Ads Below The Title

பூமிக்கு வந்த சூரியப் பந்து | Sun Visits Planet Earth Story

எப்போதுமே வானத்திலேயே இருக்கிறோமே, கொஞ்சம் பூமிக்குத்தான் போய் பார்ப்போமே’ என வானத்தில் தெரியும் சூரியனுக்கு ஒரே ஆசை. உடனே பூமிக்கு இறங்க ஆரம்பித்தது. மலைகளின் முகட்டில் இறங்கிய சூரியனுக்கு ஒரு யோசனை வந்துச்சு. தன்னுடைய சூட்டை பூமி தாங்குமான்னு யோசித்துக் கொண்டே இருந்தது. அருகில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் இறங்கி சூட்டை குறைக்கப் பார்த்தது சூரியன்.

சூரியனின் வெப்பம் அவ்வளவு சீக்கிரமா குறைஞ்சிடுமா என்ன? இருந்தாலும் கொஞ்ச நேரம் தண்ணியிலேயே சுத்தி சுத்தி வந்ததால, சூடு கொஞ்சம் குறைஞ்சு காணப்பட்டது.

தண்ணியில இருந்து வெளியே வந்த சூரியன், காட்டை சுத்தி சுத்திப் பார்த்தது. நெடு நெடுவென வளர்ந்த உயரமான மரங்கள், குண்டு குண்டான மரங்கள், அவற்றில் கொத்துகொத்தாக பழங்களையும், பூக்களையும் கண்டு சந்தோஷப்பட்டுச்சு.

மரங்கள் ரொம்ப அதிகமாக இருந்ததால அந்த இடம் இருட்டா இருந்துச்சு. சூரியன் உள்ளே நுழைந்ததும் நூறு அகல் விளக்குகளை ஏத்தி வச்சது மாதிரி வெளிச்சமானது அந்தக் காடு.

திடீரென ஏதோ வெளிச்சம் வருகிறதே என தூரத்தில் பார்த்த இரு யானைகள், வெளிச்சம் வந்த இடத்தைப் பார்க்க வேகமாக வந்துச்சுங்க. தூரத்தில் இருந்து பார்த்தப்ப, சூரியன் வட்டமாக தெரிஞ்சது.

Sun and Elephant - Sun Visits Planet Earth Story

“அட! அதோ பாரேன் ஒரு பந்து” என்றது மகி யானை.

“ச்சே..ச்சே... கால்பந்தா இருந்தா ஒளிராதே” என்றது வாண்டு யானை.

“எது எப்படியோ, நமக்கு விளையாட ஒரு கால்பந்து கிடைச்சிருச்சி. வா சீக்கிரமா போய் பந்தை எடுத்து விளையாடலாம்” என்றழைத்தது மகி யானை.

“ஏய், நல்லா பாரு. அது பந்தா! பந்துன்னா இவ்வளவு வெளிச்சமா ஒளிராதே. இது பந்தா இருக்காது” என்றது வாண்டு யானை.

“சரி... வா, கிட்ட போய் பார்ப்போம்” என்றது மகி யானை.

சூரியனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“என்ன! இந்த யானைகள் என்னை பந்துன்னு நினைச்சிடுச்சிங்களா. பூமிக்கு வந்துட்டதால என்னை அடையாளம் தெரியாமப் போச்சா?” என மனசுக்குள்ள சொல்லிக்கிச்சு.

அருகில் வந்த யானைங்க சூரியப் பந்தை அதிசயமாக பார்த்துச்சுங்க.

“வாண்டு! நீ சொன்னது போல் இது பந்தில்லைன்னு நினைக்கிறேன்” என்றது மகி.

“ஆமாம் மகி! அப்படின்னா இது என்னது? இவ்வளவு வெளிச்சமா இருக்கே. கிட்ட போனா ரொம்ப சுடுதே” என்றது வாண்டு.

“சரி. பேசிக்கிட்டே இருந்தா எப்படி. நாம் விளையாடப் பந்து கிடைச்சிருச்சு. வா விளையாடலாம்” என மீண்டும் அழைத்தது மகி.

