Ads Below The Title

ELIYUM NEI DABBAVUM TAMIL STORY

காட்டுக்கு சுற்றுலாப் பேருந்து ஒன்று வந்தது . பேருந்தில் இருந்தவர்கள் காட்டிலேயே சமையல் செய்து சாப்பிட்டார்கள் . போகும்போது ஒரு நெய் டின்னைத் தவறுதலாக விட்டு விட்டுச் சென்று விட்டார்கள். அதில் கொஞ்சம் நெய் இருந்தது.
நெய் வாசனையைக் கண்ட ஒரு எலி அந்த டின்னுக்குள் நுழைய வழி தேடியது . டின்னின் மேற்புறத்தின் துளையின் வழியாக உள்ளே நுழைந்து விட்டது. காட்டிலேயே வளர்ந்து , அங்கு கிடைத்த உணவு வகைகளையே கொறித்துப் பழகிய எலிக்கு , நெய்யின் சுவை ஆனந்தமாக இருந்தது . உறைந்து போய்க்கிடந்த நெய்க் கட்டிகளை மகிழ்ச்சியுடன் சுவைத்து சாப்பிட்டது .
வயிறாற சாப்பிட்ட மயக்கத்தில் அதற்குள்ளேயே உறங்கிவிட்டது. எலி உறக்கம் தெளிந்து வெளியே போக முயற்சிக்கும்போது டின் தடதடவென்று சத்தம் எழுப்பிச் சாய்ந்து விழுந்தது. பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த மான் ஒன்று சத்தம் கேட்டு பயந்து போனது. அதற்கு முன் அது இது போன்ற , மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களைப் பார்த்ததில்லை . எனவே அதற்கு பயம் வந்துவிட்டது . நடுக்கத்துடன் ,
" யாரு நீங்க ? உங்க தோற்றமே ரொம்ப வித்தியாசமா இருக்கு. உங்க சத்தமும் பயங்கரமா இருக்கு ? " என்றது.
" அற்ப ஜந்துவான என்னப் பாத்து கூட பயப்பட ஆளு இருக்குதா ? " . எலிக்குப் பெருமையாக இருந்தது.
" இதை விட்டுடக் கூடாது . அப்புடியே மெய்ன்டெய்ன் பண்ணிக்கணும் " என்று எண்ணியபடி ,
" நான்தான்டா கடமுடாகண்டன் . நட்சத்திரத்துலேர்ந்து கீழே விழுந்துட்டேன் . இனிமே இங்கேதான் இருக்கப் போறேன் " என்றது. தகரத்தில் அதன் குரல் பட்டு எதிரொலித்ததால் கொஞ்சம் பயங்கரமாகவே ஒலித்தது .
பயந்து போன மான் சொன்னது ,
" ஐயா , தயவு செஞ்சு என்னை ஒன்னும் பண்ணிடாதிங்க . நீங்க என்ன கேட்டாலும் தரேன் " என்றது.
ஏற்கனவே தன்னைப் பார்த்தும் ஒரு ஜீவன் பயந்து நடுங்குவதைக் கண்டு பெருமையாய் இருந்த எலிக்கு இப்போது புதிய யோசனையும் கிடைத்துவிட்டது.
" நீ போய் எனக்கு ஒரு தேக்கு இலை நிறைய மூங்கில் அரிசி கொண்டு வா. இல்லன்னா உன்னை முழுங்கிடுவேன் " என்றது.மான் ,
" இதோ கொண்டு வரேன் ஐயா . என்று ஓடிப்போனது " .
மான் போகிற போக்கில் கண்ணில் பட்ட மிருகங்களிடமெல்லாம் கடமுடா கண்டன் பற்றி பயமுறுத்திக் கொண்டே சென்றது. எல்லா மிருகங்களும் பயந்து நடுங்கின . எதையுமே நம்பாத நரி கூட இதைக் கேட்டு பயந்து போனது. ஏனென்றால் மனிதர்கள் இது போன்ற கைகாலில்லாத மிருகங்களைப் பல இடங்களில் வீசித் தன் சொந்த இனத்தாரையே அழிப்பார்கள் என்று அதன் தாத்தா சொல்லியிருந்தது. பெரியபெரிய கட்டடங்கள் மற்றும் மனிதர்களின் உடலெல்லாம் கூட சிதறிப் போய்விடுமாம் . நரிக்கு வேர்த்துப் போய்விட்டது.
சற்று நேரத்திலேயே எல்லா மிருகங்களும் ' கடமுடா கண்டனுக்கு ' முன்பாக மரியாதையாய் நின்றன . இந்த மரியாதை எலிக்கு சந்தோஷமாக இருந்தது. அன்று முதல் எலிக்கு ராஜ மரியாதைதான் . நன்றாய் சாப்பிடுவதும் , இரவில் டின்னை விட்டு வெளியே வந்து உலவுவதும் அதன் வாழ்க்கை முறையாகிவிட்டது. மிருகங்களை மிரட்ட அதில் டின்னுக்குள் குதித்தால் ஏற்படும் சத்தமே போதுமானதாக இருந்தது .
