MATRAVARUDAN POTTI PODATHE TAMILSTORY

Ads Below The Title
புகழ் பெற்ற உணவகம் ஒன்று இருந்தது. அது தோசைக்குப் புகழ் பெற்றது. அங்கே கிடைக்கும் தோசையையும் , சாம்பாரையும் ஒரு முறை ருசித்தவர்கள் மீண்டும் மீண்டும் வந்துவிடுவார்கள். அதனால் எப்போதும் அங்கே நல்ல கூட்டம் இருக்கும் .
அந்த உணவகத்தில் அதிகமாய்ப் பயன்படுத்தப்படும் இரண்டு உபகரணங்கள் இருந்தன . ஒன்று தோசைக் கரண்டி இன்னொன்று சாம்பார் கரண்டி . இரண்டுக்குமே எப்போதும் ஆகாது . ஒன்றின் மேல் ஒன்று எப்போதும் பொறாமைப்படும் . பார்க்கும் போதெல்லாம் வாக்குவாதம் செய்து கொள்ளும் .
தோசைக் கரண்டியுடைய ஆதங்கம், தான் மட்டும் இருக்கிற இடத்திலேயே கிடப்பதும் , சாம்பார்க் கரண்டி மட்டும் சந்தோஷமாய் வெளியில் சுற்றி வருவதும்தான். சாம்பார்க் கரண்டிக்கோ , தோசைக் கரண்டி சும்மா இரண்டு திருப்பு திருப்பி விட்டு ஹாயாக ஓய்வெடுத்துக் கொள்ளும்போது தான் மட்டும் வெளியே சென்று ஒவ்வொரு தடவையும் வாளிக்குள் முங்கி முங்கி உழைக்க வேண்டி இருக்கிறதே என்ற ஆதங்கம் .
தோசைக் கரண்டி நினைத்தது ,
" இத்தனை உறுதியாக வடிவமைக்கப் பட்ட என்னால் அந்த சாம்பார்க் கரண்டி போல வேலை செய்ய முடியாதா
என்ன ? " .
சாம்பார்க் கரண்டியோ ,
" இவ்வளவு வாகான கைப்பிடியுடன் உருவாக்கப்பட்ட என்னால் அந்த ஒல்லிக் கைப்பிடிக்காரன் மாதிரி செயல் பட முடியாதா ? " என்று நினைத்தது .
ஒரு நாள் இந்தப் பஞ்சாயத்தை சமையல்காரரிடமே கொட்டித்தீர்த்து விட்டன . அவருக்கு சிரிப்பு வந்து விட்டது. அவர் சொன்னார் ,
" சரி , நீங்கள் செய்யும் வேலையை ஒரு பதினைந்து நிமிடம் மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள் . பிறகு நீங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் " என்றார். இரண்டுக்குமே அவர் சொன்னது சரியென்று பட்டது . ஒப்புக் கொண்டன.
தோசைக்கல்லின் மேல் ஓய்வெடுப்பது சாம்பார்க் கரண்டிக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. தோசைக் கரண்டிக்கும் , சாம்பார் வாளிக்குள் இருந்தபடி வெளியில் வந்து வாடிக்கையாளர்களைப் பார்ப்பது ஆனந்தமாக இருந்தது. நெடுநாள் கனவு நிறைவேறுவதில் இரண்டுமே சந்தோஷப்பட்டன .
சமையற்காரர் ஒரு தோசையை ஊற்றிவிட்டு சாம்பார்க் கரண்டியிடம் சொன்னார் ,
" இதை அப்படியே திருப்பிப் போடு " .
அதற்காகவே காத்திருந்த சாம்பார்க் கரண்டி ,
" இதோ செய்றேன் " என்று செயலில் இறங்கியது .
அது எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை . கல்லில் இருந்த தோசை துண்டு துண்டானதுதான் மிச்சம் . இப்போது தோசை கருகவும் ஆரம்பித்து விட்டது. சமையற்காரர் கேட்டார் ,
" என்ன , முடிஞ்சுதா ?" .
சாம்பார்க் கரண்டிக்கு அழுகை அழுகையாக வந்தது. இது வரை, அவர் சொன்ன அடுத்த நொடியிலேயே எத்தனை பேருக்கு சாம்பார் ஊற்றியிருக்கும் ? இப்போது ஒரு தோசையைக் கூடத் திருப்பிப் போட முடியவில்லை. அவமானத்தால் குறுகிப் போனது .
ஆர்வமாய் வெளியே சென்ற தோசைக் கரண்டியிடம் பறிமாறுபவர் சொன்னார் ,
" கொஞ்சம் சாம்பார் அள்ளி ஊற்று ".
" கொஞ்சம் என்ன ? நிறையவே ஊத்திட்டா போச்சு ". சொல்லியபடியே அள்ளி அள்ளிப் பார்த்தது. அதன் தட்டையான முன்புற அமைப்பால் கொஞ்சம் கூட அள்ள முடியவில்லை. வெறும் கரண்டியாகத்தான் வெளியில் வந்தது. பறிமாறுபரை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் அதற்கில்லை. வாளிக்குள் முகம் புதைத்துக் கொண்டது.
சமையற்காரர் சொன்னார் ,
" கரண்டிகளே, நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்யும்படிதான் வடிவமைக்கப் பட்டிருக்கிறீர்கள். இதில் எதுவும் தாழ்ந்த வேலையல்ல. சாம்பார்க் கரண்டி வேலை செய்யவில்லையென்றால் தோசைக்கரண்டியின் படைப்புக்கு மதிப்பில்லை. தோசைக் கரண்டி வேலை செய்யவில்லையென்றால் சாம்பார்க் கரண்டிக்கு வேலையே இல்லை. இனியாவது மற்றவரோடு ஒப்பிட்டு உங்கள் மதிப்பைக் குறைத்துக் கொள்ளாதிருங்கள் " .

மற்றவரோடு நம்மை ஒப்பிட்டுக் கொண்டிருக்கும்வரை நமக்குக் கர்த்தர் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்கள் கண்ணில் படவே செய்யாது அல்லவா ?

" மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? " .
ரோமர் 9 : 21
MATRAVARUDAN POTTI PODATHE TAMILSTORY MATRAVARUDAN POTTI PODATHE TAMILSTORY Reviewed by haru on October 26, 2016 Rating: 5

No comments