ஆந்தையார்
கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. தன் குஞ்சுகளை பேணி பராமரித்து வளர்த்தது தாய் ஆந்தை. குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன.
ஒரு நாள், ""அம்மா எல்லாரும் பகலில்தான் சுறுசுறுப்பாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். நாம் சென்று இரை தேடும் வேளையில் ஊரே உறங்கி கொண்டிருக்கிறது. இது ஏன்?'' என்றது.
""நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில்தான் கண் தெரியும். அத னால் தான் நாம் பகலெல்லாம் துõங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம்,'' என்றது தாய் ஆந்தை.
""ஏனம்மா கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்துவிட்டார்?'' என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு.
""கடவுள் நம்மையெல்லாம் ஒரே மாதிரிதான் படைத்தார். முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்,'' என்றது தாய் ஆந்தை.
""அப்படி என்ன தவறு செய்தார்?'' என்று கேட்டன குஞ்சுகள்.
""ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகம் ஒன்றிடம் மிகவும் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை மிகவும் சரியில்லை. எனவே, அதை அழைத்து கொண்டு காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் சென்றனர்.
""குயில் டாக்டரோ நன்றாக வைத்தியம் பார்த்து காக்காவை குணமாக்கிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் இருவரும் கொடுக்கவில்லை. எனவே, குயில் டாக்டர் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுங்கள் என்று கேட்டது.
""இவர்கள் இருவரும் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டனர். அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும் பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். ஏதுடா தொல்லையாப்போச்சு என்று நினைத்த நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டுவதே இல்லை. இரவில் மட்டுமே வெளியே வருவதும் இரையை பிடித்து தின்பதுமாக இருந்திருக்கிறார்.
""பகல் முழுவதும் மரப் பொந்துகளில் படுத்து நன்கு துõங்குவது... இரவில் எழுந்து வெளியே செல்வது... இப்படியே இருந்ததால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை குயில் டாக்டரால். அதனால் ஆத்திரமடைந்த குயில் டாக்டர், காக்காவை பிடித்து நன்கு திட்டியிருக்கிறது.
""அந்த திருட்டு காக்கா கடுமையாக வேலை செய்தாவது டாக்டர் பீசை கொடுத்திருக்க வேண்டியதுதானே... அப்படி கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட குயில் டாக்டர், இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல்காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது.
""அன்றிலிருந்து குயில் இனத்தார் அனைவரும் காக்கையின் கூட்டில் தங்கள் முட்டைகளை இட்டுவிட்டு சென்று விடுவர். அது குயிலின் முட்டை என்பது தெரியாமலே காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது.
""நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது. இதுதான் கதை,'' என்றது தாய் ஆந்தை.
""அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருகாலும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம்,'' என்றனர்.
செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை.
நன்றி:வலைத்தமிழ்
குயில் அக்கா | காக்கா அண்ணன் | ஆந்தையார்
Reviewed by haru
on
August 06, 2012
Rating:
No comments