அரசர் கதைகள் – அரசர் குதிரை
அரசர் குதிரை:-
ஆதனார் என்ற அரசர் தென்றல் நாட்டை நல்லாட்சி செய்து வந்தார். மக்களுக்கு ஏதேனும் குறை உள்ளதா என்பதை அறிய விரும்பினார். வணிகனைப் போல மாறுவேடம் போட்டுக் கொண்டு குதிரையில் அமர்ந்தார்.
ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டு வந்தார்.
வழியில் வழிப் போக்கன் ஒருவன் நின்று இருந்தான். குதிரையில் அவர் வருவதைப் பார்த்த அவன் கை காட்டினான்.
அவரும் குதிரையை நிறுத்தினார்.
“ஐயா! நீண்ட தொலைவு நடந்து வந்ததால் களைப்பு அடைந்து உள்ளேன். பக்கத்து ஊர் செல்ல வேண்டும். உங்கள் குதிரையில் என்னையும் ஏற்றிச் செல்லுங்கள். இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்” என்று வேண்டினான்.
இரக்கப்பட்ட அவர், “குதிரையில் ஏறிக் கொள்” என்றார்.
அவனும் குதிரையில் ஏறி அமர்ந்தான்.
இருவரையும் சுமந்து கொண்டு குதிரை பக்கத்து ஊரை அடைந்தது.
“உன் ஊர் வந்துவிட்டது இறங்கிக் கொள்” என்றார் அரசர்.
“இது என் குதிரை... நான் ஏன் இறங்க வேண்டும்? இரக்கப்பட்டு உன்னைக் குதிரையில் ஏற்றி வந்தேன். பெரிய ஏமாற்றுக்காரனாக இருப்பாய் போல இருக்கிறதே. நீ கீழே இறங்கு” என்று அதட்டினான் வழிப்போக்கன்.
அங்கே கூட்டம் கூடி விட்டது.
“தான் யார் என்ற உண்மையைச் சொல்ல வேண்டாம். என்னதான் நடக்கிறது பார்ப்போம்” என்று நினைத்தார் அரசர்.
கூட்டத்தினரைப் பார்த்து, “ஐயா! இது என் குதிரை... வழியில் இவன் குதிரையில் தன்னை ஏற்றிச் செல்லுமாறு கெஞ்சினான். நானும் குதிரையில் ஏற்றி வந்தேன். இங்கே வந்ததும் இதைத் தன் குதிரை என்று அடாவடியாகப் பேசுகிறான்” என்றார்.
அவனோ, “இது என் குதிரை. இவனை நான் ஏற்றி வந்தேன். உங்கள் எல்லாரையும் இவன் ஏமாற்றப் பார்க்கிறான்” என்றான்.
அங்கே இருந்தவர்களால் குதிரைக்குச் சொந்தக்காரர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இருவரையும் பார்த்து, “இந்த ஊர் நீதிபதியிடம் செல்லுங்கள். அவர் உங்கள் வழக்கைத் தீர்த்து வைப்பார்” என்றனர்.
அவர்கள் இருவரும் குதிரையுடன் நீதிபதியிடம் வந்தனர். தான் அரசன் என்ற உண்மையை அவர் வெளிப்படுத்தவில்லை.
“நீதிபதி எப்படி தீர்ப்பு வழங்குகிறார்? பார்ப்போம்” என்று நினைத்தார்.
இருவரையும் பார்த்து நீதிபதி, “உங்களுக்குள் என்ன வழக்கு?” என்று கேட்டார்.
“நீதிபதி அவர்களே! நான் குதிரையில் வந்து கொண்டிருந்தேன். வழியில் இவர் குதிரையில் தன்னை ஏற்றி வரும்படி வேண்டினார். நான் இவரை ஏற்றி வந்தேன். இந்த ஊர் வந்ததும் இவர், இது தன் குதிரை என்கிறார். என்னை ஏற்றி வந்ததாகச் சொல்கிறார். என் குதிரைக்கு உரிமை கொண்டாடுகிறார். நீங்கள்தான் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்” என்றார் அவர்.
“நீ என்ன சொல்கிறாய்?” என்று அரசரைப் பார்த்து கேட்டார் நீதிபதி.
“நீதிபதி அவர்களே! இது என் குதிரை. இரக்கப்பட்டு இவனை ஏற்றி வந்தேன். இப்போது இந்தக் குதிரையே இவனுடையது என்கிறார். இப்படி ஒரு ஏமாற்றுக்காரனை நான் பார்த்தது இல்லை. நீங்கள்தான் என் குதிரையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றான் அவன்.
அங்கிருந்த வீரர்களை அழைத்தார் நீதிபதி.
“இந்தக் குதிரையைக் கொட்டடியில் அடையுங்கள். மற்ற குதிரைகளுடன் இது இருக்கட்டும்” என்றார்.
அவர்களும் அந்தக் குதிரையை மற்ற குதிரைகளுடன் சேர்த்துக் கட்டினர்.
சிறிது நேரம் சென்றது. குதிரைகள் கட்டப்பட்டு இருந்த இடத்திற்கு நீதிபதி வந்தார்.
அவர்கள் இருவரையும் ஒவ்வொருவராக அழைத்தார்.
“உங்கள் குதிரையை அடையாளம் காட்டுங்கள்” என்றார்.
இருவருமே, அந்தக் குதிரையைச் சரியாக அடையாளம் காட்டினர்.
மாறுவேடத்தில் இருந்த அரசரைப் பார்த்த நீதிபதி, “இது உங்கள் குதிரை. இவன் ஏமாற்ற முயன்று இருக்கிறான்” என்றார்.
இதைக் கேட்ட அரசர் வியப்பு அடைந்தார். தன் மாறுவேடத்தை நீக்கினார். அரசரைப் பார்த்த நீதிபதி அவரை வணங்கினார். “நீதிபதி அவர்களே! நாங்கள் இருவருமே குதிரையைச் சரியாக அடையாளம் காட்டினோம். நான்தான் குதிரையின் சொந்தக்காரன் என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என்று கேட்டார்.
“அரசர் பெருமானே! நீங்கள் குதிரையின் அருகே சென்றதும், அது மகிழ்ச்சியாகக் கனைத்தது. உங்களை உரசிக் கொண்டு நின்றது. ஆனால், அவன் அருகில் சென்றதும் அந்தக் குதிரை அவனை உதைத்தது. இதைப் பார்த்த நான் நீங்கள்தான் குதிரையின் சொந்தக்காரன் என்பதை அறிந்து கொண்டேன்” என்று விளக்கம் தந்தார் நீதிபதி.
“உங்கள் அறிவுக்கூர்மையைப் பாராட்டுகிறேன்” என்ற அரசன் அவர்களுக்கு பரிசுகளை கொடுத்தார்.
ஏமாற்ற முயன்ற வழிப்போக்கனுக்கு, தக்க தண்டணை கொடுத்தார் அரசர்.
நன்றி தினமலர்!
அரசர் கதைகள் – அரசர் குதிரை
Reviewed by haru
on
April 04, 2013
Rating:
No comments