Ads Below The Title

KING AND ARTIST TAMIL STORY

ஒரு ராஜாவுக்குத் தன்னை ஓவியமாய்ப் பார்க்க ஆசை வந்தது. எனவே நாட்டிலிருந்த ஓவியர்களையெல்லாம் வரவழைத்துத் தன்னுடைய விருப்பத்தைச் சொன்னார். அவர்களும் அரசரின் ஓவியத்தை வரைவதற்காக மகிழ்ச்சியோடும் , உற்சாகத்தோடும் வந்தார்கள்.
ஒரு கூடத்தில் திரைச்சீலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தற்காலிகமான தடுப்புகள் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தப் பட்டன. அரசர் , எல்லா ஓவியர்களும் தன்னைப் பார்த்துப் பார்த்து வரைவதற்கு வசதியாக நடுவில் ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
ஓவியர்கள் வரையத் துவங்கினார்கள்.
இரண்டு நாட்களுக்குள் அனைவரும் வரைந்து முடித்துவிட்டனர். ராஜா ஒவ்வொரு ஓவியமாகப் பார்வையிட்டார். ஆரம்பமே அவரைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
ஒரு ஓவியர் ராஜாவின் இயல்பான கருப்பு நிறத்தை மாற்றிப் பவழம் போன்ற சிவப்பு நிறமாக்கி அழகாய் வரைந்திருந்தார் . இன்னொருவர் சூரியன் , சந்திரன் , நட்சத்திரங்களெல்லாம் அரசரின் காலின் கீழ் அடங்கி இருப்பது போல் வரைந்திருந்தார். இன்னொரு ஓவியர் அரசருக்கு முன்னால் பல தேசத்து ராஜாக்களும் தங்கள் கிரீடங்களோடு முகம்குப்புற விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போல வரைந்திருந்தார் . மற்றொருவர் இன்னும் ஒரு படி மேலே போய் அரசர் ஒரு சிங்கத்தின் மேல் அமர்ந்திருப்பது போலவும் , அவருக்குப் பத்து விதமான ஆயுதங்களைப் பிடித்திருக்கும் பத்து கைகள் இருப்பது போலவும் , அவரது தலைக்குப் பின்னால் ஒரு பெரிய ஒளி வட்டம் சுழல்வது போலவும் வரைந்திருந்தார்.
மகிழ்ச்சியில் ராஜா திக்குமுக்காடிப் போனார். தலைகால் புரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அரசரை அதி மனிதராய்க் காண்பித்து இருந்தனர். அதே சந்தோஷத்தோடு , கடைசி ஓவியனின் ஓவியத்தையும் காண உள்ளே நுழைந்தார் . உள்ளே வரையப் பட்டிருந்த படத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார் . கோபத்தில் அவருடைய கைகள் நடுங்கிக் கண்கள் சிவந்தன .
ஆம். அங்கிருந்த ஓவியர் அவரை வரைந்திருந்த விதமே அதற்குக் காரணம் . அவர் வரைந்த படத்தில் ராஜாவின் கீரீடம் ஒரு பக்கம் நசுங்கிப் போய் அசிங்கமாகக் காட்சியளித்தது. அவர் கண்களில் ஒன்று , பார்வையற்றவர் போல மூடியிருந்தது. அருடைய செங்கோல் வளைந்து , தரையைப் பார்ப்பது போல் வரையப் பட்டு இருந்தது. மன்னர்களுக்கெல்லாம் மன்னர் என்றும் , பிரபஞ்சத்துக்கே அதிபதி என்றும் , கடவுளுக்கே நிகரானவர் என்றும் சகட்டுமேனிக்குப் புகழ்ந்து தள்ளிய ஓவியங்களையெல்லாம் பார்த்துவிட்டு இப்போது இப்படி ஒரு ஓவியத்தைப் பார்த்தில் அவரது ரத்தம் கொதித்தது.
