Ads Below The Title

KOLIYIN THAPPU KANAKKU TAMIL STORY

ஒரு வீட்டில் நிறைய கோழிகள் இருந்தன . தினமும் அவை அந்த வீட்டிலிருந்த பெரிய தோட்டத்தில் மேய்ந்து விட்டு, மாலை நேரத்தில் பாதுகாப்பாய் ஒரு பெரிய மூங்கில் கூண்டுக்குள் வந்து அடைந்து விடும்.
அந்தக் கோழிகளிலேயே கருப்பு என்ற கோழியை அங்குள்ள எல்லாக் கோழிகளுக்கும் பிடிக்கும். ஏனென்றால் அது எல்லாக் கோழிகளோடும் அன்பாகப் பழகும் . ஏதாவது ஒரு கோழிக்கு உடல் சுகமில்லையென்றால் அதனுடன் பரிவாகப் பேசி தைரியப் படுத்தும். அதற்கு வேண்டிய உணவுப் பொருட்களைத் தானே கொண்டு வந்து கொடுக்கும். தீவனம் இடப்படும்போது முதலில் பலவீனமான கோழிகளையும் , வயதில் மூத்த கோழிகளையும் சாப்பிட வைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் மற்ற கோழிகளை சாப்பிட அனுமதிக்கும்.
கருப்புக் கோழிக்கு இருந்த மரியாதையைக் கண்டு வெள்ளை என்ற கோழிக்கு எரிச்சலும் , பொறாமையுமாக இருந்தது. வெள்ளையும் ஏதாவது செய்து நல்ல பெயரெடுக்க முயற்சி செய்துதான் பார்த்தது. ஆனாலும் அதன் இயல்பான சிடுசிடுத்த குணமும் , எதற்கெடுத்தாலும் சண்டை வளர்க்கும் தன்மையும் , யாருக்குமே மரியாதை கொடுக்காமல் நடந்து கொள்ளும் விதமும் அதற்குக் கெட்ட பெயரையே ஏற்படுத்திக் கொடுத்தது.
தன்னால் கருப்புக் கோழிபோல் பணிவாக நடந்து நல்ல பெயர் எடுக்க முடியாது என்று வெள்ளை உறுதியாக நினைத்தது. அந்த எண்ணம் கருப்பின் மேல் பொறாமையாக மாறிவிட்டது. ஏதாவது சூழ்ச்சி செய்து கருப்பை ஒழித்து விடத்திட்டமிட்டது . அந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தது.
ஒரு நாள் மாலை வெள்ளைக் கோழி , பழிவாங்கும் எண்ணத்தோடு திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததில் கூட்டுக்குள் சென்று அடைந்து கொள்ள மறந்து விட்டது . எஜமானரும் இதை கவனியாமல் கூட்டை இழுத்துப் பூட்டி விட்டார். இரவு முழுவதும் தோட்டத்திலேயே நின்று கொண்டிருந்தது.
வேலிக்கு வெளியே யாரோ மூச்சு விடுகிற சத்தம் கேட்டது . அடர்த்தியாக வேயப்பட்டிருந்த வேலியில் இருந்த சிறிய இடைவளி வழியாய்ப் பார்த்து அது ஒரு நரி என்று தெரிந்து கொண்டது. அதன் மனதில் ஒரு திட்டம் உதித்தது.
" யாருப்பா அது, நரிதானே ?" என்றது.
நரி திடுக்கிட்டாலும் சுதாரித்துக் கொண்டு பதில் சொன்னது.
" ஆமாம் ஆமாம். தூக்கம் வரலை. அதான் இந்தப் பக்கம் வந்தேன். வெளிய வாயேன் . பேசிக்கிட்டு இருப்போம் " என்றது .
வெள்ளை சிரித்து விட்டது.
" உன்னப் பத்தி எல்லாம் எனக்குத் தெரியும். நான் சொல்றதைக் கேட்டா நாளைக்கு உனக்கு ஒரு கோழி கிடைக்கிற மாதிரி செய்வேன் " என்றது.
நரி ஆசையுடன் ,
" கோழி கிடைக்கிறதா இருந்தா எதை வேணாலும் செய்றேன் சொல்லு "
என்றது.
" நீ பெருசா ஒன்னும் செய்ய வேண்டாம் . நாளைக்கு இதே நேரம் இந்த இடத்துக்கு வந்துடு. நான் ஒரு கோழியை வேலிக்கு வெளியே அனுப்புவேன் . அதை லபக்குன்னு பிடிச்சிக்கிட்டு போயிடு " என்றது.
