Ads Below The Title

சிறுவர் கதைகள் - தாகம்

தாகம்!

அந்த அடர்ந்த காட்டில் தாகத்தினால் வாடிய நரி ஒன்று அங்குமிங்கும் நீர் தேடி அலைந்தது. ஓரிடத்தில் நீர் நிலை ஒன்று காணப்பட்டது. அதைக் கண்ட நரி பெரிதும் மகிழ்ச்சி அடைந்தது. அதில், இறங்கித் தண்ணீரைக் குடித்துவிட வேண்டும் என்று தீர்மானித்தது.

இயல்பிலேயே எச்சரிக்கை மிக்க நரி, "ஒருவேளை இந்த நீர் நிலையில் முதலை போன்ற கொடிய நீர்வாழ் உயிரினங்கள் இருந்தால் நம்மைக் கொன்று தின்று விடுமே!" என்று ஒரு கணம் எண்ணியது.

இதைச் சோதித்துப் பார்த்து விடுவது என்ற எண்ணத்துடன் நீர் நிலையை உற்று நோக்கியது. நீர் நிலை எந்தச் சலனமும் இல்லாமல் பேரமைதியாக இருந்தது. ஆள் அரவமற்ற இடத்தில் நீர் நிலை ஒன்றில் நீர் ஆடாமல், அசையாமல் இருந்தால் அதில், முதலை உள்ளது என்று நரியின் முன்னோர்கள் எப்போதே நரியிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. எனவே, அது அந்த நீர் நிலையில் முதலை நிச்சயம் இருக்கும் என்ற எண்ணத்துடன், அதைச் சோதிக்க ஒரு சின்னக் கல்லை நீர் நிலையில் உருண்டு விழும்படி உருட்டியது.

கல் விழுந்தவுடன், நீருக்குள்ளிருந்து சிலிர்த்துச் சீறி வந்தது முதலை ஒன்று. அது கரையில் நின்ற நரியைப் பார்த்தவுடன் அதன் மேல் பாய்ந்தது. நரி சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டது.

"நன்றி முதலையாரே... நல்ல வேளை உன்னிடமிருந்து இறைவன் என்னைக் காப்பாற்றிவிட்டார்!" என்று கூறியது நரி.

முதலைக்கு இரை கிடைக்காத எரிச்சல் இருந்த போதிலும் இச்சகமாகப் பேசியது.

"நீ சொல்வது உண்மைதான் நண்பா. நீ தரையில் இருந்து உணவைத் தேடி, வேட்டையாடிப் பெறுகிறாய். நான் என் இருப்பிடம் வரும் இரையை வேட்டையாடுகிறேன். இதில் யாரையும் தப்புச் சொல்ல இடமில்லை என்றாலும் உன் சாமர்த்தியத்தை நான் பாராட்டத்தான் வேண்டும்", என்று கூறியது

"நீ எனக்கு இரையாகவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது உண்மை தான். ஆனால், உன் சாமர்த்தியம், அறிவை நேரில் பார்த்த பிறகுதான் நீ உண்மையில் அறிவாளி என்று ஏற்றுக் கொள்கிறேன். உன் நட்பு வேண்டும். என்னை நண்பனாக ஏற்றுக் கொள்!" என்று கூறியது.

நரிக்கு முதலையைப் பிடிக்கவில்லை. அது சாமர்த்தியமாக இச்சகம் பேசுகிறது என்று அது எண்ணியது. என்றாலும் ஒப்புக்காகச் சரி என்று சம்மதித்தது.

நான் உன்னுடன் நட்புத் தொடர வேண்டுமானால், நான் தண்ணீர் குடிக்க வரும் போது தண்ணீரை விட்டுத் தரைக்கு வந்துவிட வேண்டும், என்ற நிபந்தனை போட்டது.

அதை ஏற்றுக் கொண்ட முதலை தண்ணீரை விட்டுக் கரையேறி வெகு தூரத்தில் விலகி நிற்க, நரி நீர் குடித்துவிட்டுச் சென்றது.

இப்படியே இது தினந்தோறும் செய்து கொண்டே வர, முதலையுடன் நரிக்கு நட்பு ஏற்பட்டது. நரி இந்த முதலையால் எப்போது வேண்டுமானாலும் தனக்கு ஆபத்து வரக்கூடும் என்று எண்ணியது. முதலைக்கோ, நரியை தின்றே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் வஞ்சகமாகவே இருந்தது.

ஒரு சமயம் முதலை, நரியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னது.

"நண்பா, இங்கே ஒரு பெரிய குரங்கு திரிகிறது. அதன் ஈரலை நான் தின்ன வேண்டும் என்று வெகு நாளைய விருப்பம் இருக்கிறது. அதை எப்படியாவது இங்கே அழைத்து வந்து, எனக்கு உணவாக்க வேண்டும். அந்தக் குரங்கு தந்திரமும், சாமர்த்தியமும் நிறைந்தது. ஆகவே, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!'' என்று சொன்னது.