" மதிகெட்டவனே, என்னை அவமானப் படுத்தும் எண்ணத்தோடு வந்தாயா ? என்ன படம் வரைந்திருக்கிறாய் ? " என்றபடி தமது உடைவாளில் கை வைத்தார் . நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட ஓவியர் பணிவாய் மன்னருக்கு முன் முழந்தாள்படியிட்டு சொன்னார் .
" மன்னா , நீங்கள் எனக்கு என்ன தண்டனை கொடுப்பதாக இருந்தாலும் அடியேன் ஏற்றுக் கொள்ளுகிறேன். ஆனாலும் நான் பேசி முடித்த பின்பு தங்கள் விருப்பப்படி செய்யலாம் " என்றார் . மன்னர் மெளனமாக இருக்க மேலும் தொடர்ந்தார் .
" இந்த நாளில் தாங்கள் பல தரப்பட்ட ஓவியர்களின் கைவண்ணத்தில் வரையப்பட்ட தங்களின் அருமையான ஓவியங்களைப் பார்த்திருப்பீர்கள் . பலரும், பலவிதங்களில் உங்களைப் புகழ்ந்தும் , பெருமைப் படுத்தியும் வரைந்திருப்பார்கள் . அதெல்லாம் நல்லதுதான் . ஆனாலும் மன்னா அவையெல்லாம் நூறு விழுக்காடு உண்மைதானா ? அவை உங்களின் உண்மையான நிலையை உணர்த்துபவைதானா ? " .
ஓவியர் எதையோ சொல்ல விரும்புவதை மன்னர் உணர்ந்து கொண்டு அவர் சொல்வதைக் கூர்ந்து கவனித்தார் .
" அரசே , நான் ஒரு நேர்மையான ஓவியன் . உள்ளதை உள்ளபடி சொல்வது என் கடமை . அதிலும் நான் உங்கள் ஆளுகையின் கீழ் குடியிருக்கும் உங்கள் குடிமகன். பொய்யான தோற்றத்தைக் காட்டி உங்களிடம் பரிசு பெறுவதைவிட , உண்மையை உணர்த்தி அதனால் தண்டனை கிடைத்தாலும் ஏற்றுக் கொள்வதில் எனக்கு மகிழ்ச்சிதான் ".
இப்போது அரசர் குறுக்கிட்டார் ,
" என் மணிமுடி சேதப்பட்டிருப்பது போல் வரைந்திருக்கிறாயே , இதனால் எனக்கு என்ன நன்மை செய்துவிட்டாய் ?"
ஓவியர் சொன்னார் ,
" அரசே , மணிமுடி என்பது உங்களின் அதிகாரத்தின் அடையாளமல்லவா ? அதற்குக் களங்கம் கற்பிக்கும்படி உங்கள் பிரதானிகள் சிலர் நடந்து வருகிறார்கள் . நீங்கள் மக்களுக்கு வழங்கும்படி அனுப்பும் பல நன்மைகளில் பாதிகூட மக்களைச் சென்று சேருவதில்லை. நீங்கள் கொடுக்கும் வேலை வாய்ப்புகள் தகுதியானவர்களுக்குப் போகாமல் , உயரதிகாரிகளின் உறவினர்களுக்கும் , பணம் கொடுக்கத் தயாராக உள்ளவர்களுக்கும் மட்டுமே போய்ச் சேருகின்றன. இப்படி வேலைக்குச் சேருபவர்களிடமிருந்து தரமான அரசுப் பணியை எப்படி எதிர்பார்க்க முடியும் ? தரமில்லாத அதிகாரிகளின் வழியாக நடக்கும் உங்கள் அதிகாரம் , அதன் அடையாளமாக அமைந்துள்ள மணிமுடி சிதிலமடையாமல் இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும் ? " .
அரசரும் இதுபற்றி அரசல்புரசலாகக் கேள்விப்பட்டிருந்தார் . இருந்தாலும் மக்களிடமிருந்து புகார் வரும்போது கவனித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தார் .
