Ads Below The Title

MUYALIN AASAI TAMIL STORY

யானைகளைப் பார்க்கும் போதெல்லாம் தனி உற்சாகம் வந்துவிடுகிறது முயல் மிக்குவுக்கு. வழக்கம் போல இந்த முறையும் தன்னைக் கடந்து சென்ற யானைக் கூட்டத்தை வைத்த கண் வாங்காமல் அவை போய் மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தது.
யானைகளின் கம்பீரமும் , பாதையில் தடங்கலாக நிற்கிற எதையும் முறித்து எறிந்துவிட்டு முன்னேறும் வலிமையும் , எவ்வளவு பயங்கரமான மிருகம் எதிர்ப்பட்டாலும் தயங்காமல் தூக்கி வீசும் தைரியமும் சிறு வயது முதலாகவே முயலுக்குப் பிடிக்கும்.
இப்போதெல்லாம் மிக்குவுக்கு இந்த ஏக்கம் அதிகமாகி விட்டது . இன்று காலையில் கூட அது தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து சுவையான புற்களை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு நரி வந்துவிட்டது . அவ்வளவுதான் கேவலமாய் அரக்கப் பரக்க ஓடி ஆளுக்கொரு புதரைத் தேடி ஒளிந்துகொண்டன . உயிர் போய் உயிர் வந்தது.
இதையெல்லாம் நினைக்கும்போது அதற்கு இன்னும் அவமானமும் , வேதனையும் அதிகரித்தது. " ம்ம். நான் மட்டும் ஒரு யானையா பிறந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் ? " . இந்த ஏக்கம் அதற்கு நாளுக்கு நாள் அதிகரித்தது. இப்போதெல்லாம் அதற்குத் தன்னுடைய கூட்டத்தைப் பார்த்தாலே வெறுப்பு வந்து விட்டது.
ஒரு நாள் அது திட்டவட்டமான ஒரு முடிவெடுத்தது. அதைத் தன் கூட்டத்தாரிடமும் சொன்னது .
" என் ஜனமே , எனக்கு உங்களோடு சேர்ந்து வாழ விருப்பமில்லை. ஒரு சின்ன சலசலப்பைக் கேட்டாலும் , சாதாரணமான நரியைப் பார்த்தாலும் கூட ஓடி ஒளியும் உங்களோடு வாழ எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது. இந்தக் காட்டிலேயே பலசாலியான யானைகளின் கூட்டத்தில் போய்ச் சேர்ந்து கொள்ளப் போகிறேன். அதற்குப் பிறகு எனக்குக் கிடைக்கப் போகும் மரியாதையே தனிதான். நீங்கள் மட்டுமல்ல, இந்தக் காடே என்னைக் கண்டு பயந்து வழிவிடும் " என்றது.
அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை மற்ற முயல்களுக்கு .
வயதான ஒரு முயல் சொன்னது ,
" மிக்கு , கடவுள் நம்மை நன்றாகத்தான் படைத்திருக்கிறார். காடு எப்போதுமே ஆபத்து நிறைந்ததுதான் . ஆனாலும் கடவுள் நமக்குக் கொடுத்திக்கிற அபரிமிதமான வேகமும் , ஆபத்தில் பதுங்கிக் கொள்ள நமக்குக் கிடைத்திருக்கிற ஏராளமான புதர்களும் , வளைகளும் நம்மைப் பாதுகாப்பதற்காகவே உண்டாக்கப் பட்டவை அல்லவா ? யானைகளின் பழக்க வழக்கங்களும் நம்முடைய வாழ்க்கை முறையும் எதிலுமே ஒத்துப் போகாதே. வெறும் பராக்கிரமத்தை மட்டுமே பார்த்து ஒரு கூட்டத்தோடு இணைந்து கொள்வது முட்டாள்தனம் அல்லவா ? " என்றது.
