APPAVIN ANBU TAMIL STORY
·
அவமானத்தில் , ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்துவிடலாமா என்று தோன்றியது அவனுக்கு. எல்லாம் இந்த அப்பாவால் வந்தது . காலேஜ் முதலாம் ஆண்டு படிக்கிற ஒருத்தனுக்குத் தெரியாதா , மூனு மணி நேரம் பஸ்ஸில் போய் , சரியான நிறுத்தத்தில் இறங்கி , மாமா வீட்டுக்குப் போய் சேருவது ?
எவ்வளவோ கெஞ்சித்தான் பார்த்தான் கிறிஸ்டோபர் ,
" அப்பா , நீங்க பஸ் ஏத்திவிடல்லாம் வர வேணாம்ப்பா . நானே ஸ்டாப்பிங்ல கரெக்டா இறங்கிடுவேம்ப்பா . மாமா நம்பர்தான் இருக்குதுல்ல ? " .
அப்பா விடுவதாக இல்லை ,
" அவன் திருச்சியில இருந்தப்ப அடிக்கடி போயிருக்கோம் , வீடு தெரியும். இப்ப தஞ்சாவூர் ட்ரான்ஸ்ஃபர் ஆகி புது அட்ரஸ்க்கு வந்துட்டான். நீ எங்கேயாச்சும் எறங்கிட்டா தவிச்சிக்கிட்டுல்ல நிக்கணும் ? நான் வந்து கண்டக்டர்கிட்ட
தெளிவா சொல்லிட்டு வந்துடுறேன் " . அப்பா இது மாதிரி விஷயங்களில் பின் வாங்குவதே இல்லை . ஆனா இப்படி மானத்தை வாங்குவார்னு யாருக்குத் தெரியும் ?
பஸ் வரைக்கும் வந்தார். முதலும் இல்லாமல் , கடைசியும் இல்லாமல் நடுவில் இருக்கும் ஒரு ஜன்னலோர இருக்கையில் அவனை உட்கார வைத்தார் . திடீரென்று இறங்கி ஓடிப்போய் சிப்ஸும் , குளிர் பான பாட்டிலும் வாங்கி வந்து அவன் கையில் கொடுத்தார். வீட்டில் கொடுத்தது பத்தாது என்று இன்னும் ஒரு நூறு ரூபாய் எடுத்து அவன் சட்டைப் பையில் சொருகினார். அது வரைக்கும் எல்லாமே சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது . பஸ் கிளம்பத் தயாராகும்போதுதான் அப்பா அப்படி நடந்து கொண்டார் .
கண்டக்டரிடம் போய் ,
" சின்னப் பையன் சார் . இப்ப தான் முதல் தடவையா போறான் . அட்ரஸ் தெரியாது. கொஞ்சம் ' சாந்தப் பிள்ளை கேட் ' வந்ததும் இறக்கி விட்ருங்களேன் ப்ளீஸ் " . அத்தோடு அப்பா நிறுத்தியிருக்கலாம் . அப்புறம் ஒன்று சொன்னார் பாருங்க.
" சார் பையனுக்குக் நேத்துலேர்ந்து கொஞ்சம் வயிறு சரியில்ல . ஏதாவது ஒரு அவரசம்னு சொன்னான்னா தண்ணி உள்ள பக்கமா கொஞ்சம் இறக்கி விட்டு அழைச்சிட்டுப் போங்க " . அவர் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிவிட்டுப் போய் விட்டார். பஸ்ஸே சிரிப்பா சிரிக்கிது.
இங்கு மட்டும் கிடையாது . எங்காவது கிரெளன்டுக்கு விளையாடப் போனாலும் , எந்த இடம் ? , கூட விளையாட வருபவர்கள் யார் யார் ? , அவர்களுடைய மொபைல் நம்பர் எல்லாம் கேட்டு வாங்கிக் கொண்டுதான்
அனுப்புவார். அவன் கிரெளன்டுக்குப் போய்ச் சேருவதற்குள் கிட்டத்தட்ட எல்லாருக்குமே கால் பண்ணி ,
" கிறிஸ்டோபர் வந்தாச்சா ,
வந்தாச்சா "ன்னு கேட்டுக் கொண்டே இருப்பார் . பசங்க கலாய்ப்பார்கள் ,
" ஏன்டா , நீ வெளிய வரும்போது உங்க அப்பா கிட்ட பர்மிஷன் வாங்குவியா , இல்ல ஃபார்ம் Fill up பண்ணிக் கொடுப்பியா ? " .