" அது இருக்கட்டும் . எனக்கு ஒரு கண் மூடப்பட்டிருப்பதாக வரைந்திருக்கிறாயே , நான் என்ன பார்வையற்றவனா ? " என்றார் .
ஓவியர் மீண்டும் தலைவணங்கிச் சொன்னார் ,
" மன்னாதி மன்னவா , கோபம் வேண்டாம் . கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த சில மோசமான குற்றங்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவே இல்லை. தங்கள் பிரியத்துக்குரிய மந்திரியாரின் மகனுடைய தலைமையில் அமைந்த ஒரு கூட்டந்தான் இதைச் செய்து வருகின்றனர் என்பது மக்களில் பலருக்குத் தெரியும் . தங்களுக்கும் அது நிச்சமாய்த் தெரிந்துதான் இருக்கும் . யார் குற்றம் செய்தாலும் ஞாயம் தீர்க்க வேண்டிய மஹாராஜா , குற்றவாளி யாரெனத் தெரிந்தும் தனது அன்பிற்குரியவர் என்பதால் கண்டும் காணாமல் இருக்கும்போது அதை இப்படித்தானே வரைந்து சுட்டிக் காட்ட முடியும் ? "
அரசர் பதில் பேசவில்லை . ஓவியர் தொடர்ந்தார் ,
" நேர்மையும் , திறமையும் அற்ற அரசு ஊழியர்களையும் , குற்றவாளியை அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காத அரசரையும் கொண்டுள்ள தேசத்தில் நல்லாட்சி எப்படி நடக்கும் ? அதன் செங்கோல் எப்படித் தலைநிமிர்ந்து நிற்கும் " .
அரசர் மெளனம் கலையவில்லை .
" அரசே! இந்த நாட்டின் மேல் அக்கறையுள்ள குடிமகனாய்த் தவறுகளை சுட்டிக்காட்ட ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். இது உண்மைதானா என்று தங்களது ஒற்றர்களை வைத்து உறுதி செய்து கொள்ளுங்கள் . எனக்கு அரசர் எதைச் செய்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் " என்றார்.
அரசர் அந்த ஓவியரைத் தமது விருந்தினர் மாளிகையில் தங்க வைத்து விட்டுத் தமது நம்பிக்கைக்குரிய ஒற்றர்களை அனுப்பி ஓவியர் சொன்ன காரியங்களின் உண்மைத் தன்மையை அறிந்து வரச் சொன்னார் . அவர்கள் திரும்ப வந்து சொன்ன விஷயங்கள் ஓவியர் சொன்ன காரியங்களைவிட அச்சுறுத்துபவையாக இருந்தன.
ஓவியருக்கு சிறப்பான வெகுமதி அளித்ததுடன் , அந்த ஓவியத்தைத் தாம் தினந்தோறும் பார்க்கும்படி ராஜா தன்னுடைய அறையில் வைத்துக் கொண்டார் . குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுத்து , மக்களுக்குப் பாதுகாப்பான உணர்வு வரச் செய்தார் . உண்மையைச் சொன்ன ஓவியரால் அந்த நாட்டுக்குப் பொற்காலம் உதித்தது.

நம்மைக் குறித்த விமர்சனங்களைக் கடந்து போகும்போது ஆத்திரப்படாமல் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்தால் நம்மால் இன்னும் நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும். வேதம் சொல்கிறதல்லவா ?,
" வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும் "
நீதிமொழிகள் 25
எனவே மனதில் வைத்துக்கொள் ,
" புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான் . "
நீதிமொழிகள் 10 :17
வசனத்துக்கு வளைந்து கொடு
வாழ்வெல்லாம் இன்பமாகும்.
" ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமானஉபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு "
2 தீமோத்தேயு 4
KING AND ARTIST TAMIL STORY KING AND ARTIST TAMIL STORY Reviewed by haru on October 25, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]