Ads Below The Title

SEELANIN THANTHIRAM சீலனின் தந்திரம்

சீலனின் தந்திரம்

வைரபுரி என்ற நாட்டில் பல கோடிகளுக்கு அதிபனான சீலன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் தயாளகுணம் கொண்டவன். அந்நாட்டு மன்னன் பர்வதனனின் ஆருயிர் நண்பன். பொக்கிஷத்தில் பணக்குறைவு ஏற்பட்ட போதெல்லாம் மன்னனுக்குத் தேவைப்பட்ட பணத்தைக் கொடுத்து பிறகு வாங்கிக் கொள்வான் சீலன். அப்படி கிடைத்த வட்டிப் பணத்தை ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவி வந்தான் சீலன்.

ஓவியக் கலையில் கைதேர்ந்தவன் சீலன். மற்ற கலைகளிலும் அவனுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அழகான சிற்பங்கள், வண்ண ஓவியங்கள், வேலைப்பாடுடன் கூடிய கைவினைப் பொருள்கள் என்றால் என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடுவான். ஆனால், அப்படி வாங்கும் பொருள்களை யார் கேட்டாலும் கொடுக்கவும் மாட்டான்.

மன்னன் பர்வதனுக்கு, சீலனின் இந்தப் பிடிவாதக் குணம் ஒன்றுதான் பிடிக்காமல் இருந்தது. அதனால் சீலனிடமிருந்த அழகிய பொருள்களில் ஒன்றைக் கூடப் பெறமுடியாமல் போனது.


ஒரு நாள் சீலனைக் காண வாலிபன் ஒருவன் வந்தான். கிழிந்த ஆடைகளை அணிந்து தாடி வளர்த்துக் கொண்டிருந்த போதிலும் அவன் உயர் குடியில் பிறந்தவன் என்று சீலனுக்கு தெரிந்துவிட்டது. அவன் அந்த இளைஞனை வரவேற்று உட்காரும் படி சொன்னான்.

""ஐயா! என்னை இந்தக் கோலத்தில் கண்டவர்கள் எல்லாரும் விரட்டினார்களே ஒழிய என்னை "உட்கார்' என்று இதுவரை யாரும் சொல்லியதில்லை. மிக்க நன்றி. நீங்கள் கலை அம்சம் கொண்ட பொருள்களை விலைக்கு வாங்கிக் கொள்வதாகக் கேள்விப்பட்டேன்.

""என் பெயர் சக்தி. என் முன்னோர்கள் ஜமீன்தாரர்கள். எங்களுக்குச் சொந்தமான அபூர்வ ஓவியம் ஒன்றைத் தங்களுக்கு விற்க எடுத்து வந்துள்ளேன்,'' எனக் கூறித் தான் கொண்டு வந்த ஓவியத்தை அவனிடம் காட்டினான்.

அந்த ஓவியத்தைக் கண்டு சீலன் பிரமித்தான். ஒரு தாய் குழந்தையை எடுத்துக் கொஞ்சுவது போன்ற படம் அது. குழந்தை தன் பொக்கை வாயை விரித்து சிரிப்பது மிக அழகாக தீட்டப்பட்டிருந்தது. வண்ணங்கள் கண்களுக்கு குளிர்ச்சி தரும் விதமாகத் தீட்டப்பட்டிருந்தன.

""இது கற்பனையில் தோன்றிய படமாக இல்லை. நேரில் நடப்பதை பார்த்து இதனை வரைந்திருக்கிறார் ஓவியர். என்ன நான் சொல்வது சரிதானே?'' என்று கேட்டான்.

""நீங்கள் நினைத்தது சரியே. அந்த ஓவியத்தில் உள்ள பெண்மணி என் தாய். அந்தக் குழந்தைநானே. இதனை வரைந்த ஓவியனுக்கு என் தந்தை நுõறு ஏக்கர் நிலம் பரிசாக அளித்தார். ஆனால், இப்போதோ நான் அந்த ஓவியத்தை விற்றுப் பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்,'' என்றான்.

""இந்த ஓவியத்திற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கிறேன். நீயே இதன் விலையைச் சொல்,'' என்றான் சீலன்.

""எனக்கு இதற்காக நுõறு பவுன்கள் கொடுத்தால் போதும். அதைக் கொண்டு நான் முன்னுக்கு வந்துவிடுவேன்,'' என்றான்.

""இவ்வளவு குறைவாகக் கேட்கிறாயே...'' என்று கேட்டார் சீலன். ""அதற்கு மேல் நான் கேட்கமாட்டேன்!'' என்றான் சக்தி. நுõறு பவுன்களைக் கொடுத்து அனுப்பினான் சீலன்.

அன்று மாலை சீலன் தான் வாங்கிய ஓவியத்தை மன்னனிடம் காட்டினான். ""ஆகா! எவ்வளவு அழகாக இருக்கிறது. இதை எனக்குக் கொடுத்துவிடு,'' என்றான் மன்னன்.

""நான்தான் இந்த மாதிரி பொருள்களை யாருக்கும் கொடுக்கமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியுமே. நீங்கள் கேட்டும் பயனில்லை!'' என்று கூறிவிட்டான்.

சில வருடங்கள் சென்றன. ஒரு நாள் சீலன் மன்னனுடன் பேசிக் கொண்டிருக்கையில் அங்கு வந்தான் சக்தி. அவனை அன்புடன் வரவேற்று மன்னனுக்கும் அறிமுகம் செய்து வைத்தான் சீலன்.

""நீ எப்படி இருக்கிறாய்?'' என்று விசாரித்தான் சீலன்.