நரி கேட்டது,
" எனக்கு இது நல்ல சேதிதான். ஆனாலும் ஒரு சந்தேகம் . உங்க ஆளையே நீ எதுக்கு மாட்டி விடுறே ?"
என்றது. வெள்ளை சொன்னது ,
" எல்லாருக்கும் அவனைத்தான் பிடிக்குது. என்னை யாருமே மதிக்கிறதில்லை . அதனாலதான் ".
" என்னை விட பெரிய ஆளுதான் நீ. எப்படியோ , எனக்கு நல்ல விருந்து கிடைச்சா சரிதான் " என்றபடி நரி நகர்ந்தது . மறுநாள் என்ன சதி செய்து கருப்பை ஒழிக்கலாம் என்ற சிந்தனையில் இரவு ஓடிப்போனது. ஒரு நல்ல யோசனையும் உதயமானது.
காலையில் எல்லாக் கோழிகளும் திறந்துவிடப்பட்டன. மற்ற கோழிகளெல்லாம் உற்சாகமாக உள்ளிருந்து வெளியே ஓடி வருகையில் , வெள்ளை மட்டும் தடுமாறித் தடுமாறி உள்ளே போய் நின்றபடி உறங்க ஆரம்பித்தது. எந்தக் கோழியும் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. கருப்பு மட்டும் அதனருகில் ஓடி வந்தது.
" என்ன ஆச்சு உடம்புக்கு ? ஏன் சோர்வா இருக்கே ? ராத்திரி கூட நீ கூட்டுல அடைஞ்ச மாதிரி தெரியலையே ? " என்று கருப்பு கேட்டதும் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருந்தது வெள்ளைக் கோழிக்கு . பலவீனமாய் சொல்ல ஆரம்பித்தது ,
" என் தாய்க்கு இருந்த நெஞ்சு வலி எனக்கும் வந்துவிட்டது. நடக்கக்கூட முடியவில்லை. இதே மாதிரி இன்னும் ஒரு நாள் நான் உறங்கிக்கிட்டு இருந்தா எஜமான் என்னை அறுக்க சொல்லிடுவாரே . சரி விடு அது என் தலையெழுத்து . பாவம் உன் மனசையும் கஷ்டப் படுத்துறேன். நீ போய் உன் வேலையைப் பாரு " என்றது.
கருப்பு சொன்னது ,
" உன்னை இந்த நிலைல விட்டுட்டு நான் மட்டும் சந்தோஷமா இருக்க முடியுமா ? இப்படியெல்லாம் பேசாதே " . இந்த வார்த்தைக்காகவே காத்திருந்த வெள்ளை சொன்னது ,
" அதுக்காக உன்னை நான் பூனைக்காலி இலையைக் கொண்டு வரச் சொல்ல முடியுமா ? அது மட்டுந்தான் இதுக்கு ஒரே மருந்து. எங்கம்மா அதை சாப்பிட்டுதான் பிழைச்சாங்க . அது ராத்திரியில மட்டுந்தான் கண்ணுல படும் . நீல நிறத்துல வெளிச்சமா தெரியும் .நான் நேத்து ராத்திரி பூரா கொல்ல முழுக்கத் தேடிட்டேன். ஒரு இலை கூடக் கிடைக்கலை . ஆனா வேலிக்கு வெளியே அந்த இலையோட நீல வெளிச்சம் தெரியறதைப் பாத்தேன் . ஆனா இந்த உடல் நிலைல என்னால தாண்டிப் போக முடியலை . என்ன செய்ய ? இப்படியே கிடந்து முதலாளி கையாலயோ இல்லி நெஞ்சு வலியிலயோ சாக வேண்டியதுதான் " .
கருப்பு பதிலுக்கு ,
" இந்த மாதிரியெல்லாம் பேசாதே . உனக்கு ஒன்னுன்னா அது எனக்கு வந்த மாதிரிதான். நீ இன்னிக்கு ராத்திரி அந்த இலை இருக்கும் இடத்தை மாத்திரம் காட்டு. நானே கொண்டு வறேன் " என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது. சந்தோஷத்தில் இப்போதே எழுந்து திங்கு திங்கென்று குதிக்க வேண்டுமென்று தோன்றியது வெள்ளைக்கு. இருந்தாலும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு பலவீனமாகக் காட்டிக் கொண்டது.