கண்டர் அருகில் வந்ததும் டிக்கெட் காசை எடுத்து நீட்டினான் . அவர் ,
" யப்பா தம்பி , வயிறு எதாச்சும் கோளாறு பண்ணா உடனே சொல்லிடுப்பா , நிறுத்திடுறேன் . பல பேரு வர்ர பஸ்ஸு "
சொல்லிவிட்டு ஏதோ பெரிய ஜோக்கை சொல்லி விட்டது போல விழுந்து விழுந்து சிரித்தார். கிறிஸ்டோபர் தலையைக் குனிந்து கொண்டான்.
எங்க போனாலும் இந்த அப்பாவால மானக்கேடுதான். பாசம் என்ற பெயரில் இப்படித்தான் மானத்தை வாங்குவதா ? வேண்டுமென்றே மொபைலை switch off செய்து வைத்தான். " மூனு மணி நேரத்துக்குள்ள முன்னூறு Call வரும் " . திடீரென்று கண்டக்டர் எழுந்து அவன் பக்கத்தில் வந்தார்.
" தம்பி , அப்பா lineல இருக்கார் . உன் மொபைல் ஆஃப் பண்ணிருக்காமே ? என் நம்பருக்குக் கூப்பிடுறார். இந்தா பேசு " .
" அடக் கடவுளே ! " தலை சுற்றியது அவனுக்கு.
******
அவன் ஸ்டாப்பிங்கில் இறங்கும் போதே மாமா தயாராக நின்று கொண்டிருந்தார்.
" நூறு கால் பண்ணிட்டாருடா உங்கப்பா .
இன்னும் உன்னைப் பச்சக் குழந்தையாவே நினைச்சுக்கிட்டு இருக்காரு . நாளைக்கு காம்பெடிஷன்ல ஜெயிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் " என்றபடி வண்டியில் ஏறினார் .
தஞ்சாவூர் வந்த காரியமே அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. அப்பா அடித்த கூத்தில் எல்லாமே மறந்து போயிருந்தது. கிறிஸ்டோபர் ஒரு சாக்பீஸ் சிற்பி . சிறு வயது முதலே அதை ஆர்வமாய்க் கற்றுக் கொண்டிருந்தான். தலைவர்கள் , மலர்கள் , மிருகங்கள் இப்படி எல்லாவற்றையுமே சாக்பீஸில் அழகாய் செதுக்கி விடுவான் . ஏராளமான பரிசுகளும் வாங்கிக் குவித்திருந்தான் .
அடுத்த நாள் தஞ்சாவூரில் மாநிலம் தழுவிய சிற்பப் போட்டி இருந்தது . அதற்காகத்தான் வந்திருக்கிறான். அவன் இது வரை உருவாக்கிய தலை சிறந்த படைப்புகளையும் கொண்டு வந்திருந்தான் . மாமா , அத்தை எல்லாரும் பார்த்து வியந்து பாராட்டினார்கள் . குட்டிப் பயல் ஜெபா கூட ,
" ஐ , சூப்பர் " என்றான் .
" அவன் கைல குடுத்திடாதடா . நொறுக்கி மாவு மாவா ஆக்கிடுவான் . பாத்து " என்றார் அத்தை .
********
போட்டி முடிந்து வெற்றியுடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தான் கிறிஸ்டோபர் . அவன் உருவாக்கிய
' அப்பாவும் மகனும் ' என்ற சிற்பத்துக்கு
முதல் பரிசு ரூ . 5000 கிடைத்தது. நாளை பத்திரிக்கைகளில் படம் கூட வரும்.
அதற்குள் அப்பா ஆயிரம் முறை அழைத்து விட்டார்.
" இருக்கட்டும் . ஊருக்குப் போன உடனே அம்மாவிடம் சொல்லி ஒரு வழி பண்ணனும் " .
அவன் வீடு வந்து சேரும்போது அப்பா வெளியே சென்றிருந்தார் . சந்தோஷமாய் வந்த அம்மாவிடம் , அப்பா செய்ததையெல்லாம் சொல்லிப் பொறுமித் தள்ளிவிட்டான். அம்மாவோ விழுந்து விழுந்து சிரித்தார் .
" என்னம்மா நான் இவ்ளோ சீரியசா சொல்றேன். நீங்க பாட்டுக்கு சிரிக்கிறீங்களே ? " என்றான்.
" அப்பா உன் மேல உயிரையே வச்சிருக்காங்கடா . உன்னை அனுப்பிட்டு நே்தது எவ்ளோ நேரம் ஜெபம் பண்ணாங்க தெரியுமா ? " . அம்மாவின் பதில் அவனை திருப்திப்
படுத்தவில்லை . அவனுடைய ஆதங்கம் அடங்காமல் புரண்டு கொண்டே இருந்தது . காசோலையை அம்மாவிடம் கொடுத்தான்.
