Ads Below The Title

KAALATHAI PAYANPADUTHU TAMIL STORY

அப்பாவைப் பார்க்க வேண்டுமென்று நீலனுக்கு ரொம்ப ஆசையாக இருந்தது . அப்பா வயலுக்குப் போய் ஒரு வாரம் ஆகிவிட்டது. அவர் திரும்பி வர இன்னும் சில நாட்களாவது ஆகும் .
அப்பாவுக்கு அரண்மனையில் வேலை. ராஜாவுக்கு சொந்தமான வயலில் அறுவடை நடந்துகொண்டு இருந்தது. அப்பாதான் அதை மேற்பார்வையிட்டு , அங்கேயே கூடாரமிட்டுத் தங்கியிருந்து இரவு பகலாய் ஆட்களைக் கொண்டு அறுத்து, போரடித்து , மூட்டைகட்டிக் களஞ்சியத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.
வீட்டிலிருந்து வேகமாக நடந்தால் இரண்டு மூன்று மணி நேரங்களில் அப்பா இருக்கும் வயலை அடைந்து விடலாம். இருந்தாலும் அப்பா இது போன்ற சமயங்களில் வேலையை முடிக்காமல் வீட்டுக்கு வரமாட்டார்.
தான் அப்பாவைப் பார்க்கப் போக விரும்புவதை அம்மாவிடம் சொன்னான் நீலன் . அம்மாவும் ,
" காலைல பொழுது விடிஞ்சதும் சாப்பிட்டுக் கிளம்பிடு . வழியில பசி எடுத்தா சாப்பிட அடையும் சுட்டுத்தரேன்.
அப்பா காட்டுல சரியா சாப்பிடாம , கிடைச்சதை சாப்பிட்டுக்கிட்டு இருப்பாங்க. நான் சூடா அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச தேங்காப்பால் பாயசம் செஞ்சுதரேன் . அப்பாகிட்ட குடுத்திடு " என்றார்.
நீலன் அம்மா சொன்னபடியே விடிகாலையிலேயே எழுந்து உணவருந்தி , அம்மா கொடுத்தவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
" இப்ப மணி ஆறு. வேகமா நடையைப் போட்டா ஒன்பது மணிக்குள்ள போய் சேந்துடலாம் " என்று கணக்குப் போட்டபடி வேகமாக நடைபோட்டான்.
போகும்போதுதான் தெரிந்தது அன்று மாத சந்தை . விதவிதமான பொருட்கள் , திண்பண்டங்கள் என்று சந்தை கோலாகமாகக் காட்சியளித்தது . ஆவென்று வாய்பிளந்தபடி வேடிக்கை பார்த்தான். அரை மணி நேரம் கழித்து சுயவுணர்வடைந்தான். மீண்டும் வேகமாக நடந்தான்.
கொஞ்ச தூரம் போனதும் ஒரு கூட்டத்தைப் பார்த்தான். அங்கே ஒரு குரங்காட்டி , குரங்கை வைத்து வித்தை காட்டிக் கொண்டு இருந்தார். குரங்குக்கு அவர் அழகாய் ஆடை அணிவித்திருந்த விதமே சிரிப்பை வரவழைப்பதாக இருந்தது.
குரங்காட்டி குரங்கிடம் ,
" உன் அத்தை மகளைப் பாத்தா என்ன பண்ணுவே " என்றார் . குரங்கு கண்ணடித்துக் காட்டியது. கூட்டம் சிரித்தது .
" உன் மாமியார் தண்ணி கேக்குறா. கொண்டு வா " என்றார். குரங்கு குடத்தை எடுத்துக் கொண்டு நடந்தது .
" சரி. உன் மாமியார் ஒனக்கு பொண்ணு குடுக்கலைன்னா என்ன பண்ணுவ ?"
என்றார் . இப்போது குரங்கு , குரங்காட்டியின் காலில் விழுந்து வணங்கி , அவரைப் பார்த்துப் பல்லை இளித்தது. கூட்டமே வயிறு வலிக்க சிரித்தபடி காசு போட்டது. நீலன் ,
" ஐயய்யோ, நேரம் போகுதே " என்றபடி அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்.
