aatai kaanom tamil story

Ads Below The Title

ஆட்டைக் காணோம்!

முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவு கொடுக்க வேண்டுமே.. இதற்காக தினமும் இரண்டு எலிகளை அடித்து உணவாக கொடுத்தான்.

அப்படி இருந்தும் தினமும் ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது..

ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டை இந்த வேட்டை நாய்கள் இன்பமாக தின்றன. இப்படி நடப்பதை கண்ட அவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான்.

அப்பொழுது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன்.

அதற்கு முனிவர், “மகனே யாருக்கும் வயிறார உணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை மாத்திரம் நாய்களுக்கு உணவாக கொடுக்கிறாய். இது அவைகளுக்கு பத்தாது.

“நீ அவ்வப்போது உன் வீட்டிற்காக ஆட்டை வெட்டுகிறாய் அல்லவா? அந்த மாமிசத்திலிருந்து சிறு துண்டுகளையாவது எடுத்து இந்த நாய்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் அவைகள் உனக்காக நன்கு வேலை செய்யும்,'' என்றார்.

அதன்படியே செய்வதாக ஒப்பு கொண்டான் மேய்ப்பன். அப்படியே செய்து வந்தான். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அன்றிலிருந்து மந்தையில் ஆடுகள் குறையவில்லை.

மறுநாள் ஓநாய்கள் ஆட்டை திண்ண வந்தன. அதை கண்ட வேட்டை நாய்கள் அவைகளை விரட்டின. “என்ன இத்தனை நாட்களாக நாங்கள் விட்டு சென்ற மாமிசத்தை தின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்னவாயிற்று?'' என்றன.

“உங்களது எச்சில் மாமிசம் எங்களுக்கு வேண்டாம். எங்கள் தலைவர் வயிறு நிறைய எங்களுக்கு மாமிசம் கொடுக்கிறார்,'' என்றன.

அவற்றை மீறி ஓநாய்கள் மந்தைக்குள் நுழைந்தன. அவைகள் மீது பாய்ந்து கிழித்து கொன்றன வேட்டை நாய்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் மந்தை மேய்ப்பன்.

நீதி : நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நாம் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும். தகுதியான சம்பளம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு உண்மையாக உழைப்பர்.
aatai kaanom tamil story aatai kaanom tamil story Reviewed by haru on August 31, 2016 Rating: 5

No comments