அம்மா அவன் bagகிலிருந்த பழைய துணிகளை எடுத்துத் துவைக்கப் போட்டார் .
" டேய் , எங்கடா உன் statue box சைக் காணும் " என்றார் . ஒரு நொடியில் பொறி கலங்கிப் போனது கிறிஸ்டோபருக்கு .
" எங்கே போனது ? யாரைக் கேட்பது ? எத்தனை நாட்களாய்ப் பார்த்துப் பார்த்து செதுக்கிப் பாதுகாப்பாய் வைத்திருந்த சிற்பங்கள் ! " கிறிஸ்டோபர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. திடீரென்று அவனுக்கு நினைவு வந்தது .
" ஊர் திரும்பும்போது சிற்பங்கள் இருந்த பெட்டியை மாமா வீட்டில் இருந்த மேஜைமேல் வைத்தோமே " .
இப்போது வேறு கவலை வந்து விட்டது. அத்தை சொன்னது ஞாபகம் வந்தது ,
" அவன் கைல குடுத்திடாதடா . நொறுக்கி மாவு மாவா ஆக்கிடுவான் . பாத்து "
ஐயோ , ஜெபாப் பயல் கையில் கிடைத்திருந்தால் ? நினைக்கவே பயம் வந்தது . அழுகையை அடக்க முடியவில்லை. அம்மா அவன் அழுவதைப் பார்த்துப் பதறி விட்டார்.
" அழாதடா, கர்த்தர் அதை பத்திரமா உன் கையில் கொடுப்பார் . ஜெபம் பண்ணு "
என்றார்.
மாமாவுக்கு ரிங் போகிறது . ஆனால் கட் பண்ணி விடுகிறார். என்ன காரணமோ ? ஒரு வேளை ஜெபா எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கி விட்டானோ ? அதை சொல்ல விரும்பாமல்தான் கட் பண்றாரோ ? எவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கி பாதுகாத்து வச்ச சிற்பங்கள் ? எல்லாம் போச்சே . மனம் உடைந்து போய் அம்மா மடியில் முகம் புதைத்து அழுதான் .
சற்று நேரத்தில் அவனது மொபைல் ஒலித்தது . மாமாதான் .
" ஒரு அடக்க ஆராதனைல
இருந்தேன்டா . அதான் அட்டென்ட் பண்ண முடியலை . உன்னோட பொம்மையெல்லாம் இருந்த பாக்சை டேபிள் மேலயே வச்சிட்டுப் போயிட்ட போலருக்கு . அத்தை பாத்துட்டு எடுத்து பத்திரமா வச்சிருக்கா. நான் ரெண்டு நாள்ல அங்க வருவேன் . வரும்போது எடுத்துட்டு வரேன் . மொபைல அம்மாட்ட குடு " என்றார் . கொடுத்தான்.
கை கால்களில் இன்னும் நடுக்கம் நிற்கவில்லை .
" நன்றி ஏசப்பா " என்றான். கண்ணீரும் நிற்கவில்லை. அம்மா அதற்குள் பேசி முடித்திருந்தார்.
ஆதரவாக அவன் தலையைக் கோதி அம்மா சொன்னார் .
" ஏதோ சில நாள் , சில மணி நேரம் , கஷ்டப்பட்டு உருவாக்கின சிற்பத்துக்கே இவ்ளோ அக்கறை எடுத்துத் தவிச்சுப் போனியே , இத்தனை வருஷம் எத்தனையோ பாடுகள் பட்டு உன்னை வளத்து ஆளாக்கின அப்பாவுக்கு உன்மேல் எவ்வளவு அக்கறை இருக்கும். உடைஞ்சு போற சாதாரண பொருளுக்கே இத்தனை தவிச்சுப் போனியே , அவருடைய ரத்தமும் , சதையுமா இருக்குற உனக்காக அவர் தவிக்கிற தவிப்பு உனக்கு சங்கடமா இருக்குதா ? "
நெற்றிப் பொட்டில் அறைபட்டது
போன்ற உண்மையில் அவனது மனஸ்தாபமெல்லாம் நொறுங்கிப் போனது. அப்பாவை அணைத்துக் கொண்டு வெற்றிச் செய்தியைச் சொல்ல ஆயத்தமானான்.
சொல்ல முடியாத அளவுக்குப் பாடுகளை சகித்து நம்மை சொந்தமாக்கிக் கொண்ட தேவன் நம் மீது கொண்டிருக்கும் அன்பு எத்தனை பெரியதாக இருக்கும் ?
" கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள் "
எபேசியர் 5 : 2
APPAVIN ANBU TAMIL STORY
Reviewed by haru
on
October 25, 2016
Rating:
No comments