கிளம்பி ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகியிருந்தும் கொஞ்ச தூரத்தைத் தான் கடந்திருந்தான். அன்று ஊர்க் கண்மாயில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். பொதுவாகவே, மீன் பிடிப்பதை வேடிக்கை பார்ப்பது நீலனுக்கு மிகவும் பிரியம். மீனவர்கள் வலையை இழுக்கும்போது துடித்த விதவிதமான மீன்களைப் பார்க்கவே உற்சாகமாக இருந்தது . கரைக்கு வந்தும் சில பெரிய மீன்கள் நெளிந்தபடி தண்ணீருக்கு ஓட முயன்றன.
" எங்க ஓடுற ? " என்றபடி மீனவர்கள் அவற்றைப் பிடித்துக் கூடையில் போட்டுக் கொள்வதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது.
வயிறு பசித்தது . அம்மா கொடுத்த அடையைப் பிரித்து சாப்பிடத் தொடங்கும்போதுதான் நேரம் ஓடியது தெரிந்தது . மதியம் ஆகிவிட்டது. வேகமாய் ஓடினான். இன்னும் பாதிதூரம்
இருந்தது. இனிமேல் எங்குமே நிற்கக்கூடாது என்று முடிவெடுத்து ஓடினான்.
வயலை அடைய இன்னும் சிறிது நேரமே இருந்தது. மூச்சு வாங்க ஒரு இடத்தில் நின்றான். அவன் நின்ற இடத்துக்கு அருகில் ஒரு வீட்டு வாசலில் ஒரே கூட்டம் . என்னவென்று எட்டிப் பார்த்து , கூட்டத்தில் இருந்த ஒரு பையனிடம் விசாரித்தான் . அந்தப் பையன் ,
" அங்க பாரு " என்று அந்த வீட்டின் வாசல் படியை சுட்டிக் காட்டினான். அதைப் பார்த்து நீலன் அதிர்ச்சியில் அலறிவிட்டான்.
அங்கே இருந்த ஒரு துளையில் தடிமனான ஒரு பாம்பின் வால் பகுதி அசைந்து கொண்டிருந்தது . அப்போது அவனுக்குப் புரிந்தது. பாம்பு அந்த பொந்துக்குள் நுழைய முயன்றிருக்கிறது. அதன் ஆழம் போதாததால் முழுவதும் உள்ளே போக முடியவில்லை. ஆளாளுக்கு ஒரு ஆலோசனை சொன்னார்கள். கேட்கவே சுவாரஸ்யமாக இருந்தது. அதற்குள் பாம்புப் பிடாரன் வந்து விட்டார்.
குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் வகையில் அனைவரும் அமைதியாகி அவர் செய்வதை உன்னிப்பாய் கவனிக்கத் தொடங்கினார்கள். பிடாரன் பொந்துக்கு அருகே உட்கார்ந்தார். பாம்பின் வாலைப் பிடித்துக் கயிறு போலக் கொஞ்சம் கொஞ்சமாய்க் ஒரு கையில் சுற்றிக் கொண்டே வந்தார். இன்னொரு கையில் மொத்தமான கோல் ஒன்று வைத்திருந்தார்.
கிட்டத்தட்ட ஐந்தடி தூரம் மெதுவாக இழுத்தபின் பாம்பின் தலை சீறிக் கொண்டு வெளிவந்தது. கூட்டமே பயந்து அலறிப் பின் வாங்கியது. பிடாரன் லாவகமாகக் கோலால் அதன் தலையை அழுத்திக் கொண்டே அதைக் கையில் பிடித்துக் கொண்டார். அப்பாடி. பெரிய பாம்பு.