இரவு வந்தது. திட்டப்படியே இரண்டும் கூட்டுக்குள் அடையாமலேயே வெளியே தங்கிவிட்டன. நரியோடு முதல்நாள் பேசிய இடத்துக்குக் கருப்பை அழைத்துச் சென்றது வெள்ளை. அந்த முள்வேலியைத் தாண்டி ஒரு மரச்சட்டத்தால் ஆன வேலி இருந்தது. முள்வேலியை அப்புறப்படுத்திவிட்டுப் பலகைகளால் தோட்டத்தை அடைப்பதற்கான வேலையைத் துவங்குவதற்காக அது ஏற்படுத்தப் பட்டிருந்தது. கருப்புக் கோழி முள்வேலியைத் தாண்டி , அந்த உயரமான சட்டத்தின் மேல் அமர்ந்து கொண்டு எங்கேயாவது நீலநிற ஒளி வீசும் செடி தென்படுகிறதா என்று நோட்டமிட்டது .
முள்வேலிக்கு அடியில் நின்று கொண்டிருந்த வெள்ளைக் கோழிக்குக் கருப்பு எங்கே உட்கார்ந்து இருக்கிறது என்பது தெரியவில்லை. கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்தது.
" ஒரு வேளை நரி வந்து சத்தம் போடாதபடி கருப்பின் குரல்வளையைப் பிடிச்சு இழுத்துட்டுப் போயிடுச்சா ? இல்ல ஒருவேளை நரி , நான் சொன்னத நம்பாம வரவே இல்லையா ? " நிசப்தம் வெள்ளையின் பொறுமையை சோதித்தது . முள்வேலியில் இருந்த முள்ளைக் கொஞ்சம் விலக்கி இடைவெளி ஏற்படுத்தி எட்டிப்பார்த்தது .
அப்போதும் ஒன்றுமே தெரியவில்லை.
இப்போது இன்னும் வலிமையை உபயோகப் படுத்தி முட்களை விலக்கி வெளியே எட்டிப் பார்த்தது. அது எதிர்பார்த்தபடியேதான் எல்லாமே நடந்து கொண்டிருந்தது. கருப்பு மரசட்டத்தின் மேல் நின்றபடி எங்கேணும் பூனைக்காலி இலை தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தது . சட்டத்துக்குக் கீழே நரி சத்தமில்லாமல் பாய ஆயத்தமாய் நின்று கொண்டிருந்தது .
ஒன்று , இரண்டு , மூன்று ... நரி ஒரே தாவாகத் தாவியது சட்டத்தின் மேல் உட்கார்ந்திருந்த கருப்பை நோக்கி . ஆனால் சட்டத்தின் உயரம் அதிகம் என்பதால் நரியால் அதை எட்டிப் பிடிக்க முடியவில்லை . அடுத்த வரிசையில் இருந்த சட்டத்தில் மோதிக் கீழே விழுந்தது. சத்தம் கேட்ட கருப்பு அடுத்த நொடியே முள்வேலிக்குத் தாவிக் , கொல்லைக்குள் ஓடிக் கூட்டின் கூரைமேல் உட்கார்ந்து கொண்டது.
வெள்ளைக் கோழிக்கு வந்தது கோபம்.
" முட்டாள் நரியே . உன்னுடைய அவசர புத்தியால என்னோட திட்டமும் பாழாப் போச்சு . உனக்குக் கிடைக்க வேண்டிய விருந்தும் போயிடிச்சு " என்றது.
நரி சிரித்தபடியே ,
" உன்னோட திட்டம் வீணாப் போனது என்னமோ உண்மைதான் . ஆனா எனக்குக் கிடைக்க வேண்டிய விருந்து கிடைச்சிடுச்சே " என்றபடி வெள்ளைக் கோழியின் குரல் வளையை இறுகப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடி மறைந்தது.

கர்த்தருடைய பிள்ளைக்கு எதிராய் துன்மார்க்கன் வைக்கும் கண்ணி அவன் கழுத்துக்கே சுருக்காக மாறிவிடும் .
" நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்: அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான் "
நீதிமொழிகள் 11 :8
KOLIYIN THAPPU KANAKKU TAMIL STORY KOLIYIN THAPPU KANAKKU TAMIL STORY Reviewed by haru on October 25, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]