muttalukku buthi sonnal tamil story
முட்டாளுக்கு புத்தி சொன்னால்?
ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன.குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.
கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று.
நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது.
அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று.
மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது.
மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன.
பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன.
ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்
பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன.
மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளிக் கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பறவை கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது,
பிறகு குரங்குகளை நோக்கி நண்பர்களே மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசை எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள் என்று புத்திமதி கூறிற்று.
உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார் என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன.
பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது.
இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைப் பிடித்து தரையில் மோதிக் கொன்று விட்டன.
( தீய குணம் படைத்தவர்களுக்கு உபதேசம் செய்வதே வீண் வேலை )
muttalukku buthi sonnal tamil story
Reviewed by haru
on
August 22, 2016
Rating:
No comments