பாம்பைக் கையில் பிடித்தபடி பிடாரன் கேட்டார் ,
" யாராச்சும் இவனுக்கு முத்தம் குடுக்க விரும்புறிங்களா ? இல்லன்னாலும் பரவாயில்ல. இவங்கிட்ட முத்தம் வாங்கிக்கிறீங்களா ? " கேட்டதுடன் நில்லாமல் அவர்கள் மேல் பாம்பைத் தூக்கி வீசுவதுபோல் பாவனை செய்தார். அவ்வளவுதான் பாதிப்பேரைக் காணவில்லை.
பிடாரன் பாம்பைத் , தான் கொண்டு வந்த பையில் கட்டி எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார். கூட்டத்தினர் ஆளாளுக்குத் தங்கள் வீட்டுக்குப் பாம்பு வந்த அனுபவத்தை சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டு நின்றார்கள். வாயைப் பிறந்து கொண்டு நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தான் நீலன் .
நீலன் மீண்டும் உணர்வடையும்போது வெயில் தாழ்ந்து கொண்டிருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடினான். கொஞ்ச நேரத்தில் வயலுக்கு வந்து அப்பாவைப் பார்த்துவிட்டான்.
" அப்பா " என்று ஓடிப்போய் அணைத்துக் கொண்டான் . அப்பாவுக்கும் அவனைப் பார்த்ததில் மிகுந்த சந்தோவும். அவரும் அவனை அரவணைத்து முத்தமிட்டார். வீட்டாரை நலம் விசாரித்தார்.
" இதென்னடா பை? " என்று அப்பா கேட்டபோதுதான் அவனுக்கு நினைவு வந்தது.
" உங்களுக்குப் பிடிச்ச தேங்காப்பால் பாயசம்ப்பா " என்று வாளியை அவர் கையில் கொடுத்தான்.
" அடடா, சாப்பிட்டு எத்தனை நாளாச்சு ?" ஆர்வமாய் மூடியைத் திறந்த அவரது முகம் அருவெறுத்து சுருங்கியது.
" என்னடா இது ? " அவன் கையில் வாளியைக் கொடுத்தார் . வயிற்றை குமட்டும் நாற்றத்தில் நீலனும் அதிர்ந்தான்.
பாயசம் ஊசிப்போய் நாற்றமெடுத்திருந்தது. அப்பா முகத்தில் ஏமாற்றத்தின் வேதனை. நீலன் அழுதுவிட்டான்.
" அப்பா , தப்பு எம்மேலதாம்ப்பா . நாந்தாம்ப்பா அங்கயும் இங்கயும் வேடிக்கை பாத்து நேரத்தை வீணடிச்சிட்டேன் . கிளம்பின வேகத்திலயே வந்திருந்தா உங்களுக்கு அருமையான பாயசம் கிடைச்சிருக்குமேப்பா " என்று கதறினான்.
அப்பா சொன்னார் ,
" அப்பாவுக்கு சூடான பாயசம் கொடுக்கணும்ங்கற உணர்வு உனக்கு இருந்திருந்தா இப்படி நேரத்தை வீணான விஷயங்கள்ல தள்ளிப்போட்டு பாயசத்தையும் வீணாக்கி நீயும் உன்னை நீயே நொந்துகிட்டு புலம்புற நிலைமை வந்திருக்காது ".

உலகம் முழுக்க வேடிக்கைக்கும் , கேளிக்கைக்கும் என்றுமே குறைவில்லை. ஒவ்வொன்றிலும் மனதைப் பறிகொடுத்து உறைந்து போய் நின்று காலம் தாழ்த்தினால் ,வயதும் போய் , அவயங்கள் பழுதுபட்டு எதற்குமே உபயோகமற்றுப் போக நேரிடும். கர்த்தருக்கு உன்னைக் கொடுக்க விரும்பினால் நல்ல நிலையில் இருக்கும்போதே , காலத்தை வீணடிக்காமல் கொடுத்துவிடு. ஊசிப்போன பாயசம் ஒன்றுக்கும் உதவாது.
" உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் "
2 கொரிந்தியர் 9 :7
KAALATHAI PAYANPADUTHU TAMIL STORY KAALATHAI PAYANPADUTHU TAMIL STORY Reviewed by haru on October 26, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]