நீதி கதைகள் : கெட்டிக்கார சேவல்
கெட்டிக்கார சேவல்
ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல் கூவியது. பலதடவை கூவியது.
இதைக் கேட்ட நரி அங்கே வந்தது. நரிக்கு சரியான பசி இருந்தது. அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது, ஆனால் சேவல் மரத்தின் மீது இருந்தபடியால் அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து,
“சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம்” என்றது
.
நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.
இதைக் கண்ட நரி, "என்ன சகோதரா!, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது?" என்று கேட்டது.
அதற்கு சேவல்,
"அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா? என்பதைக் கவனிக்கிறேன்" என்றது.
அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக “சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்” என்று கூறி கிளம்பியது.
சேவல், “அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது”
நரி “அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்” என்றது
இதை சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது.
சேவல் “யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது” என்று கூறி சிரித்தது.
கெட்டிக்காரன் புளுகினாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும்.
நீதி கதைகள் : கெட்டிக்கார சேவல்
Reviewed by haru
on
January 21, 2013
Rating:
No comments