“சரி. நீ இங்கே நில். நான் அந்த மரத்துக்கு பக்கத்துல நிக்கிறேன். நீ பந்தை உதைத்து என்கிட்ட அனுப்பு. நான் அதைத் தடுத்து மீண்டும் உன்கிட்ட அனுப்புறேன். இப்படியே நாம விளையாடுவோம்” என்றது வாண்டு.

‘அய்யய்யோ... யானைகள் கால்களில் நான் சிக்கப் போறேன்னா?’ என நினைக்கும் போதே சூரியனுக்கே வியர்க்க ஆரம்பிச்சுடுச்சி.

“ரெடி! ஒன்... டூ... த்ரீ...”ன்னு ஆரம்பித்த மகி, சூரியப் பந்தை ஓங்கி உதைத்தது.

வாண்டை நோக்கி பறந்த சூரியனை தனது துதிக்கையால் பிடித்தது. சூட்டை தாங்க முடியாம பந்தை உடனே கீழேப் போட்டது.

“ஐயோ! பந்து ரொம்பச் சுடுதே... அடுப்பிலிருந்து யாராவது இந்தப் பந்தை தூக்கி போட்டாங்களா?” என்றது வாண்டு.

“ஆமா! இவரு விளையாடறதுக்கு சுடச்சுட பந்தை சுட்டுத் தந்திருக்காங்க பாரு” என கேலி செய்தது மகி.

இருவரின் உரையாடலுக்கு இடையே ‘வேறு இடம் செல்லலாம்’ என நினைத்த சூரியன் சற்றே உருண்டது.

“ஏய் வாண்டு!, காத்துல அந்தப் பந்து உருளுது பாரு. அதை என்கிட்ட உதைச்சி அனுப்பு” என்றது மகி.

....சர்க் ஓங்கி ஒரே உதை.

இப்போது மீண்டும் மகியின் உதை.

நாலைந்து உதைகளிலேயே சூரியனுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.

‘அய்யய்யோ! தெரியாமல் பூமிக்கு வந்துட்டோமே’ன்னு எண்ணியவாறு, ‘எப்படி இவர்களிடம் இருந்து

தப்புவது’ என யோசித்தது சூரியன்.

அந்த நேரத்தில் வாண்டு அடித்த சூரியப் பந்தை மகி

தவறவிட்டது.

“நீ தோத்துட்ட. நீ தோத்துட்டன்னு” கூறி மகிழ்ச்சியில் வலம் இடதுமாக உடலை ஆட்டியது வாண்டு.

சற்றே கோபமா மகி,

“இப்ப பிடி பார்க்கலாம்” எனக் கூறி, ஒரு சிறிய பாறை மீது வைத்து குறிபார்த்து சூரியப் பந்தை ஓங்கி காலால் ஒரு உதை விட்டது.

இதுதான் சமயம் என தனது முழு பலத்தையும் சேர்த்து வானத்தை நோக்கி பறந்தது சூரியன்.

வானத்திற்கு வந்த பிறகுதான் அது பழைய நிலைக்கு வந்துச்சு.

‘இனி என்ன ஆனாலும் சரி, பூமியைச் சுற்றிப் பார்க்க போகவேகூடாது’ என மனதிற்குள் சபதம் எடுத்தது சூரியன்.

தாங்கள் அடித்த பந்து எங்கே விழுந்துச்சின்னு தேடிக் கொண்டிருந்தன யானைகள்.

குழந்தைகளே! உங்களுக்கு தெரிஞ்சா அதை யானைகளிடம் சொல்லுங்க.
  

கதை ஆசிரியர்: கன்னிக்கோவில் இராஜா

நன்றி: தி இந்து (09/07/2014)

Story & Image Credit: The Hindu


பூமிக்கு வந்த சூரியப் பந்து | Sun Visits Planet Earth Story பூமிக்கு வந்த சூரியப் பந்து | Sun Visits Planet Earth Story Reviewed by haru on July 12, 2014 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]