நாட்கள் ஓடின . எலி, காட்டு மிருகங்களை ஏமாற்றி சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தது. எந்த மிருகமும் கடமுடாகண்டனைப் பற்றி எதிராக எண்ணத் துணியவில்லை, ஒரு குட்டி நரியைத் தவிர . அதற்கு என்ன சந்தேகம் என்றால் கடமுடாகண்டன் ஒரு பயங்கரமான மிருகம் , எதையுமே அழிக்கக்கூடிய சக்தி அதற்கு இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அது சாப்பிடக் கேட்பதெல்லாம் சிறிதளவு பழமும் , தானியங்களும் , பருப்பு வகைகளுந்தான் .
இத்தனை பெரிய பலசாலி இவ்வளவு கேவலமான அளவிலா சாப்பிடுவான் ? அவன் கேட்கும் பொருட்களும் கூட ஏதோ சிறிய பிராணி உண்ணுகின்றவாகத்தான் இருக்கிறது . அது மட்டுமல்லாமல் , வைக்கப்படும் உணவை அவன் சாப்பிடுவதை இதுவரை யாருமே பார்த்ததில்லை . அவன் அந்த இடம் விட்டு அசைந்ததாகவும் ஞாபகமில்லை. எங்கோ தவறு நடப்பதைக் குட்டி நரி புரிந்து கொண்டது. அதை மற்ற மிருகங்களிடமும் சொன்னது.
எந்த மிருகமும் குட்டி நரி சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை . மாறாக அதைக் கடிந்து கொண்டன. குட்டி நரியின் பேச்சைக் கேட்டு ஏதாவது செய்யப் போய்க் கடைசியில் கடமுடாகண்டன் கோபத்தில் ஏதாவது செய்து விட்டால் ?
குட்டி நரி கடைசியாகச் சொன்னது ,
" ஒன்று செய்யலாம் , நீங்கள் தூத்தில் நின்று கொள்ளுங்கள் . நான் மட்டும் அவனோடு பேசுகிறேன். அவன் குட்டு வெளிப்பட்டதும் நீங்கள் என்னுடன் சேர்ந்து கொள்ளலாம் " என்றது. மிருகங்கள் அரை மனதுடன் சம்மதித்தன .
சற்று நேரத்திலேயே எல்லா மிருகங்களும் கடமுடாகண்டன் இருந்த இடத்துக்கு வந்து தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. குட்டி நரி மட்டும் அதற்கு அருகே சென்று ,
" கடமுடாகண்டரே , காடு முழுக்கத் தீ பரவிக் கொண்டிருக்கிறது. நாங்கள் எல்லோரும் உயிரைக் காத்துக் கொள்வி வேறிடத்துக்கு ஓடிக் கொண்டிருக்கிறோம். காட்டுத்தீயை அணைக்க உங்களால் மட்டுமே முடியும். அணைத்து முடித்த பின்பு உங்கள் இடி முழக்கம் போன்ற குரலால் ஒரு சப்தம் எழுப்புங்கள் . நாங்கள் எங்கிருந்தாலும் ஓடி வந்து உங்களுக்குத் தொண்டு செய்கிறோம் " என்று சொல்லிவிட்டு மற்ற மிருகங்களோடு ஒளிந்து கொண்டது.
"ஐயையோ , காட்டுத் தீயா ? " எலிக்குக் கைகால் உதறல் எடுத்தது. துளை வழியாக எட்டிப் பார்த்தது . டின்னுக்கெட்டிய தூரம் வரை எந்த மிருகமும் கண்ணில் படவில்லை .
" இனிமே , இந்த வேஷம் வேலைக்காதுடா சாமி . உசுரே
போயிடும் " என்று பதறியபடி டின்னை விட்டு வெளியே வந்தது.
டின்னுக்குள் இருந்து ஒரு எலி வெளிவருவதைப் பார்த்ததும் எல்லா மிருகங்களுக்கும் கோபம் தலைக்கேறியது.
" இத்தனை நாளும் கேவலம் உனக்கா பயந்து நடுங்கினோம் ? " என்று எண்ணியபடி எலிக்கு ஆளுக்கு ஆள் தர்ம அடி கொடுத்தன. எலி அலறியபடியே ஓடி மறைந்தது. அதற்குப் பிறகு அது அந்தக் காட்டுப் பக்கம் வரவேயில்லை.

நம்மை அச்சுறுத்தும் பிசாசு கூட இந்த எலி மாதிரிதான் . மிரட்டல் எல்லாம் பெரிதாக இருந்தாலும் மிகவும் எளிதாகத் தன் சில்லரைத் தனமான செயல்களால் சிக்கிக் கொள்ளுவான். அகிலத்தை வென்றவர் நம் அருகினில் இருக்கிறார் . அவருடைய வெளிச்சத்தில் அடையாளம் கண்டு , அடித்து விரட்டுவோம் சத்துருவை.
"ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்"
யாக்கோபு 4 : 7
ELIYUM NEI DABBAVUM TAMIL STORY ELIYUM NEI DABBAVUM TAMIL STORY Reviewed by haru on October 25, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]