"அந்தக் குரங்கு அப்படி என்ன சாமர்த்தியமாக இருக்கிறது?'' என்று கேட்டது நரி.

"நீயாவது கல் போட்டுப் பார்த்து, நான் இருப்பதைத் தெரிந்துக்கொண்டு நீர் குடிக்காமல் விலகினாய். ஆனால், குரங்கு நான் இருப்பது தெரிந்தும், ஒரு மூங்கில் குச்சியை எடுத்து வந்து அதன் வழியே தண்ணீரை மரத்தின் மீது அமர்ந்து குடித்துவிட்டுச் செல்கிறது. அப்படியென்றால் அதன் அறிவு பாராட்டப்பட வேண்டிய ஒன்றே!" என்றது முதலை.

இப்போது முதலையின் கூர் அறிவைப் புரிந்து கொண்டது நரி.

"தன்னைவிட அறிவாளியாக இருப்பவர் எவரையும் அழித்துவிட வேண்டும் என்று எண்ணுகிறது இந்த முதலை. குரங்கு அறிவாளி என்று அதற்கு விளங்கிவிட்டதால், அதைப் பிடித்து ஒழித்துக் கட்ட அதற்கு நிகரான சாமர்த்தியம் பெற்ற என்னை அதற்குக் கருவியாகப் பயன்படுத்த நினைக்கிறது.

அதை நான் எப்படி அழைத்து வருவேன் என்ற தந்திரம் அதற்கு புரிந்துவிட்டால், நாளை என்னை எப்படி ஒழித்துக் கட்டுவது என்று அதற்கு புரிந்து போகும். ஆகவே, கொல்லப்பட வேண்டியது, கொடிய இந்த முதலைதான்!" என்று அது எண்ணியது.

பின்னர் அது குரங்கைத் தேடிச் சென்றது. குரங்கிடம் அது முதலையின் திட்டத்தை எடுத்துக் கூறியது. எனவே, அதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கூறியது.

குரங்கும், நரியும் நீண்ட ஆலோசனை செய்தன. கடைசியாகக் குரங்கு கூறியது.

"இந்த முதலை நீரில் இருக்கும் வரை அதற்குப் பலம் அதிகம். அதை நீரை விட்டுச் சிறிது தூரம்வரை கூட்டி வந்துவிடு. அப்போது அதைக் கொன்று விடலாம்!" என்று கூறிக் காதோடு காதாக ரகசியம் கூறியது.

நரி திரும்பிச் சென்றது. ஏரிக்கரை ஓரத்தில் இருந்த அதன் பதுங்கு குழிக்கு அருகே சென்றது. முதலையை அழைத்தது.

"நான் சாகப் போகிறேன். என்னை ஒரு வேட்டைக்காரன் சுட்டுவிட்டான். தயவு செய்து நீரிலிருந்து வெளியே வந்து, என்னைக் காப்பாற்று!'' என்று அழைத்தது.

முதலை நீரிலிருந்து எட்டிப் பார்த்தது. நரி கால்களை உதைத்துக் கொண்டு கிடந்தது. முதலையின் நாவில் எச்சில் ஊறியது.

"நண்பா, இதோ உன்னைக் காப்பாற்ற வருகிறேன்!" என்று கூறியவாறு விறுவிறுவெனத் தரையில் நடந்து வந்தது.

அது நரிக்கு அருகே வரவிருந்த சமயத்தில், தடதடவென குரங்கு ஓடிவரும் ஓசையைக் கேட்டது. குரங்கு அதன் அருகே வந்து ஒரு வைர மாலையைப் போட்டுவிட்டு ஓடியது. முதலை ஆச்சரியத்துடன் வைர மாலையையும், குரங்கையும் பார்த்துக் கொண்டிருந்த அதே வேளையில், துரத்தி வந்த ஜமீன்தாரின் பணியாட்கள் முதலை அருகே மாலை கிடப்பதைப் பார்த்தனர்.

முதலையைத் தங்கள் கையில் உள்ள ஆயுதங்களினால் தாக்கிக் கொன்றனர். வைர மாலையைக் கைப்பற்றித் திரும்பினர். அதற்குள் நரி தன் வளைக்குள் புகுந்து கொண்டது. குரங்கு அடர்ந்த கிளைகளுக்குள் மறைந்துக் கொண்டது.

முதலை ஒழிந்த திருப்தியில் அன்றிலிருந்து இரு விலங்குகளும் நிம்மதியாக நீர் நிலையில் நீரைக் குடிக்கத் துவங்கின.

சிறுவர் கதைகள் - தாகம் சிறுவர் கதைகள் - தாகம் Reviewed by haru on January 12, 2013 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]