மிக்கு சுருக்கமாக பதிலளித்தது.
" உங்களில் ஒருவன் உங்களை விடப் பெரியவனாவது உங்களுக்குப் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும் " என்று சொல்லி நடையைக் கட்டியது. வயதான முயல் சொன்னது,
" விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்: பேதைகளோ நெடுகப்போய்த்
தண்டிக்கப்படுகிறார்கள் .ஹ்ம்ம்ம். வேதம் நீதிமொழிகள் 27 :12 டில் தெளிவாகத்தான் சொல்கிறது . அதற்குக் கீழ்ப்படியாதவனை என்ன செய்ய ? " . முயல்களெல்லாம் திரும்பிப் போயின.
மிக்கு உற்சாகமாய் யானைளைத் தேடிப்புறப்பட்டது .
மிக்கு ஒரு அழகான பூவைப் பறித்துக் கொண்டு காடெல்லாம் சுற்றி வந்தது. மதியத்திற்குள் யானைக் கூட்டத்தைக் கண்டுபிடித்து விட்டது. உற்சாகத்தோடு யானைகளின் தலைவனிடம் ஓடிப்போய்த் தன் கையில் இருந்த பூவைக் கொடுத்தது.
" தலைவா , வலிமையற்ற பயந்தாங்கொள்ளிகளின் கூட்டத்தில் வாழ்ந்து வெறுத்துப் போனேன். கொஞ்ச காலம் வாழ்ந்தாலும் உங்களை மாதிரி பலசாலிகள் கூட்டத்தில் வாழவேண்டும் என்ற கனவுடன் வந்திருக்கிறேன். என்னையும் உங்கள் கூட்டத்தில் சேர்ந்து வாழ அனுமதிப்பீர்களா ? " என்றது .
யானைகளின் தலைவனுக்குப் பெருமை தாளவில்லை. முயலின் அழகும், முகஸ்துதியான வார்த்தைகளும் அதற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தன. தும்பிக்கையினால் அதைத் தூக்கி எடுத்துத் தன் கூட்டத்தாரிடம் சொன்னது.
" எல்லாரும் பார்த்துக் கொள்ளுங்கள் , இவன் இனி நம்மில் ஒருவன். இனி எப்போதும் நம்முடைய கூட்டத்துடனேயே இருப்பான் ".
மற்ற யானைகளெல்லாம் சத்தமாய் பிளிறி உற்சாகத்தைத் தெரிவித்தன. விரும்பி வந்த காரியம் இவ்வளவு எளிதாய் முடிந்ததில் முயலுக்கு ஒரே சந்தோஷம்.
யானைக் கூட்டம் புறப்பட்டது. முயலும் அவற்றுடன் சேர்ந்து ஓடியது. உற்சாமாய்த் துள்ளித் துள்ளி ஓடும் முயலைப் பார்த்து யானைகளுக்கும் வேகம் வந்துவிட்டது. அவைகளும் போட்டி போட்டுக் கொண்டு ஓடத்துவங்கின. ஒன்றை ஒன்று மிஞ்சும்படி கண்மண் தெரியாமல் ஓடியதில் முயல் ஒரு யானையின் காலில் மிதிபட்டது. அடுத்து வேகமாய் வந்த யானையின் பாதத்தின் கீழ் அது கூழானது. முயலின் ஆகாத ஆசை அதன் உயிரையே வாங்கிவிட்டது.

பராக்கிரமத்தையும் , வசதி வாய்ப்புகளையும் கொண்டிருப்பதை மாத்திரமே தகுதிகளாக எண்ணி உறவுமுறைகளை ஏற்படுத்தினால் மிக்குவை விட மோசமான நிலை கூட ஏற்படலாம்.நீதிமொழிகள் 10 :17 சொல்வது போல
" கண்டனையை வெறுக்கிறவனோ மோசம்போகிறான் " என்பது எத்தனை உண்மை ?
"மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்".
MUYALIN AASAI TAMIL STORY MUYALIN AASAI TAMIL STORY Reviewed by haru on October 26, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]