""ஐயா! நீங்கள் கொடுத்த நுõறு பவுன்களைக் கொண்டு வியாபாரம் செய்யத் தொடங்கி இப்போது உயர் நிலையில் இருக்கிறேன். உங்களிடம் ஒரு உதவியை நாடியே இப்போது வந்திருக்கிறேன்,'' என்றான்.

""என்ன வேண்டும்?''

""நான் அந்த ஓவியத்தைத் தங்களுக்கு விற்ற நாளிலிருந்து எனக்கு மன நிம்மதியே இல்லை. தயவு செய்து அதை நீங்கள் எனக்குத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அதற்காக நீங்கள் என்ன கேட்டாலும் நான் கொடுக்கிறேன்,'' என்றான்.

சக்தியின் மனநிலை அவனுக்கு புரிந்தது. ஆனால், மன்னனோ தான் கேட்டும் அந்த ஓவியத்தைக் கொடுக்க முடியாது என்று கூறிய சீலன் என்ன செய்யப்போகிறான் என்று கூர்ந்து கவனிக்கலானான்.

""நான் ஒருமுறை ஒரு பொருளை வாங்கிவிட்டால் அதை யாருக்கும் கொடுக்கமாட்டேன். இது என் கொள்கை,'' என்றான்.

""என்தாயின் மீது வைத்துள்ள பாசத்தால்தான் அந்த ஓவியத்தைக் கொடுக்கும்படிக் கேட்கிறேன். எனக்காக உங்கள் கொள்கையைக் கொஞ்சம் தளர்த்துங்கள்,'' என்று வேண்டினான்.

அவனுக்கு எப்படி உதவலாம் என யோசித்த சீலன், ""சக்தி நீ உன் தாயின் மீது எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறாய் என்பது தெரிகிறது. அதனால் உனக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறேன். நான் ஓவியக் கலையில் ஓரளவு பயிற்சி பெற்றவன் என்பது உனக்கும் மற்றவர்களுக்கும் தெரியும்.

""அதனால் நீ கொடுத்த ஓவியம் போலவே நான் மற்றொரு ஓவியம் தீட்டுகிறேன். இதற்கு ஒருவார காலம் பிடிக்கும். இரண்டு ஓவியங்களில் எது முதலாவது வரையப்பட்டது என்று கண்டுபிடித்து உன் ஓவியத்தை எடுத்துச் செல். இந்தப் பரீட்சைக்கு நம் மன்னரே நடுவர்!'' என்றான். சக்தி அதற்குச் சம்மதித்தான்.

சீலன் ஒரு வார காலத்தில் சக்தி கொடுத்த ஓவியம் போல மற்றொரு ஓவியத்தை வரைந்துவிட்டான். இரு ஓவியங்களையும் அவன் குறித்த நாளன்று மன்னன் முன் கொண்டு போய் வைத்தான். அதேநாளில் அங்கு வந்தான் சக்தி.

அந்த இரு ஓவியங்களையும் பார்த்துவிட்டு தான் சீலனுக்கு விற்ற ஓவியம் எது என்பதைக் கண்டு பிடித்துக் காட்டினான்.

""சக்தி! நீ வென்று விட்டாய். அதுதான் நீ எனக்கு விற்ற ஓவியம். அதனை நீ எடுத்துக் கொண்டு போகலாம்,'' என்றான்.

மன்னனும் அந்த இரு ஓவியங்களையும் மாறி மாறிப் பார்த்து விட்டு, ""இரண்டு ஓவியங்களும் ஒன்று போலத்தானே உள்ளன. எப்படி ஓவியத்தைக் கண்டுபிடித்தாய்?'' என்று கேட்டான்.

""அரசே! சீலன் மிகச் சிறந்த ஓவியர் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் எவ்வளவு கூர்ந்து கவனித்து ஓவியம் தீட்டி இருக்கிறார் என்பதற்கு இந்த ஓவியத்தில் என் தாயின் இடது காதின் ஓரமாக உள்ள சிறு மச்சத்தைக் கூட ஓவியத்தில் தீட்டி இருப்பதை எடுத்துக் காட்டலாம்.

""நான் விற்ற படத்தில் என் தாயாரின் மூக்குத்திக் கல் நீல நிறத்தில் உள்ளது. ஆனால், சீலன் தீட்டிய ஓவியத்தில் அது சிவப்பு நிறத்தில் உள்ளது. இந்த சிறு வித்தியாசத்தைக் கொண்டு என் ஓவியம் எது என்று கண்டு கொண்டேன். ஆனால், இந்தச் சிறிய தவறை கைதேர்ந்த ஓவியரான சீலன் எப்படிச் செய்தார் என்றுதான் எனக்குப் புரியவில்லை,'' என்று கூறி அவர்களை வணங்கிவிட்டுத் தன் ஓவியத்தை எடுத்துக் கொண்டு சென்றான்.

""சீலா... நீ ஏன் தவறு செய்தாய் என்பது சக்திக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், எனக்குத் தெரியும். தாய் மீது அன்பு கொண்டு சக்தி படத்தை கேட்டதும் உனக்கு அவன் மீது இரக்கம் வந்துவிட்டது. அதே சமயம் உடனே கொடுத்துவிட்டால், என்னுடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் போட்டி வைப்பது போல் வைத்து, அதற்கு என்னையே நீதிபதியாக்கி வேண்டுமென்றே தவறு செய்வதுபோல் செய்து சக்தியிடம் படத்தை கொடுத்து விட்டாய். உன்னுடைய திறமையை பாராட்டுகிறேன்!'' என்றான்.

பிரச்னை தீர்ந்ததை எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்டான் சீலன்.
SEELANIN THANTHIRAM சீலனின் தந்திரம் SEELANIN THANTHIRAM சீலனின் தந்திரம் Reviewed by haru on August 19, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]